கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..19…. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

இந்து மதம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒன்றுதான் என்றால் இந்த வேண்டுதலை எல்லா இந்துக்களும்
செய்வார்களா? ராம நவமியை இங்கு பொண்டாடுவதில் நாட்டம் காண்பிப்பவர்கள் உத்திரப்பிரதேசத்தில் தீமிதிப்பார்களா? கல்கத்தா காளிக்கும் மைசூர் சாமுண்டிக்கும் ஹரித்துவாரிலும் ரிசிகேஷிலும் கோவில் எடுப்பார்களா?

சமீபத்தில் கர்னாடாகாவில் சிவனைமட்டும் வணங்கும் லிங்காயத் இன கன்னடமக்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல வீரசைவர்கள்
என்று சட்டப்படி வேறு பிரிவாக மாறிவிட்டார்களே அவர்களை நீ ராமரைத்தான் கும்பிட வேண்டும் மகாசிவராத்திரி எல்லாம் கூடாது என்றால் சும்மா இருப்பார்களா?

உலகின் முதல் சித்தன் சிவன் என்றும் உலகின் முதல் மதம் ஆசீவகம் என்று ஒரு கூற்றிருக்க மகாபாரதம்தான் இந்து நூல் சிவபுராணம் எல்லாம் இந்துமதநூல் என்றால் இந்த லிங்காயத்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது கிரந்தத்தை விட்டு சீக்கியர்கள் மகாபாரதத்தை மதநூலாக ஏற்பார்களா? இதெல்லாம் ஒன்றாக இருக்கும் மக்களை சீண்டிப்பார்த்து கலகமேற்படத்தனே வழிவகுக்கும்.

மேலும் இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுபவரை மரக்கறிதான் சாப்பிடு என்று வற்புறுத்தினால் மரக்கறி சாப்பிடுபவரை மான்கறி சாப்பிடு என்று கூறவதுதானே நியாயம். ராஜஸ்தானியர் போல் மலையாளிகள் உடை உடுத்துவார்களா? அல்லது தமிழ்நாட்டினர்
போல் பீஹாரிகளை உடை உடுத்தச் சொல்லமுடியுமா? சரி சரி, நான் சென்னைக்குத்தானே போகிறேன் எதற்கு டில்லி செல்லும் பரிசோதனை வரிசையில் நிற்கிறேன். கொரோனா வந்து எல்லாம் மறந்து போனதால் எல்லாமே தலகீழாக மாறிவிட்டது.

இல்லாவிட்டால் அரசு ஊழியராக
இணையவழியில் பணிசெய்யும் சிவநாதன் கோட், டை எல்லாம் அணிந்திருந்தாலும் பெரும்பாலான நாட்களில் இடுப்புக்கு கீழ் லுங்கியுடனும் சிலசமயங்களில் அதுகூட இல்லாமல் உள்ளாடையுடன் இருந்தபடி பணிபுரிவாரா? எல்லாம் கொரோனா (கலி) காலம். ஆதலால் எனக்கும் எழுதிக் கொண்டிருந்ததை விட்டு எட்டுகாத தூரம் வந்துவிட்டதற்கும் மன்னிப்பு உண்டல்லவா! ஆதலால் விட்ட இடமான கயிறு குத்துதலில் இருந்து தொடங்குகிறேன்.

இந்த வேண்டுதலை நிறை வேற்றுமவர்கள் முதலில் கட்டுப்பாட்டோடு விரதமிருக்க வேண்டும். பின் வேண்டுதலை நிறைவேற்றுபவர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு பூஜை நடக்கும். அதன்பின் அவரது இரு விலாப்புறமும் இடுப்பில்
உள்ள சதைப்பகுதியில் முன்புறமிருந்து பிரம்பின் ஒருபுறம் பொருத்தப்பட்ட கூரான முனையால் குத்தி பின்புறமாக இழுப்பார்கள்.

பிரம்பின் நீளத்தில் சரிபாதி வேண்டுதல் செய்பவரின் முன்னும் பின்னும் இருக்க அதை முன்புறமும் பின்பிறமும் நிற்கும் ஒருசிலர் கீழே விழாது பிடித்துக் கொள்வார்கள்.  அதுபோன்று அடுத்த விலாப்புறமும் குத்தப்பட்டு பிரம்பை முன்னும் பின்னும் சிலர் பிடித்துக் கொள்வார்கள். இப்படி குத்தும்போது வேண்டுதல் செய்பவர் இரு கைகளையும் உயர உயர்த்தி கைகளில் சூலமொன்றை பிடித்திருப்பார்.

இப்படி குத்தி முடித்தபின் அவர் கையிலிருந்த சூலத்தை வாங்கிவிடுவார்கள். அதன்பிறகு அவர் கைகளை மடக்கி பின் மடக்கிய கைகளை
மடக்கிய நிலையில் உட்புறத்தால் குத்தப்பட்ட விலாப்பகுதிகளில் இரு கைகளையும் ஓங்கி அடிக்கவேண்டும். இப்போது அவரின் முன் இருபுறமும் பிரம்பைப் பிடித்துக்கொண்டு நிற்பவர்கள் மெதுவாக ஓட அவரைத் தொடர்ந்து கயிறு
குத்தப்பட்டவரும் பின்பிறம் பிரம்பை பிடித்திருப்வர்களும் ஓட ஆரம்பிப்பார்கள். அப்படி ஓடி நான்கு தெருக்களையும் சுற்றி கோவிலுக்கு வர வேண்டும்.

இவ்வாறு நான்கு தெருக்களிலும் ஓடிவரும்போது கயிறு குத்தப்பட்டவர்
இரு கைகளாலும் மேற்கூறியபடி இரண்டு விலாப்பகுதியிலும் அடித்துக் கொண்டே ஓடவேண்டும். அவர்களுடன் மற்றவர்களும் ஓடுவார்கள். அப்படி ஓடிக் கொண்டிருக்கும்போது வேறு சிலர் மஞ்சள் கலந்த நீரை குத்திய இடத்தில் ஊற்றிக்கொண்டே வருவார்கள். நான்கு தெருக்களையும் சுற்றி கோவிலுக்கு வந்ததும் பிரம்பு உருவப்பட்டு குத்திய இடத்தில் மஞ்சள் தடவப்படும். இரண்டு வாரங்களில் மருந்து ஏதும் போடாமல் காயம் ஆறிவடும்.

தமிழ் நாட்டில் வேறு சில இடங்களிலும்
இதுபோன்று கயிறு குத்துதல் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்பணி கரிசல்குளத்தில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

இவ்வளவு புகழ்பெற்ற கோவில் “ப” வடிவில் மேற்கூரை இன்றி பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளது. மேற்கூரையின்றி எளிமயாக இருக்க வேண்டும் என்பது இந்த அம்மனின் விருப்பமாம். கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பில் வைரக்கிரீடத்துடன் கடவுள் ஆடம்பரமாக இருக்கும்போது முதலாளித்துவ கோட்பாட்டை ஏற்காத பொதுவுடமைத் தத்துவத்தை விரும்பும் கடவுளரும் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button