கவிதைகள்

ஏதுமறியாரடி ஞானத் தங்கமே!… ( கவிதை )….. சங்கர சுப்பிரமணியன்.

எங்கே இறைவன் இருக்கின்றான்
ஏழையென்றும் செல்வந்தனென்றும்
பாகுபாடு பார்த்திடாமல் இருக்கும்
அவ்விறைவன் எங்கே இருக்கிறான்

விலையுயர்ந்த ஆடையும் விரும்பாது
கிரீடம் பொன்வைர நகை வேண்டாது
எளிமையாய் இங்கு காட்சி தந்திடவும்
ஓர் இறைவனிங்கு எங்கே இருக்கிறான்

பாலிலும் தேனிலும் குளித்து மகிழாது
பொங்கலும் புளியோதரையும் கேளாது
விருந்தினராய் பக்தரெலாம் புறத்திருக்க
திரைமறைவில் உண்ணாதவன் எங்குளான்

எட்டாத உயரத்திலே அவன் இருக்கிறான்
மேகம் தவழ் மலைமுகட்டில் இருக்கிறான்
மழையாய் பொழிந்து உயிர்கள் மகிழ்ந்து
மாநிலத்தோர் சிறக்க அவன் இருக்கிறான்

அகழ்வாரைத் தாங்கும் இந்த மண்ணாயும்
அகிலத்தில் உயிர்வாழ மூச்சுக் காற்றாயும்
அவ்வுயிர் குளிராது பிழைக்க வெப்பமாயும்
அத்தனையாயும் இருந்து காப்பவனிருக்க
எங்கெங்கே தேடி எதையோ தேடுகிறான்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *