கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 21…. (உண்மைக் கதை)… ஏலையா க.முருகதாசன்.

யோகமலர் கொடுத்த படத்தைப் பார்த்ததும் மச்சாளின் மகள் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். மனைவி உடுத்திருந்த அதே நிறத்தில் அதே போல யோகமலர் கம்பாயம் உடுத்தியிருந்தது மட்டுமல்ல மனைவி முன்னுக்கு தலைமயிரை விட்டுப் படம் எடுத்தது போல யோகமலரும் முன்னுக்கு தலைமயிரை விட்டபடியே உட்கார்ந்திருந்தாள்.

„என்ன சித்தப்பா சித்தியும் இவாவும் ஒரே மாதிரியான கம்பாயம் போட்டிருக்கினம்…’ என இழுத்த மச்சாளின் மகள் என்னிடம் இருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்க,’ ஆமா அக்காவுக்கும் எனக்கும் என்னுடைய இவருதான் தைப்பிச்சுத் தந்தாங்;க இவரு என்னுடைய….’ என்று யோகமலர் ஏதோ சொல்லவர, மெதுவாக அவளின் துடையில் தட்ட அவள் சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டாள்.

„சரி போவம், என்று நான் கதிரையைவிட்டு எழ, யோகமலரும் அவளுடைய தோழியும் எழுந்தனர்,ஆனால் மச்சாளின் மகள் தயங்கி „சித்தப்பா எனக்குக் காய்ச்சல் குணமாக இருக்குது போல நான் வராமல் நிக்கட்டுமா என்று கேட்டாள்.

படத்துக்குப் போக வேண்டுமென்று சொன்னவளும் அவள்தான், அதற்காக அழகாக வெளிக்கிட்டு நின்றவளும் அவள்தான், இப்ப யோகமலரைக் கண்டது மட்டுமல்ல,என்னுடைய மனைவி உடுத்தியிருந்த கம்பாயம் போன்று அவளும் உடுத்தியிருந்ததைக் கண்டதாலும் இவருதான் எனக்கும் தைப்பிச்சுத் தந்தவர் என்றதில் என்னுடைய இவரு என்ற சொல் உரிமையுடன் சொல்லப்பட்ட சொல்லாக மச்சாளின் மகள் உணர்ந்ததாள் ஒன்றாகப் படத்துக்குப் போவதை அவள் தவிர்க்க முயற்சித்தமை அப்பட்டமாகவே தெரிந்தது.

„காய்ச்சலா’ என்று அவள் கழுத்தடியில் புறங்கையை வைச்சுப் பார்த்த நான் உடம்பு சுடேலையே இது காய்ச்சல் இல்லை, நைற் சிப்ற் வேலைக்குப் போறதால நித்திரை போதாததால் சும்மா உடம்பு சுடுது என்று சொல்ல, யோகமலரும் மச்சாளின் மகளின் நெற்றியில் கைவைச்சுப் பார்த்திட்டு உங்களுக்கு பீவர் இல்லையென்றவள்,தனது கைப்பையைத் திறந்து ஒரு குளிசையை எடுத்து இந்தாங்க உங்களுக்கு பீவர்தான்னு டவுட் இருந்தா இதைப் போடுங்க என்று குடுக்க அதை வாங்கி வாயில் போட்டு தண்ணீரைக் குடிச்சாள்.

„சித்தப்பா நான் சொல்ல மறந்திட்டன் அம்மான்ரை கடிதம் வந்தது.உங்களைப் பற்றி விசாரிச்சு எழுதியிருந்தா அதற்கு நான் சித்தப்பாவுக்கு ஒரு குறையுமில்லை, அவருக்கு இஞ்சை எல்லாம் கிடைக்குது அவருக்கு உதவி செய்ய உரிமை கொண்ட பலபேர் இருக்கினம் என்று எழுதினனான் என்றவள் யோகமலரைப் பார்த்துக் கொண்டே’அவருக்கு இஞ்சை எல்லாம் கிடைக்குது „ என்று அழுத்திச் சொன்னதை நானும் கவனிச்சன் யோகமலரும் கவனிச்சதால் அவள் எனது கையை நுள்ளினால்.

கதவைப் பூட்டும் போது உங்கடை ரூமில இருந்த சிங்களப் பிள்ளையலைக் காணேலை எங்கை போயிட்டினம் என்று கேட்க அவையிரண்டு பேரும் போய் பிரண்ட்ஸோடை வெளியிலை போயிட்டினம் என்று அவள் பதில் சொன்னாள்.

எதற்கும் கவனமாக இரு என்று சொல்ல வேண்டுமென்று மனம் ஏவினாலும், எனக்கு புத்தி சொல்றதை விட்டிட்டு நீங்கள் ஒழுங்காயிருங்கள் என்று மச்சாளின் மகள் சொல்லி விடுவாளோ என்ற தயக்கதில் பேசாமலிருந்தன்.

யோகமலர் என்னோடு ஒட்டிக் கொண்ட நடந்து வந்தாள்.எங்களுக்கு முன்னால் மச்சாளின் மகளும்

யோகமலரின் தோழியும் கதைச்சுக் கொண்டே போய்க் கொண்டிருந்தினம்.

பஸ்தரிப்பு நிலையத்துக்குப் போறதுக்கிடையில் மச்சாளின் மகள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனாள்.யோகமலர் எனக்கு மட்டும் கேட்கத்தக்கதா,அவங்க, „அவருக்கு இஞ்சை எல்லாம் கிடைக்குது என்று என்னத்தாங்க சொன்னாங்க’ என்று சொல்ல,அது எனக்கும் தெரியும்,நீங்க கவலைப்பட வேண்டாம் என்று சொல்ல எனது தோளில் தலையைச் சாய்ச்சவள் உடனேயே எடுத்திட்டாள்.

பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது, என்ன படத்துக்குப் போறம் என்று மச்சாளின் மகள் கேட்க பாரதிராஜா டையரக்சன் செய்த கமலகாசன் நடித்த படமான டிக் டிக் டிக் படத்துக்குப் போறம் என்று பதில் சொன்னன்.

பஸ் வந்ததும் ஏறினோம்.எனக்குப் பக்கத்தில் யோகமலர் இருந்தாள்.அவளின் தோழி மச்சாளின் மகளுடன் இருந்தாள்.மச்சாளின் மகளின் வீட்டைவிட்டு வெளிக்கிட்டதிலிருந்து யோகமலரின் தோழியுடன் கதைச்சுக் கொண்டே வந்தவள் பஸ்சுக்குள் இருந்தும் கதைச்சுக் கொண்டே இருந்தாள்.

தியேட்டர் இருக்கும் பஸ்தரிப்பு நிலையத்தில் இறங்கியதும்,’முதலிலை போய் ரிக்கற்றை புக் பண்ணுவம் பிறகு ஏதாவது சாப்பிடுவம் என்று சொல்ல யோகமலர் ஆமா அதான் நல்லது என்று சொன்னாள்.

தியேட்டருக்குள் போய் கவுண்டரில் ரிக்கற்றை புக்பண்ணி ரிக்கற்றைக் கையிலெடுத்துக் கொண்டு அருகில் இருந்த சொப்பிங் சென்ரருக்குள் நுழைய „ பிறேக்பாஸ்ருக்கு என்ன சாப்பிடுவம்ங்க’ என்று யோகமலர் கேட்டாள்.

கொபி பார்ல கொபியும் கேக்,சுவீட் பிரட் சாப்பிடுவம் என்று மச்சாளின் மகள் சொல்ல எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டு உள்ளே போயிருந்து சாப்பிட்டம்.

ஒவ்வொரு மேசையைச் சுற்றியும் நான்கு கதிரைகள் இருந்தன.சுவரோடு ஓரமாக இருந்த மேசையோடு இருந்த கதிரையில் நாங்கள் நால்வரும் உட்கார்ந்தோம்.எனக்கும் யோகமலருக்கும் அவளின் தோழிக்கும் கோப்பியும் பனிஸ்சும்,மச்சாளின் மகளுக்கு கேக்கும் ரீயும் வேண்டுமென்று பணிப் பெண்ணிடம் சொல்ல அவள் அவரவருக்கு தேவையானவற்றைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,மச்சாளின் மகள்’சித்திக்கு கடிதம் போடுறனீங்கள்தானே, அல்லாட்டி அதையும் மறந்திட்டியளோ என்று கேட்க அவள் யோகமலருக்காகத்தான் இதையெல்லாம் கேட்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட நான், அவளைப் பார்த்து „எனக்கு என்னுடைய மனைவிக்கு கடிதம் போடச் சொல்லி யாரும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை, இப்படி புத்திசொல்வது கேள்வி கேட்பதை நிறுத்திவிடுங்கள்.நேற்றும் மனுசியிடமிருந்து கடிதம் வந்தது „ என்று சொல்லி சட்டைப் பைக்குள்ளிருந்து கடிதத்தை எடுக்க, யோகமலர் அதை வாங்கி வாசித்தாள்.

வாசிக்க வாசிக்க அவளுடைய முகம் மலர்ந்தது.’என்னங்க அக்கா என்னோட சுகத்தையும் விசாரிச்சிருக்காங்க,அக்காவுக்கு நான் ஒரு லெட்டர் எழுதித் தாறன் நீங்க எழுதிற கடிதத்தோடை சேர்த்து அனுப்புறீங்களா.

நானும் „ம் எழுதித் தாருங்கள் சேர்த்து அனுப்பி விடுகிறன்’ என்று சொல்ல, மச்சாளின் மகளின் முகம் கறுத்துவிட்டது.அதை அவள் சமாளிப்பதற்காக „சித்தி நல்லா கேக் செய்வாதானே, நான் சாப்பிட்டிருக்கிறன்’ என்று அவள்

சொல்ல, அக்காவைப் பார்த்தாலே தெரியுது அவங்க கெட்டிக்காரியென்று, அக்கா மொடேர்ன் வுமன்.நீங்க கொடுத்து வச்சவருங்க, நானுந்தான் என்றாள்.

நீங்க ஊருக்குப் போகப் போ நானும் வருவேனுங்க, சம்ரைம் நான் உங்ககூட சிறீலங்காவில இருந்திடுவேனுங்க என்று யோகமலர் சொல்ல மச்சாளின் மகள் அவளை வியப்புடன் பார்த்தாள்.

எனக்கு ஒரு விசயம் தெளிவாகப் புரிந்தது.மச்சாளின் மகள் வேண்டுமென்றே யோகமலலரைச் சீண்டுகிறாள் என்பதும் அதற்கு யோகமலர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்றும் தெரிந்தது.நான் யோகமலருக்கு கண்ஜாடை காட்டி கையை மேசையை நோக்கி கீழே கொண்டு போய் வேண்டாம் என்பது போலச் சொல்ல அவளும் தலையை ஆட்டி நான் சொன்னதை ஏற்றுக் கொண்டாள்.

சாப்பிட்டு முடிய காசைக் கொடுக்கப் போக, மச்சாளின் மகள் „சித்தப்பா நான் குடுக்கிறன்’ என்று எழ,யோகமலர் „வேண்டாம்ங்க என்னுடைய அவர் கொடுப்பாருங்க’ என்று சென்னாள்;.

எல்லாரும் எழ, நான் கவுண்டருக்குப் போய்க் காசைக் கொடுத்துவிட்டு தியேட்டருக்குப் போனோம்.நான் ரிக்கற் புக்பண்ணும் போது தியேட்டரில் யாருமே இல்லை.ஆனால் இப்ப நிறையப் பேர் நிறையப் பேர் நின்றனர்.

நாங்கள் தியேட்டருக்குள் போய் முதலாம் வகுப்பு மேல் கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தம்.எனக்கு வலது புறத்தில் யோகமலரும் அதற்கு அடுத்து மச்சாளின் மகளும் அதற்கடுத்து யோகமலரின் தோழியும் உட்கார்ந்திருந்தனர்.

யோகமலரிடம்; „ உங்களுடைய தோழி என்ன எதுவுமே கதைக்கிறா இல்லை’ என்று கேட்க, அவளா, அவள் கதைக்கிறத நோட் பண்ணிட்டே இருக்காள்.திரும்பிப் போறப்

போ எல்லாம் சொல்லுவாள்.இவ என்ன பேசினா என்பதையும் சொல்லுவாள் என்று மச்சாளின் மகளை கண்ஜாடையால் காட்டி யோகமலர் சொல்லிக் கொண்டிருக்கும் போது,’கலோ குட்டே லா’ என்று சொல்லிக் கொண்டே எனக்கு இடது புறத்திலுள்ள இருக்கைகளை நோக்கி இரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

திரும்பிப் பார்த்தேன் மொலக்சில் வேலை செய்கிறவர்கள்தான் என்பதை கண்டு கொண்ட நான் குட்டே என்று சொல்ல, அவர்களில் சுண்ணாக வம்சாவழிப் பெண் நாங்க உங்களச் சந்திப்பமென்னு எதிர்பார்க்கலங்க லா என்று சொல்லிக் கொண்டே எனக்கு இடதுபுற இருக்கையில் அவள் உட்கார அதற்கடுத்த இருக்கையில் அவளுடைய தோழி உட்கார்ந்தாள்.

அவளின் பக்கம் திரும்பி நான்கூட உங்களை எதிர்பார்க்கலை என்று சொல்ல எனக்கு அருகில் இருந்த யோகமலரை பார்த்தவள்,’இவங்களைத்தான் நீங்க மறிபண்ணப் போறீங்களா’ என்றவள் கேட்க ஓம் என்று நான் பதில் சொல்ல தன் கையை என்னைக் கடந்து நீட்டி „விஸ் யு ஏ கப்பி மறீட் லைப் அண்ட் பெஸ்ற் விசஸ் „ என்று யோகமலருக்கு கைலாகு கொடுக்க அவளும் „வெல்கம் அண்ட் தாங்யூ என்றவள்’ யாருங்க இவங்க’ என்று கேட்க’இவை இரண்டு பேரும் மொலக்சில் வேலை செய்கிறவை, உங்களை பிக்அப் பண்ணேக்கை உங்களுக்குத் தாலிகட்டப் போறதை மகேந்திரன் அறிந்து சொன்னதாகச் சொன்னேனே,’ ஆமா சொன்னீங்க „என்று யோகமலர் பதில் சொல்ல „ அவங்கள் இவர்கள்தான் „ என்று சொன்னன்.

மச்சாளின் மகள் நாங்கள் கதைச்;சுக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறாளா என்பதைக் கடைக் கண்ணால் பார்த்தன் அவள் யோகமலரின் தோழியுடன் கதைச்சுக் கொண்டிருந்தாள்.

நான் மெதுவாக கதைப்பதைக் கண்ட மொலக்ஸ் பிள்ளை „ ஏன் லா மெதுவாக பயந்து பயந்து பேசுவதப் போல பேசிறீங்களே’ என்று கேட்க,யோகமலர் „எனக்குப் பக்கத்தில இருக்காங்களே அவங்க என்னோட கஸ்பெண்டோட மச்சாளின் டோட்டர், அவங்களுக்கு நம்ம விசயம் தெரியாது, அதான் என்னோட கஸ்பெண்ட சைலண்டா பேசுறாரு என்று சொன்னாள்.

இவாவும் சிறீலங்கா ஜெனரேசன்தான் இவாவுடைய அப்பா அம்மா எல்லாரும் சிங்கப்பூரியர்கள் இவாவும் சிங்கப்பூரியன், இவாவுடைய தோழி அவாவும் சிறீலங்கா ஜெனரேசன்தான் என்று யோகமலருக்கு விளங்கப்படுத்தினன்.

நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே படம் தொடங்க அமைதியாகப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தம்.ஊரில மனைவி பிள்ளைங்க இருக்கத்தக்கதாக இன்னொருத்தியை மறி பண்றது பெரிய தப்புங்க என்று காலமை சொன்னவள் இப்ப யோகமலருக்கு நான் தாலிகட்டப் போறதுக்கு வாழ்த்துச் சொல்கிறாளே’ என நான் யோசித்தன்.படம் தொடங்கி ஐஞ்சு நிமிசத்தால யோகமலரின் தோளில் சாய்ந்து நித்திரை கொள்வதும் தலையை நிமிர்த்தி படம் பார்ப்பதுமாக இருந்தன்.

நான் யோகமலரின் தோளில் சாய்ந்து நித்திரை கொள்வதை மச்சாளின் மகள் கவனிக்கத் தொடங்கினாள்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *