கவிதைகள்
காதல் ஊற்றெடுக்கும்!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

குடமதிலே தண்ணீர் மொண்டு
குவளை மலர் பறித்து எடுத்து
கூத்தலிலே சொருகி வைத்து
இடுப்பில் குடம் அணைத்தவளே
மல்லுவேட்டி இடுப்புலே கட்டி
மார்பு முழுதும் சந்தணம் பூசி
சிவப்பு கடுக்கன் காதில் மாட்டி
கருத்த மச்சான் வந்திருக்கேன்
மனதில் என்னை இருத்தி வைப்பாய்
நாம் மகிழ்ந்திருக்க நீ வந்திடுவாய்
செவ்விழநீர் தோப்புக்குள்ளே நீ
சிரித்துச் செல்லும் அழகைக்கண்டு
குடமிருக்கும் அந்த இடைதனிலே
கரமிருந்து அழகுசெய்ய துடிக்குதடி
இடம் கொடுத்து இசையச் சம்மதமா
குமரியே நீயும் அதைச் சொல்லிவிடு
குடமதை நீயும் கீழே இறக்கி வைத்து 
குறிப்பதனை எனக்கு காட்டி நின்றால்
குடம் இருந்த இடம் என் கரமிருக்கும்
மனமெல்லாம் காதல் ஊற்றெடுக்கும்!
– சங்கர சுப்பிரமணியன்.
![]()