தமிழரின் சறுக்குமர அரசியலும் அரசின் ஆக்கிரமிப்பு அரசியலும்!… ஏலையா க.முருகதாசன்

நீண்ட பல ஆண்டுகளாக தமிழர்களின் அரசியல் சறுக்குமர அரசியலாகவும் முச்சந்தியில் நின்று கொண்டு எந்தப் பக்கம் போவது என்று தடுமாறும் அரசியலாகவுமே இருந்து வருகின்றது.
சோற்றுக்கான அரசியல் எமக்கு வேண்டாம் உரிமை சார்ந்த அரசியலே வேண்டும் என்ற காலத்தை எடை போடாத அரசியலுக்கா அல்லது அபிவிருத்தி அரசியலுக்கா முக்கியத்துவம் கொடுப்பது என்பதை தீர்மானிக்க முடியாத அரசியல்வாதிகள் மக்களை அப்பப்ப தமது கருத்துக்களால் சிப்பிலியாட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.
வீதிகள் ஒழுங்காக இல்லாதிருந்து அதில் போவோர் வருவோர் பாதிக்கப்படும் போது தமிழர் பகுதிகளில் வீதிகள் சரியில்லை அபிவிருத்திகள் எதுவும் இல்லை.இலங்கை அரசு தமிழருக்கான அரசு இல்லை எனச் சொல்லும் நாம்,வீதிகள் செப்பனிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தால் வீதி முக்கியமல்ல இராணுவம் போக்குவரத்துச் செய்வதற்காகவேதான் போடப்பட்டது என்று சொல்பவரும் நாங்கள்.
உரிமை என்பதன் அர்த்தமே அபிவிருத்தியும் உட்பட்டதுதான் என்பதை தெரியாதவர்கள் அல்ல எமது அரசியல்வாதிகள்.
அதைத் தெரிந்து கொண்டும் தாம் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம் என்ற மாயைத் தோற்றத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா அதற்குத்தான் இத்தகைச் சொற்சிலம்பமுமாகும்.வீதிகள் நவீனப்படுத்தப்படத் தேவையில்லை என்று கூட்டம் போட்டு கதை சொல்லிவிட்டு அந்த வீதியால் போகிறவர்கள்தான் எமது அரசியல்வாதிகளும் அவர்கள் சொல்வதற்கெல்லாம்
தாளம் போடும் நாமும் அந்த வீதியால போய்க் கொண்டிருப்போம்.
இலங்கை அரசு நில ஆக்கிரமிப்புச் செய்கிறது என்று உருவெடுத்து ஆடுகிற நாம் இலங்கைத் தலைநகரிலும் மற்றும் தென்னிலங்கையிலும் வணிகத்தை நடத்திக் கொண்டும் மாடிக் கட்டிடங்களையும் விடுதிகளையும் வாங்கிக் குவிப்பவர்களும் நாங்கள்தான்.
ஈழத்தமிழரின் அரசியல் பயணத்தைக் கண்னோட்டம் விட்டவர்கள் இறுதியில் ஆயுதப் போராட்டத்துடன் எமது போராட்ட முனைப்புகள் அத்தனையும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன என்பதை மிக கவனமாக அவதானித்தவர்கள் பல சீரணிக்க முடியாத உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள்.
பல நாடுகளில் பல்லினங்கள் வாழுகின்றன. அங்கெல்லாம் இன வேறுபாடுகளும் அரசியல் ரீதியாக ஒடுக்குமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை ஏன் தீர்வுக்கு வரமுடியவில்லையயென்றால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டடிலையும் ஆட்டிவிடும் ஒரு அரசியல் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதே ஆகும்.
இந்தத் தொட்டிலை ஆட்டிறவர்கள் யார் என்றால் இந்திய அரசுதான்.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் வகிபாகத்தை நன்கறிந்து இலங்கை எப்பொழுதுமே குழப்பத்தில் இருக்க வேண்டும் என்ற உளவு வேலையைச் செய்வது இந்தியாதான்.
இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் வகிபாகம் எப்படியென்றால் குறியீட்டு வழியாகச் சொல்வதானால் ஒரு மதிலில் எற நினைப்பவனின் கையை பிடித்து உதவி செய்வது போலவும் அவனின் இன்னொரு கையை காலால் மிதிப்பதுந்தான் இந்திய அரசின் நுட்பமான
அரசியல்.கைகொடுப்பதுதான் பொதுமக்களின் அவதானத்திற்கு வருமேயன்றி இன்னொரு கையை காலால் நசுக்குவது பொதுமக்களின் கவனத்திற்கு வரவே வராது.
தாயும் பிள்ளையுமென்றாலும் வாயும் வயிறும் வேறு வேறுதான் என்பதுதான் ஈழத்தமிழரின் தமிழகத் தமிழரோடு சார்ந்து தமிழார்ந்த உணர்வுக்கும், ஈழத்தமிழர் வாழும் நாட்டுக்குமான வாழ்வுக்குமான வித்தியாசமாகும்.
தமிழகத் தமிழரும் ஈழத்தமிழர்களும் இனத்தால் தமிழராக இருந்த போதிலும் தமிழகத்; தமிழர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஈழத்தமிழர்கள் (ஈழம் என்பதும் இலங்கையைக் குறிக்கும் சொல்லேயாகும்) இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதுந்தான் யதார்த்தமான உண்மையாகும்.
நாம் எமது அரசியல் பயணத்தில் அதிகமான காலத்தை உணர்ச்சிகரமான அரசியலிலேயே செலவழித்து வந்தோம் மட்டுமல்ல தொடர்ந்தும் அதனைச் செய்துதான் வருகிறோம்.
பண்ணையார் வீட்டு அடிமைத் தொழிலாளி மாதிரி அடிக்கடி இந்தியாவின் அறிவுரைகளைக் கேட்பது என்பது தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் இயலாமையையே காட்டுகின்றது.
இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் பச்சை மண்ணும் சுட்ட மண்ணுமாக இருக்க வேண்டுமென்பதுதான் இந்திய அரசின் திட்டம்.இலங்கை அரசிற்கெதிராக போராளிக் குழுக்களை வளர்த்துவிட்டவர்களும் அவர்கள்தான், அழித்தவர்களும் அவர்கள்தான்.
போராளிக் குழுக்களால் போரில் வெற்றியடைய முடியாதென்பதும் வெற்றியடையக்கூடாதென்பதும் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.எனினும் அதை நோக்கி மக்களை அணிதிரள வைத்தமையும் அந்த அணிதிரள்வை சிங்கள இனமும் சிங்கள அரசியல்வாதிகளும்
அதிருப்தியுடன் ஈழத்தமிழரை உற்று நோக்க வைத்தலையும் செய்தவர்களின் தந்திரத்தை தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்த போதும் அவர்கள் இந்திய இராஜதந்திர சிலந்திவலை அரசியலில் சிக்குப்பட்டுவிட்டார்கள்.
இது ஒரு புறமிருக்க சிங்கள மக்களில் கணிசமானவர்களின் மனதில் தமிழரைப் பற்றிய எண்ண ஓட்டம் எதுவென அறியத் தவறிக் கொண்டேயிருக்கிறோம் என்பதும் உண்மையே.
பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் அரசாங்க திணைக்களங்களில் உயர் பதவி வகித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே.இதனைச் சராசரி சிங்களக் குடிமகன் எவ்வாறு நோக்கினான் என்பதும், தாங்கள் பெரும்பான்மையாக இருந்தும் தங்களால் ஏன் உயர் பதவிகளில் இருக்க முடியவில்லை என்ற வாழையடி வாழையாக வந்த தொடர் சிந்தனையும் பட்டறிவு வாயிலாக அவர்கள் கற்றுக் கொண்டமையுந்தான் இலங்கையரசு நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கும் நில,சமய பண்பாட்டு ஆக்கிரமிப்பாகும்.
இலங்கையரசை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டவர்கள் வேறு யாருமல்ல எமது தமிழ் அரசியல்வாதிகளும் உரிமைக்காக ஆயுதமெடுத்த போராளிகளுமே.அவர்கள் சொல்வதற்கெல்லாம் தாளம் போட்ட நாங்களுமேயாகும்.
எமது பக்கத்தில் என்ன பிழைகள் இருக்கின்றன என்பதை ஒரு போதுமே யாருமே சிந்திப்பது இல்லை.அப்படிச் சிந்தித்தவர்களுக்கு கைவசம் வைத்திருப்பது துரோகிப்பட்டம்.
எமது போராட்டத்தில் தோல்வி ஏற்படும் போதெல்லாம் நாம் யாருடன் மோதுகிறோம்.எமது வலு என்னவென்பது பற்றி யோசிப்பதே இல்லை.பிரேமதாசாவுடன் ஓப்பந்தம் செய்து இந்திய இராணுவத்தை ஈழமண்ணிலிருந்து போகச் செய்த
போது நாம் என்ன செய்தோம் என்றால்,கொக்கரித்தோம் உலகின் நான்காவது காலால்படையையே தோற்கடித்தோம் என்று தாயகத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி வீராப்பு வசனம் பேசினோம்.
சரி ஒரு தந்திரச் செயலாகச் செய்தோமல்லவா காலத்தை எடைபோட்டு வாயை மூடிக்கொண்டு பேசாமலிருந்திருக்க வேண்டியதுதானே.தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் வென்று தருவார்கள் என்ற தவறான எதிர்பார்ப்பை இன்னமும் எமது அரசியல்வாதிகள் நம்பிக் கொண்டிருப்பார்களானால் அவர்களுக்கு அரசியல் தெரியாதென்பதே அர்த்தமாகும்.
ஜி.ஜி.பொன்னம்பலம் கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனையில் காகிதத் தொழிற்சாலையையும் ,வடக்கில் காங்கேசன்துறைச் சீமெந்து தொழிற்சாலையையும் , பரந்தனில் இரசாயணச் தொழிற்சாலையையும் கொண்டு வந்த போது தொழிற்சாலைகளா முக்கியம் உரிமை முக்கியமென்று ஜி.ஜி .பொன்னம்பலத்திற்கு எதிரானவர்கள் சன்னதமாடினார்கள்.வடக்கு கிழக்கை இணைத்து தந்த போது அப்போதும் சன்னதமாட வைக்கப்பட்டோம்.
இப்படி மக்களை சன்னதமாட வைப்பதில் எமது அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.இலங்கை அரசாங்கம் தமிழர் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்வதற்கு தமிழர்கள் அனைவருமே பொறுப்பானவர்களாகும்.
எமது சரியான வலுவை நாம் உணரவே இல்லை.சறுக்கு மரத்தில் ஏறும் அரசியலையே செய்து கொண்டிருக்கிறோம்.அதே வேளை இலங்கை அரசு முழு இலங்கையர்களுக்கெனில் தமிழரும் இலங்கையரெனில் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பது ஆட்சிமுறை அறத்துக்கே முரணானது.புத்த கோட்பாட்டுக்கே
இழுக்கானதாகும்.அதனை நடைமுறை இலங்கை அரசு உணர வேண்டும்.
![]()