கவிதைகள்

மங்கலம் பொங்கிடப் பொங்கலே வா!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மங்கலம் பொங்கிடப் பொங்கலே வா

மனமெலாம் மகிழ்ந்திடப் பொங்கலே வா

சொந்தங்கள் இணைந்திடப் பொங்கலே வா

சுமையெலாம் இறங்கிடப் பொங்கலே வா !

 

வறுமைகள் வரண்டிடப் பொங்கலே வா

வளர்ச்சிகள் மிகுந்திடப் பொங்கலே வா

தொழிலெலாம் சிறந்திடப் பொங்கலே வா

துணிவது நிறைந்திடப் பொங்கலே வா !

 

பட்டதுன்பம் போயகலப் பொங்கலே வா

பார்பிடித்த நோயகலப் பொங்கலே வா

மட்டற்ற மகிழ்ச்சிதரப் பொங்கலே வா

மாண்பற்ற செயலகலப் பொங்கலே வா  !

 

மருத்துவம் விரிந்திடப் பொங்கலே வா

மாண்டிடக் கொரனா பொங்கலே வா

மாநிலம் விடிவுறப் பொங்கலே வா

வாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா !

 

வயலுழுவார் வாழ்வுயரப் பொங்கலே வா

வறுமையெனும் சொல்லகலப் பொங்கலே வா

மதுநினைப்பு மனமகலப் பொங்கலே வா

வாலறிவன் மனநிறையப் பொங்கலே வா !

 

ஆன்மீகம் செறிந்திடப் பொங்கலே வா

அறமது பரவிடப் பொங்கலே வா

ஆணவம் அடங்கிடப் பொங்கலே வா

அன்பெங்கும் மலர்ந்திடப் பொங்கலே வா !

 

ஊழல்கள் ஒழிந்திடப் பொங்கலே வா                   

உத்தமர் வெளிவரப் பொங்கலே வா

ஏழைகள் சிரித்திடப் பொங்கலே வா

இன்பமே பொங்கிடப் பொங்கலே வா !

 

கற்றவர் சிறந்திடப் பொங்கலே வா

கயவர்கள் மறைந்திடப் பொங்கலே வா

நற்றமிழ் செழித்திடப்  பொங்கலே வா

நன்மைகள் விளைந்திடப் பொங்கலே வா  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *