கதைகள்

நடுகைக்காரி!…..தொடர் 8 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

.தொடர் 8

„தங்களைப் பெரிய சாதிமான்கள் என்று சொல்லிக் கொள்ளும் எங்கடை ஆட்கள் மகாஜனாவில் அனைவரும் படிக்கத் தடையாக இருக்கிறார்கள்,உண்மையில் இது பெரிய கல்வித் துரோகம்’என்று தகப்பன் சொன்னதம் அமைதியாகிறான் ஞானசெல்வம்.

தான் பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதை அவன் தாயாரிடம் சொல்லியிருந்தான்.அப்பாவிடம் கதைக்கும்படியம் தாயாரிடம் சொல்லியிருந்தான்.

தாயாரும் தகப்பனிடம் கேட்பார்தான்.ஆனால் தானும் கேட்டால் நல்லதுதான் என்று யோசித்த ஞானசெல்வம் தாயாரிடம் கண்ஜாடையால் கேளம்மா என்பது போல காட்ட தாயாரும் நீ கேள் என கண்ஜாடை காட்ட தான் கதைக்கத் தொடங்க அம்மா எப்படியும் சப்போர்ட் பண்ணுவா என்று எண்ணியவன் „ அப்பா உங்களோடை ஒரு விசயம் கதைக்க வேணும் ,இன்றைக்கு மார்க்கண்டு மாமாவின்ரை தோட்டத்துக்குப் போனனான’ என்று அவன் கதையைத் தொடங்க,’நீ ஏன் அங்கை போனனி „ என்று தகப்பன் கேட்க,’சும்மாதான் போனனான்’ என்றவன் தகப்பன் எதுவும் கேள்வி கேட்காமலிருப்பதற்காக’ அங்கையப்பா நாலு நடுகைக்காரிகள் வெங்காயத்துக்குள்ளை புல்லுப் பிடுங்கிக் கொண்டு நின்றினம்’.

அதிலை ஒரு பிள்ளை பதுசாயிருந்தா, நான் மார்க்கண்டு மாமாவோடை கதைச்சுப் போட்டு ஆடுகால் மரத்தோடை சாத்தியிருந்த சைக்கிளை எடுக்கப் போகேக்கிலை தண்ணி குடிக்க கிணத்தடிக்குப் போன அந்தப் பிள்ளை என்ரை சைக்கிள் காண்டிலை செருகியிருந்த டெயிலி நியூஸ் பேப்பரை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தா, அவ என்ன வாசிக்கிறா என்று அறிய நான் கிட்டப் போய் கேட்டன் „இங்கிலீஸ் பேப்பர் படிப்பியளா என்றவுடன்,பேப்பரின் முன்பக்கத்தில் இருந்த செய்திகளின் தலையங்கத்தை வாசித்தது மட்டுமல்ல செய்தியை வாசித்துவிட்டு அதை எனக்கு தமிழில் மொழி பெயர்த்தும் சொன்னா’.

„உச்சரிப்பும் தங்குதடையின்றி வாசித்த விதமும் எனக்குச் சொக்டாயிருந்துது.அப்ப நான் கேட்டன் எங்கை படிச்சனீங்கள் என்று, தான் யூனியன் கொலிஜ்ஜிலை படிச்சது என்றும், இங்கிலீசும் இன்னும் இரண்டு பாடங்களும் சேர்த்து மூன்று பாடங்களிலை மட்டுந்தான் எஸ்.எஸ்சிச் சோதனையில் பாஸ் பண்ணினனான் என்று சொன்ன அந்தப் பிள்ளையைக் கேட்டனப்பா, நீங்கள் இங்கிலீசை தமிழ்ப் பேச்சுத் தொனியில்லாமல் இங்கிலீஸ்காரர் மாதிரி அழகாக உச்சரிக்கிறீர்கள் யாரிட்டை இங்கிலீஸ் படிச்சனீங்கள் என்று கேட்க யூனியன் கொலிஜ் பிரின்சிப்பல் ஐ.பி.துரைரத்தினத்திடந்தான் படிச்சனாம் என்று சொன்ன அந்தப் பிள்ளையிட்டை சொன்னன் பிரைவேட்டாக எஸ்.எஸ்.சி சோதனையை

எடுக்கலாந்தானே என்று கேட்க அந்தப் பிள்ளை சொல்லிச்சுது தனக்கும் விருப்பந்தான்.

ஆனால் கணக்குப் பாடந்தான் தனக்குக் கஸ்டமாம் யாராவது ரியூசன் சொல்லித் தந்தால் நல்லது என்று சொன்ன அந்தப் பிள்ளை என்னிடம் கேட்டுது ரியூசன் சொல்லிக் கொடுக்கிறவை யாரையாவது உங்களுக்கு தெரியுமா என்று ,நானே சொல்லித் தாறன் என்று சொல்லிட்டன்.

அவை முன்னேற வேண்டுமப்பா நான் அந்தப் பிள்ளைக்கு ரியூசன் சொல்லிக் குடுக்கப் போறனப்பா, நீங்கள் ஒண்டும் சொல்ல மாட்டியள் என்று தெரியுமப்பா என்றவன் நிறுத்த, மகனைக் கடைக்கண்ணால் பார்த்த தகப்பன் மனைவியைப் பார்த்து மெலிதாகச் சிரிக்கிறார்.

ஞானசெல்வம் தனக்கும் பார்வதிக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது போலவும் ரியூசன் தரச் சொல்லிக் கேட்கிறாள் அவ்வளவுதான் தான் யாரோ அவள் யாரோ என்பதைப் போல மகன் தகப்பனுக்கு விபரித்த அப்பாவித்தனம் கலந்த குரலை தாய் இரசித்து என்ன நடிப்பு நடிக்கிறான் என்று மெதுவாக சிரிக்கிறாள்.

„நீ அங்கை போய் படிப்பிக்கப் போறியோ இல்லாட்டி அந்தப் பிள்ளை இஞ்சை வருமோ’ என்று தகப்பன் கேட்க, „எங்கையெண்டாலும் எனக்குப் பிரச்சினையில்லை, அங்கையெண்டால் நல்லது.ஏனென்டால் இஞ்சை நான் அந்தப் பிள்ளைக்குப் படிப்பிச்சுக் கொண்டிருக்க அயலட்டைச் சனம் அதைப் பார்த்திட்டு, அந்தப் பிள்ளை யாரெண்டு தூண்டில் போட்டு மீன் பிடிக்கிற மாதிரி „நீ எங்கை பிள்ளை இருக்கிறனி என்று கேட்க, அந்தப் பிள்ளையும் வஞ்சகமில்லாமல் யூனியன் கொலிஜ்ஜிற்குக் கிட்டவுள்ள சந்தையடி ஒழுங்கையிலை இருக்கிறனான் என்று சொல்ல, அந்த ஒழுங்கையிலை யாற்றை பிள்ளை என்று கேட்க அந்தப் பிள்ளையும் தயங்கித் தயங்கி அப்பா மேசன் வேலைக்குப் போறவர் அதோடை ….என்று அந்தப் பிள்ளை …….’என்று அவன் இழுக்க „ சரி சரி எனக்கு விளங்குது, நீ அங்கை போயே படிப்பி எதற்கும் நீ கவனமாக இரு….என்று தகப்பன் சொல்ல,’ அப்பா இஞ்சை அந்தப் பிள்ளைக்கு நான் பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருக்கேக்கை சில நேரம் மார்க்கண்டு மாமா இஞ்சை வந்து அந்தப் பிள்ளையைக் கண்டிட்டால் இவனென்ன நடுகைக்காரிக்கு பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருக்கிறான் சுப்பையா வீட்டிலை எல்லாரையும் ஒழுங்குமுறையின்றி கதிரையிலை உட்கார வைச்சிருக்கினம் என்று அவர் கதை பரப்பி விடுவர்’.

„அதுமட்டுமில்லையப்பா அம்பனை வயலிலை தோட்டம் செய்யிறவை அந்தப் பிள்ளை புல்லுப் புடுங்கே;கிலையோ வெங்காயம் நடேக்கிலையோ கண்டிருப்பினம்,அந்தப் பிள்ளை இஞ்சை படிக்கிறதுக்கு வந்து போகேக்கிலை நடுகைக்காரி எங்கடை வீட்டுக்கு ஏன் வந்து போறாவெண்டு அதைப் பார்ப்பதற்கென்றே சும்மா வந்தனான் என்று சொல்லிக் கொண்டு சிலர் வருவினம்’.

„இதைவிட இன்னொரு பெரிய பிரச்சினை இருக்கு.அக்காக்களுக்கும் அண்ணைமாருக்கும் நடுகைக்காரி யார் எவர் என்று தெரிஞ்சால் போதும் நிலத்துக்கும் வானத்துக்கும் குதிப்பினம்.அதாலை அம்மாவுக்கும் உங்களுக்குந்தான் பிரச்சினை.அதாலை அங்கை போய் படிப்பிக்கிறதுதான் எல்லாத்துக்கும் நல்லது „என்று சொல்லி முடிக்கிறான் ஞானசெல்வம்.

ஏற்கனவே பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதற்குச் சரி என்று சொன்ன தகப்பன், அந்தப் பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்க திகைத்தவன், தாயைப் பார்க்கிறான், தாய் நான் சொல்ல மாட்டன் என்பது போல தலையையாட்ட’ நான் அதைக் கேட்கேலையப்பா’ என்கிறான்.

சாப்பிட்டு முடிஞ்சதும் மூவரும்; விறாந்தைக்குப் போய் தகப்பன் சாக்குத்துணி சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருக்க தாயும் ஞானசெல்வமும் சாய்வான பிரம்புக் கதிரையில் உட்காருகிறார்கள்.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகும் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகும் தாய்க்கும் தகப்பனுக்கும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உண்டு.

ஞானசெல்வம் பாக்கை எடுத்து பாக்குவெட்டியால் சீவி தட்டத்தில் வைக்கிறான்.தகப்பன் தாயைவிட செல்வம் அழகாக ஒழுங்காக பாக்குச் சீவுவான்.

பாக்கைப் பார்த்தவுடனேயே கயர்ப் பாக்கு எது வெள்ளைப் பாக்கு எதுவென்று தெரிவது மட்டுமல்ல இரவுpல் கயர்ப்பாக்கு சாப்பிடக்கூடாது என்றும் செல்வத்துக்குத் தெரியும்.

வளவுக்குள்ளேயே கமுக மரங்கள் சில இருக்கின்றன.வீட்டு வளவுக்குப் பக்கத்துக் காணியில் ஆயிரம் வெற்றிலைக் கொடிகளும் இருக்கின்றன. பாக்கு வெற்றிலைக்கு அவர்களுக்கு குறைவில்லை.

பாக்கைச் சீவி வெற்றிலைக்கு மேல் வைத்த செல்வம் தகப்பனுக்கும் தாயாருக்கும் கொடுக்கிறான்.

மிக அரிதாக வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் செல்வத்திற்கு இருந்தாலும் தாய் தகப்பனுக்கு முன்னால் போட மாட்டான்.சில வேளைகள் தாய் அதைக் கண்டால் அதை ஒரு பிரச்சினையாக எடுக்கமாட்டாள்.தகப்பனும் கண்டும் காணாமல் இருந்துவிடுவார்.

தாய் தகப்பனுக்க வெற்றிலை பாக்கைச் சீவிக் கொடுத்தவனின் மனம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அதைக் காட்டிக் கொள்ளாமல் வெறும் பாக்குச் சீவலை வாயிலை எடுத்துப் போட்டவன்,’அப்பா இன்னொரு விசயம் வாற சனிக்கிழமை நீங்களும் அம்மாவும் காரைநகரிலை நடக்கிற கல்யாண வீட்டுக் போறதாகச் சொன்னனீங்கள் என்னையும் வரச் சொன்னனீங்கள், நான் வரேலை நீங்கள்

இரண்டு பேரும் போயிட்டு வாங்கோ என்று செல்வம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ ஏன் நீ வரேலை „ என்று தாய் இடைமறித்துக் கேட்க,’ அம்மா நான் அங்கை வந்து என்ன செய்யப் போறன், முழு நாளும் சும்மா ஒரு இடத்திலை உட்கார்ந்திருக்க என்னாலை முடியாது, அந்த நேரத்திலை ஏதாவது புத்தகத்தையாவது வாசிக்கலாம், காலமை வெளிக்கிட்டுப் போனமென்றால் திரும்பி வீட்டுக்கு வந்து சேர இரவாகிவிடும்.எனக்கு விசர் பிடிச்சிடும் நான் வரேலை அப்பா….’

„எங்கடை வெங்காயத் தோட்டத்துக்குள்ளை ஒரு மாதத்துக்கு முந்தி புல்லுப் பிடிங்கிவிச்சனாங்கள், ஆனால் இப்ப திரும்பவும் புல்லு நிறைஞ்சு கிடக்குது அதை அப்படியே விட்டமென்றால் வெங்காயம் சரியாய்ப பெருக்காது, வெங்காயத்துக்குள்ளை கோரையும் பசும்புல்லும் இப்ப அறுகம்புல்லும் படரத் தொடங்கிவிட்டுது’.

„அவற்றை உடனடியாகப் பிடுங்காவிட்டால் வெங்காயப் பயிர் வீணாய்ப போயிடம் நான் நடுகைக்காரிகளைக் கொண்டு சனிக்கிழமை அவற்றைப் பிடுங்கிவிக்கிறன்.நீங்கள் போயிட்டு வாங்கோ’ என்றவன் தகப்பனின் முகத்தையும் தாயின் முகத்தையும் கூர்ந்து பார்க்கிறான்.

„ செல்வம் சொல்றதும் சரிதான் அவன் வந்து அங்கை என்ன செய்யப் போறான் நடுகைக்காரிகளைக் கூப்பிட்டு அவன் வெங்காயத்துக்குள்ளை கிடக்கிற புல்லைப் பிடுங்கிவிக்கட்டும், அதோடை கொழுந்துத் தோட்டப் புல்லையும் பிடுங்குவிக்க வேணும் அதற்கும் ஒருக்கா நடுகைக்காரிகளுக்கு சொல்லி வை’ என்ற தகப்பன் உன்னிடம் ஒன்றை கனநாளாய் கேட்க வேண்டும் என்று நினைச்சனான், நீ எச்.எஸ்.சி படிக்க மாட்டன் என்று அடம்பிடிக்கிறாய், அதிலை படிச்சுப் பாஸ் பண்ணினால் யூனிவேர்சிற்றிக்குப் போகலாம், ஆனால் நீ அதையும் செய்யிறாய் இல்லை.

„ஏதாவது வேலைக்கு போற யோசனையும் உனக்கு இல்லை.நீ என்ன யோசனையிலை இருக்கிறாய்.வயசு போகப் போக எல்லாமே கஸ்டமாயிடம், கையைவிட்டுப் போயிடும் , ஏதாவது திட்டமிருக்குதா „ என்று தகப்பன் கேட்டதை அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாதலால் என்ன பதிலைச் சொல்லலாம் என அவன் மௌனமாக பதிலைத் தேடிக் கொண்டிருக்கையில் தாயார்’ கொண்ணைமாரும் அவையின்ரை பெண்சாதிமாரும் அக்காமாரும் அவையின்ரை மனுசன்மாரும் நல்ல நல்ல உத்தியோகத்திலை இருக்கினம்’.

அவை இஞ்சை வருகிற போதெல்லாம் ஞானத்தை செல்லம் குடுத்துக் கெடுத்து வைச்சிருக்கிறன் என்று என்னைக் கரிச்சுக் கொட்டிப் போட்டுப் போயினம்.

புடிப்பிலை கெட்டிக்காரனை ஊர் அளக்க வைச்சிட்டு இருக்கிறம் என்று குறை சொல்லுகினம், உன்ரை அறிவை வீணாக்காதை, அந்த நடுகைக்காரிக்கு படிப்பிக்கப் போறன் என்று கேட்டாய் அது நல்ல தொண்டு என்பதற்காக யார் எவர் என்று யோசிக்காமல் ஓமெண்டு சொன்னம்.

படிச்ச படிப்பு பிரயோசனப்பட வேண்டும்.நீ சின்னப் பிள்ளை இல்லை யோசிச்சு முடிவெடு என்று தாய் சொன்னதும்’ „தெல்லிப்பழை பலநோக்கக் கூட்டுறவுச் சங்கக் கடையளுக்கு மனேஜர் தேவையாம் அதற்கு அப்பிளிகேசன் போடப் போறன், அதிலை எடுபட்டால் அதிலையிருந்து கொண்டு எச்.எஸ்.சி சோதனையை பிரைவேட்டாக எடுக்கலாம் இல்லாட்டி ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாம்’ என பதில் சொல்கிறான்.

„ம்’ எண்ணென்டாலும் யோசிச்சு செய்ய என்று சொன்ன தகப்பன், செம்பிலையிருந்த தண்ணீரிலை வாயைக் கொப்பிளிச்சுவிட்டு படுக்கப் போய்விடுகிறார். தாயாரும் எழுந்து போய்விடுகிறார்.

மகன் காரைநகருக்கு வ7ராமலிருப்பதற்கு அவனிடம் ஏதோ திட்டம் இருக்குது என்பதை தாய் உணர்ந்தாலும் அதை அவளால் கேட்க முடியவில்லை.பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் உணர்ந்தாலும் அவர்களால் கேட்க முடிவதில்லை.

பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதை தகப்பனிடம் அவன் தாமiரை இலைத் தண்ணீர் போல விபரித்த விதம் சில வேளை இரண்டு பேருக்குமிடையில் ஏதாவது …..ச்சே அப்படி ஒன்றுமிருக்காது என்று தன்னைத் திருப்திப் படுத்தினாள்.

காதலில் ஈடுபடுபவர்கள் உண்மையையும் பொய்யையும் கலந்துதான் அதை பெற்றோர்களுக்கு வெளிப்படுத்துவார்கள்.

இரண்டு நாள் பழக்கத்திலேயே செல்வமும் பார்வதியும் காதலுக்கும் அப்பால் சென்று கணவன் மனைவியாவது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.சிலருக்கு காதலன் காதலியாவதற்கு வருடக்கணக்காகும்.

சிலருக்கு மணித்தியாலக் கணக்காகும். பார்வதிக்கும் செல்வத்துக்குமிடையில் இரு நாட்களுக்குள் காதல் விஸ்வரூபமாக வளர்ந்து நின்றது.

 

இனி…?

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *