சிங்கப்பூரில் சிலகாலம்!…. 22 …. (உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்.

யோகமலரின் தோளில் சாய்ந்து படுப்பதும், பிறகு கண்ணைக் கசக்கிக் கொண்டு படம் பார்ப்பதுமாக இருந்து என்னிடம்’இரவு வேலைக்கு போகதீங்க என்று சொன்னேங்க கேட்டீங்களா, பரவாயில்ல நேற்றோட பிரச்சினை முடிஞ்சிடுங்க, இப்பத்தான் மனம் ஆறதலா இருக்குங்க „ என்று யோகமலர் சொன்னதைக் கேட்ட சுண்ணாகம் வம்சாவழிப் பெண், „இவரை விரும்பினா மண்டேலிருந்து வேலைக்கு வரலாம்னு லீடர் மகேந்திரன் கேட்டாருங்க…’ என்று சொல்லி முடிக்குமுன் „அதெல்லாம் முடியாதுங்க அவரு வர மாட்டாரு’ என்று யோகமலர் வேகமாகச் சொன்னாள்.
நான் யோகமலரின் தோளில் தலையைச் சாய்த்து படுப்பதும் எடுப்பதுமாக இருந்ததை மச்சாளின் மகள் கடைக்கண்ணால் கவனிப்பதை யோகமலர் „அவங்க நம்ம கவனிச்சிட்டே இருக்காங்க’ என்றாள்.’பார்த்தால் பார்க்கட்டும் எல்லாத்துக்கும் பயந்து கொண்டிருக்க முடியாது.பெண்டாட்டியின்ரை தோளில புருசன் தலைசாய்க்கிறது என்னோட விருப்பம்’ என்று சொல்ல „அதானே’ என்றாள் அவள்.
இடைவேளைவிட நான், யோகமலர்,மச்சாளின் மகள்,யோகமலரின் தோழியும் என எல்லாரும் கீழே போய் ஏதாவது குடிப்போம் என்ற எண்ணத்தில் எழுந்தோம்.
எங்கள்கூட சுண்ணாக வம்சாவழிப் பெண்ணும் அவளின் தோழியும் எழுந்தனர்.அப்பொழுது நாங்கள் இருந்த இருக்கை நிரைகளுக்கு கீழே ஐந்தாவது நிரைக் கதிரைகளிலிருந்து எழுந்த மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு இளைஞனும் தற்செயலாக திரும்பிய போது, அந்த இளைஞனைக் கண்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க அவன் கையைக் காட்டினான்.
அந்த இளைஞனை எனக்குத் தெரியும்.காங்கேசன்துறையைச் சேர்ந்தவன்.காங்கேசன்துறை இராஜநாயகித் தியேட்டருக்கு அருகில்தான் அவனுடைய வீடு.
நானும் மனைவியும் அந்தத் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போகிற நாட்களில் அறிமுகமானவன்தான் அந்த இளைஞன்.அவனுடன் எழுந்த நின்ற பெண்பிள்ளைகளில் ஒருத்தியின் முகத்தைப் பார்த்த போது இந்தப் பிள்ளையை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என நினைவு நிழலாட,ஒரு நாள் கடிதம் குடுக்கவென ஓசிபசி பில்டிங்குக்கு போன போது இவர்தான் அந்த ஆள் என்று சொல்லி கதவைச் சாத்தி அந்தச் சத்தம் நான் லிப்டில் ஏறப் போகும் போது கேட்டது ஞாபகம் வந்தது.அந்தப் பிள்ளைதான் இவள் என நினைத்துக் கொண்டன்.
அந்த இளைஞன் கைகாட்ட நானும் கைகாட்டியதைக் கண்ட யோகமலர் „ யாரு அந்தப் போய் உங்களுக்குத் தெரிஞ்சவங்களா’ என்று கேட்க„ஊரில பார்த்த போய்தான்’ என பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே „இத வைச்சிருங்க நான் வாஸ்றூம்; போயிட்டு வந்ததற்கப்புறமா நீங்க போங்க’ என்றவள் தனது கைப்பையைத் தந்தாள்.அவளின் தோழி என்னிடம் தனது கைப்பையை என்னிடம் தரலாமா வேண்டாமா என்று என்னைப் பார்த்தவள்,ஏதோ முடிவெடுத்தவள் போல தானே கைப்பையுடன் யோகமலருடன் போய்க் கொண்டிருந்தாள்.
அவர்கள் போனதும்’ என்ன சித்தப்பா தலையணி போட்டுப் படுத்த மாதிரி நித்திரை கொண்டது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது, இது எங்கை போய் முடியப் போகுதோ தெரியாது’ என்று எனக்குக் கிட்ட வந்து நக்கலாகவும் கொஞ்சம் கோபமாகவும் சொல்லிய மச்சாளின் மகள்’இந்தாங்க இதையும் பிடியுங்கள்’ என்று தன்னுடைய
கைப்பையைத்தர அதையும் வாங்கி வைச்சுக் கொண்டிருந்தன்.
வாஸ்றூமிலிருந்து திரும்பி வந்து எனது கையிலிருந்த தன்னுடைய கைப்பையை வாங்கிய யோகமலரை, கொஞ்சம் தள்ளி நின்ற அந்த மூன்று பெண்பிள்ளைகளும் அந்த இளைஞனும் சுட்டிக்காட்டி,இவர்தான் எங்கடை ரூமுக்கு வந்து கடிதம் தந்தவர், பக்கத்தில நிற்கிற மலேசியன் கேர்ளைத்தான் அந்தாள் மறி பண்ணப் போறார் போல என்று சொல்ல,’அந்த இளைஞன் மறி பண்ணப் போறாரோ என்று வியப்புடன் சொல்வதும், அவருக்கு அங்கை பெண்சாதி இருக்கிறாவே, இரண்டு பேரும் பலமுறை இராஜநாயகித் தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததை நானே பார்த்திருக்கிறேனே,இவர் தெல்லிப்பழை எம்பிசிஎஸ் வேலை செய்ததும் தெரியும் என்று சொன்னது காதைத் தீட்டி என்னைப் பற்றி ஏதாவது கதைக்கிறார்களா என கவனித்த எனக்கு சத்தமாக இருந்த அந்தச் சூழ்நிலைக்குள்ளும் கேட்கவே செய்தது.
யோகமலர் நான் எதோ கவனத்திலிருப்பதைக் கண்டவள், என்னுடைய கையிலிருந்த கைப்பையைக் கண்டவள் „இது மச்சாளின் மகளுடையதா’ என்றவள்,’என்னங்க என்ன யோசன, அவங்க உங்களப் பற்றி பேசிறாங்களா’ என்றாள்.
இல்லை அவை ஏதோ கதைக்கினம் என்று சொல்ல,’ இல்லங்க எனக்கு உங்களப் பற்றி பழகின கொஞ்ச நாளிலயே, புரிஞ்சுகிட்டேனுங்க, உங்களுக்கு எது தேவை என்பதையும் உங்க மனசையும் புரிஞ்சு வைச்சிருக்கிறன், ஏன்னா நான் உங்கள புருசனாக ஏற்று வாழ்றேனுங்க என்றவள்’ ஆமா நான் வாஸ்றூமுக்கு போகேக்கில உங்க மச்சாளின் மகள் நீங்க என் தோளில தூங்கின பற்றிச் சொல்லலையா’ என்று கேட்க,பிறகு சொல்றன் என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது மச்சாளின் மகள் வாஸ்றூமிலிருந்து திரும்பி வந்து தனது கைப்பையை வாங்கினாள்.
„ஏதாவது கூல் டிரிங்ஸ் குடிப்பம் வாங்குங்க’ என்று யோகமலர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கையில் சுண்ணாக வம்சாவழிப் பெண்பிள்ளையும் அவளின் தோழியும் எங்களுக்கருகில் வர „இவங்களுக்கும் வாங்குங்க’ என்று யோகமலர் சொல்ல அந்தப் பிள்ளைகள் „நோ நோ தாங்யூலா வேண்டாம்ங் லா என்று; சொல்ல’ இல்லைங்க நீங்க என் புருசனோட ஊரைச் சேர்ந்த ஜெனரேசனுங்க அதுமட்டுமல்ல என்னவரோட றிலேசனா இருக்கலாம்னு இவரு சொன்னாரு, நீங்க இப்ப என்னோட றிலேசனுங்க’ என்று சிரிப்போடு சொல்லிக் கொண்டிருந்ததை மச்சாளின் மகள் கவனித்துக் கொண்டேயிருந்தாள்.
எவர் எவருக்கு என்னென்ன கூல்டிரிங்ஸ் வேண்டுமென்று கேட்டு வாங்கப் போன போது யோகமலரும் என்கூடவே வந்து நான் வாங்கியதை எடுத்து ஒவ்வொருவருக்கும் குடுத்துக் கொண்டிருந்தாள்.
சிங்கப்பூருக்கு வந்து அமெரிக்கன் பக்ரறியான ஜிஇயில வேலை செய்யத் தொடங்கிய நாட்களில் நான் விரும்பிக் குடிக்கும் பாணமாக இருந்தது சோயா பாலே.எல்லாரும் அதையே விரும்பியதால் யோகமலரும் நானும் சோயா பாலையே வாங்கிக் கொடுத்தோம்.
சிங்கப்பூரில் மற்றைய குளிர்பாணங்களுக்குச் சமனாக சோயா பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது.சீனர்கள் வாழும் நாடுகளில் சோயா சம்பந்தப்பட்ட உணவுகளுக்கு அவர்கள் அதிமுக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எங்களுக்கருகில் நின்ற சுண்ணாக வம்சாவழிப் பிள்ளையையும் அவளின் தோழியையும் காண்பித்து இவர்களும் ஜோகூர்பாருவிலிருக்கிறவர்களா என மச்சாளின் மகள் கேட்டாள்.
அவர்களில் ஒருத்தி சுண்ணாக வம்சாவழிப் பிள்ளையென்றும்,மற்றப்பிள்ளை கொக்குவில் பகுதி
வம்சாவழிப் பிள்ளையென்று சொன்ன நான் சுண்ணாக வம்சாவழிப் பிள்ளையின் தாய் தங்கடை சொந்தக்காரர் மகாஜனாவின்ரை கிழக்குப் பக்கத்திலை இருக்கினம் என்று இவாவுக்குச் சொல்லியிருக்கிறா, கிழக்குப் பக்கத்திலையென்றா என்னுடைய மனுசியின்ரை பெரிய தாயார் மாமிமார்தானே இருக்கினம.; அவைதான் சொந்தம் போல என அவளுக்கு விபரத்தைச் சொல்ல „ ஓ…அப்படியா …அப்ப எங்களுக்கும் சுண்ணாகத்திலை சொந்தக்காரர் இருக்கினம், சிலவேளை நீங்களும் எனக்குச் சொந்தக்காரியாக இருக்கலாம்’ எனச் சொன்னவள் அவர்களுடன் கதைக்கத் தொடங்கினாள்.
யோகமலரும் அவளுடைய தோழியும் எதுவுமே கதைக்காமல் சோயாபாலை ஸ்ரோவால் உறிஞ்சிக் குடிச்சவள் „ஏங்க உங்க பெண்டாட்டிக்கு கொஞ்சம் பசிக்குதுங்க ஏதாவது வாங்கித் தாங்களேன்’ என்றவள், „ மற்றவங்கள என்னா வேணும்னு கேட்டு வாங்கிக் கொடுங்க’ என்றாள்.
ஏதாவது சாப்பிடப் போகிறீர்களா என்று கேட்க,எல்லாருமே வேண்டாம் என்று சொல்வதைக் கவனித்த யோகமலர் „அவங்க அப்படித்தாங்க சொல்வாங்க பிஸ்கட்டை வாங்கிட்டு வாங்க’ என்றாள்.
யோகமலர் சொல்வதை நான் செய்து கொண்படிருப்பதை மச்சாளின் மகள் கடைக்கண்ணால் ஊன்றிக் கவனித்ததை,யோகமலரின் தோழி கவனித்து யோகமலருக்கு கண்ஜாடை காட்டியதைப் பார்த்த நான் சிரிக்க’ ஏங்க சிரிச்சனீங்க’ என்று யோகமலர் கேட்க,’ஒன்றுமில்லை’ என்றன்.
„ஒன்றுமில்லையா நான் உங்க பெண்டாட்டி,உங்களால எதையுமே மறைக்க முடியாது, அப்புறமாக படம் தொடங்கப்போ சொல்றன்’ என்றவள் படம் தொடங்கப் போகுதுங்க பிஸ்கட்டை வாங்கிட்டு வாங்க என்று சொல்ல படம் தொடங்குவதற்கான முதல் பெல் அடிக்க, வேகமாகப்
போய் பிஸ்கட்டையும் வாங்கிக் கொண்டு வந்து தியேட்டருக்குள் போனம்.
„ஓன்ன அவங்களுக்கு கொடுங்க என்று யோகமலர் சொல்ல ஒரு பிஸ்கட் பைக்கற்றை சுண்ணாக வம்சாவழிப் பிள்ளையிடம் கொடுக்க „ ஏன் லா இவ்வளவும் „ என்று சொன்ன அந்தப் பிள்ளை தனக்கும் தோழிக்குமாக நான்கு பிஸ்கட்டுகளை எடுத்திட்டு தரும் போது „உங்க மச்சாளோட மகள் உங்கமீது ரொம்பக் கோபத்துல லா இருக்காங்க „ என்று சொன்னதைக் கேட்ட யோகமலர் மற்ற பிஸ்கட் பைக்கற்றை மச்சாளின் மகளிடம் குடுத்து நீங்களும் என்னோட பிரண்டும் இதைச் சாப்பிடுங்க இந்தாங்க என்று குடுத்தவள், சடாரென்று திரும்பி எனது நெஞ்சுக்கு நேரே தலையைக் குனிஞ்சு எனக்குப் பக்கத்தில இருந்த பிள்ளையிடம் „ ஆமா இவரு என்னோட புருசன்தான், அதற்கு என்னாவாம் எனக்கும் இவருக்கும் என்ன றிலேசன்சிப் இருக்குன்னு அக்காவுக்கும் தெரியும், இவரு என்னோட உயிர்…என்று யோகமலர் சொல்ல, „அக்காவா அது யாருங் லா’ என்று அந்தப்பிள்ளை கேட்க, சிறீலங்காவில இருக்கிற என்னவரோட மனைவிங்க, நான் அவங்கள்ள ரொம்ப மரியாதையம் பாசமும் வைச்சிருக்கன், யார் என்ன சொன்னாலும் சொல்லட்டுமே என்றாள்.
ஆனால் மச்சாளின் மகளுக்கு யோகமலர் கதைச்சது கேடடிருக்க வேண்டும் போல அவள் தனது தலையை பின்னுக்கு கொண்டு வந்து யோகமலரின்: முதுகுக்:கு பின்னால் என்னை விருப்பமில்லாததது போல பார்த்தாள்.
படம் தொடங்கியது.’தூக்கம் போச்சா அல்லது தூங்கப் போறீங்களா, பெண்டாட்டியோட தோள்ளதானே தூங்குங்க’ என்றாள் யோகமலர்.
ஆனாhல் எனக்கு நித்திரை வரவில்லை.படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தம். படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, எனக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக’ படம் முடிஞ்சதும் ஏதோ ஒரு றெஸ்ரோறன்ரில சாப்பிறம், எங்களை ஜோகூர்பாரு பஸ்ஸில
எற்றிவிட்டிட்டு,அப்புறம் இவங்கள அவங்க பில்டிங் பஸ் ஸ்ராண்ட் வரையும் கொண்டு போய் விட்டிட்டு நீங்க வீட்டுக்கு போயிடுங்க’ என்றவள் மிக மெதுவாக இன்னும் ஆறுநாட்கள்ள நீங்க எனக்கு தாலி கட்டி உரிமையுள்ள பெண்டாட்டி ஆக்கிடுவீங்க,நான் உங்களுக்காக என்னோட உயிரையும் விடுவேணுங்க „ என்று அவள் கண்கலங்கி முகம் சிவக்க சொன்னவளின் உடல் நடுங்கத் தொடங்க அவளை இறுக்கி அணைச்சு அவளின் கைகளை எனது கைகளால் பொத்திப் பிடிச்சன்.
எனது தோளில் தலையைச் சாய்த்தாள்.சில நிமிடங்களில் பழைய நிலைக்கு அவள் வந்துவிட்டாள்.
அவளை நான் அணைத்து வைச்சிருந்தாலும் என்னுடைய மனம் நிலைகொள்ளாமல் தவிச்சது.
(தொடரும்)
![]()