கவிதைகள்

பீடுடைய தமிழ்த் தாத்தா!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

உள்ள மெலாம் தமிழுணர்வாய் ஊற்றெடுக்க

ஊரூராய் அலைந்தாரே    உ வே சா

தெள்ளுதமிழ் நூல்கள் தேடிநின்ற வேளை

செல்லரித்த சேதிகேட்டு திகைத்து நின்றார்

 

ஏடு தேடி எங்கேயோ சென்றலைந்தார்

காடு மேடு பாராமல் நடந்தலைந்தார்

நாடு போற்ற பணிசெய்து நலம்விளைத்தார்

பீடு டைய தமிழ்த்தாத்தா ஆகிநின்றார்

 

ஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிப்பதற்கு

காட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தருவே ஐயா

பூட்டியே வைத்தஏட்டை புத்தகமாக்கி வைத்த

பாட்டனே எங்களையா பணிந்துனை நிற்கிறோமே

 

ஏடெலாம் இடஞ்சலென்று எரித்திட முயன்றவேளை

கேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா

புதைகுழி வெட்டியேட்டை புதைத்தது கண்டபோது

புயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா

 

மெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து

கைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்

அய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்

செய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்

 

பைந்தமிழ் மொழியைக்கற்று பலபேரும் வியக்க நின்றாய்

சொந்தமாய் சேர்த்தசொத்து சுந்தரத் தமிழேயாச்சு               

நந்தமிழ் சங்கநூல்கள் நாளுமே கற்றுநிற்க

வெந்தழல் சூழ்ந்தஏட்டை  வேகமாய் பற்றி நின்றாய்

 

நொந்திடச்செய்தார் தம்மை வந்தனை செய்து நின்று

செந்தமிழ் மொழியைக்காக்க சினமின்றிப் பணிகள் செய்தாய்

பல்பலைக் கழகம்செய்யும் பணியினை தனியே நின்று

நல்மனம் கொண்டு செய்த நாயகன் நீதான் ஐயா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *