நாங்கள் யார்?…. 4 …. ( கட்டுரை ) …. ஏலையா க.முருகதாசன்.

நாங்கள் யார் என்பது குழுத்தன்மை விளித்தல்.உலக மக்களை நோக்கியேதான் இக்கேள்வியும் இக்கேள்விக்கூடாக ஒவ்வொரு தனிமனதனையும் அனைத்து பக்கங்களிலிருந்தும் ஆய்வு செய்யப்படுகின்றது.
நாங்கள் என்ற கேள்வி ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த அவனின் வாழ்நாளை ஒருநாள் என்ற உதாரணத்திற்குள் கண்டறிவதல்ல.
ஒரு குறிப்பிட்ட மனிதன் ஒவ்வொரு நாளென்றுக்குள்ளும் அப்பால் தொடர்ச்சியாக அவனிடத்தில் குண வேறுபாடுகள் விநாடிக்கு விநாடி காணப்படுகின்றன.
எக்ஸ் என்ற கதாபாத்திரம் எக்ஸ் என்ற குறியீட்டுக் கதாபாத்திரத்திற்கு மட்டுமே உரியதல்ல.பலரையும் அவர்தம் குண வேறுபாடுகளையும் இந்த எக்ஸ் என்ற உதாரண மனிதன் வெளிப்படுத்துவான்.
ஏகஸ் ரயிலில் போவதற்காக மேடையில் நின்று கொண்டிருந்தான்.அவன் ரயில் வரும் நேரத்திற்கு முன்பாக நேரத்தோடு வந்துவிட்டான்.மேடையில் இரண்டொருவரே நின்றிருந்தனர்.இன்றைக்கு மிகவும் வசதியாக போகலாம் என்று மகிழ்ச்சியடைந்தான்.நேரம் செல்லச் செல்ல பயணிகள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.இவர்களுக்கு வேறு வேலை இல்லையா இந்த ரயிலில்தான் போக வேண்டுமா என எரிச்சலடைந்தான்.
அவனருகில் ஒருவர் வந்தார்.அவர் இன்றைக்காவது கொஞ்சம் இடவசதியாக நெருக்கமில்லாமல் போகலாம் என்றிருந்தேன்,இன்றைக்கும் சனமாகத்தான் இருக்குது என்று சலித்துக் கொண்டார்.
அவரின் சலிப்பைக் கண்ட எக்ஸ் அவரைப் பார்த்து நீங்கள் அப்படி என்னென்று சொல்ல முடியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும்,அவரவர் தேவைக்காக தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரயிலில் பயணிக்க வந்திருக்கிறார்கள் என்றான்.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு மேடைக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்த பயணிகள் மீது எரிச்சலடைந்து தான் வசதியாக போகலாமென்றிருக்க இப்படிக் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்களே என்று நினைத்தவன் இப்பொழுது இன்னொரு பயணியிடம் எல்லாருக்கும் ஒவ்வொரு
தேவையிருக்கும் அதற்காக வந்திருக்கிறார்கள் என்றான்.
ரயில் வந்ததும் இறங்குபவர்களுக்கு வழிவிடாமல் நெருக்கியடித்து ஏறுவதற்கு முதல் ஆளாக எக்ஸ் நின்றான்.முதலில் இறங்கவிடுங்கள் என்று இறங்குவதற்காக வந்து கொண்டிருந்தவர்களுக்காக பரிந்துரைத்த எக்ஸ் தான் முதலில் ஏற வேண்டுமென்பதில் தீவிரம் காட்டிக் கொண்டே பக்கத்தில் நின்ற
சகபயணியிடம்,பயணிகள் யாருக்குமே பழக்கவழக்கங்கள் தெரியாது என்று முணுமுணுத்தான்
உள்ளே ஏறியவர்கள் மூலை இருக்கையைத் தேடி ஓடினார்கள்.மூலை இருக்கையை எக்ஸின் கண்கள் தேடின.மூலை இருக்கைகள் எல்லாவற்றிலும் பயணிகள் உட்கார்ந்திருந்தார்கள்.
சலிப்புடன் ஒரு இருக்கையில் உட்கார்ந்தான் எக்ஸ்.கொஞ்ச நேரம் பேசாமலிருந்தான்.தனக்குப் பக்கத்திலிருந்த மூலை இருக்கைப் பயணிiயும் எதிரே இருந்த மூலை இருக்கைப் பயணியையும் பார்த்து இவர்களிருவருக்கும் மூலை இருக்கையில் உட்கார வேண்டுமென்று என்ன அவசரம் என்று நினைத்துக் கொண்டே மெதுவாக முறுவலித்தான்.தானாகப் பேச்சைத் தொடங்கினான்.
என்னமோ இந்தச் சனங்களுக்கு மூலை இருக்கையென்றால் ஒரு வெறி.எங்கே இருந்தாலும் மூலை இருக்கைப் பயணிகளும்; மற்றைய இருக்கைகளில் இருக்கும் பயணிகளும் ஒரே நேரத்தில்தானே போவார்கள் எனச் சொல்லிச் சிரித்தான்.சிரித்துக் கொண்டே அவன் மனதில் உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் என நினைத்தான்.
அடுத்த ரயில் நிலையத்தில் ஏறியவர்களில் ஒருவர் அவனுக்குப் பக்கத்தில் காலை அகட்டி உட்கார்ந்தார். அவனுடைய பார்வை அவரின் கால்கள் இரண்டுக்கும் நடுவில் சென்றன, சிரித்தான்.
அவர் எதற்காக அவன் சிரித்திருப்பான் என ஊகித்து மெதுவாக கால்களை ஒடுக்கினார், அவனுடைய சிரிப்பில் கேலித்தன்மை இருப்பதை உணர்ந்த அவர் அவனைக் கோபமாகவும் வெறுப்பாகவம் பார்த்தார்.
அவன் அதை உணர்ந்ததனால் பரவாயில்லை அப்படியே இருங்கள் என்றான்.தனக்குப் பக்கத்திலும் எதிரே இருப்பவர்களையும் பார்த்தான்.தனது கண்களுக்கு புலப்படும் அனைவரையும் பார்த்தான், உட்கார்ந்திருக்க இடமில்லாமல் நின்றவர்களைப் பார்த்தான்.அதில் ஒரு பெண் லிப்ஸ்ரிக் பூசியிருந்தாள்.அவளின்ரை முகத்தின்ரை அழகிலை சொண்டுக்கு சாயம் பூசியிருக்கிறாள் என நினைத்தான்.
அவன் இறங்க வேண்டிய இடம் வந்தது.அவனருகோடு லிப்ஸ்ரிக் பூசிய பெண்ணும் இறங்கினாள்.இருவரும் படியிறங்கி நடக்கையில் நெரிசல் ஏற்பட்டது. அவனோடு சேர்ந்து இறங்கிய பெண்ணிடம் இந்தச் சனங்களுக்கு வேறு வேலையே இல்லையா.ரயிலில் போய் வந்து கொண்டிருக்குதுகள் என்றான். அவளும் ஓம் என்பது போல தலையை ஆட்டினாள் படிவிட்டு இறங்கி இருவரும் நடக்கையில் அவளைப் பாரத்து நீங்கள் அழகான பெண் நான் இதுவரையில் உங்களைப் போல அழகான பெண்கள் எவரையும் பார்த்ததில்லை என்றான்.
அவள் முகம் மலர்ந்து அகலக் கண்கள் திறந்து மகிழ்ச்சியுடன் ‘உண்மையாகவா’ என்றாள். அதிலும் நீங்கள் பூசியிருக்கும் லிப்ஸ்டிக் உங்களுடைய முகத்திற்கு இன்னும் அழகாக இருக்குது என்றான்.நான் உங்களை ரயிலில் பார்த்து எனது மனதுக்குள் வியந்தேன் என்றான்.
‘ஓ…அப்படியா உண்மையாகவா’ என்றாள் குதூகலத்துடன்.
எக்ஸ் யார்?.நாங்கள் யார் என்பதில் அவன் யார்?.
![]()