கட்டுரைகள்

ரஜனிகாந்தும் பாரதிராஜாவும் தமிழருவி மணியனும்!… ஏலையா க.முருகதாசன்.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வரமாட்டன் என்று அவர் சொன்ன தகவல்களால் உலகை மூடி சுனாமியே வந்து பூமியில் உள்ள அனைத்தையும் துடைத்தெடுத்த மாதிரி பெரும் கவலை கொண்டு அவரின் இரசிகர் வெள்ளம் வாழ்க்கையே சீரழிந்து போய்விட்டது என்பது போல கொரோனாவுக்கு கவலைப்படுவதைவிட மிக மிக அதிகம் கவலைப்பட்டு ஒதுங்கி ஒடுங்கிப் போய் தமது வாழ்க்கை பாலைவனமாகிவிட்டது போலவும் வாழ்க்கையே சூனியமாகவிட்டது போலவும் தளர்ந்து போய் இருக்கிறார்கள்.

மருத்துவத்துறையில் உச்சம் தொட்ட வல்லாதிக்க நாடுகளையே, பெரும் பெரும் விஞ்ஞானிகளையே,பெரும் பெரும் தலைவர்களையே நிலைகுலையச் செய்த கண்ணுக்குத் தெரியாத கோவிட் 19 இன் தாக்கம் பரவிய போதுகூட ரஜனிகாந்துக்காக கவலைப்பட்டது போல இந்த இரசிகர் கூட்டம் கவலைப்படவே இல்லை.

தமிழகத்தைக் காப்பாற்ற ரஜனிகாந்த் ஒருவரால் மட்டுமே முடியும் என்று உருவாடிய தமிழருவி மணியன் உட்பட சிலரை நினைத்தால் அவர்களுக்கு அரசியல் தாற்பரியமே தெரியாதோ என நினைக்கத் தோன்றுகின்றது.

தமிழருவி மணியன் தான் அறவழியில் வாழ்கிறேன் என அவர் அடிக்கடி சொல்ல வேண்டிய தேவை என்ன. ஒருவர் தனதுமனைவி பிள்ளைகளுக்கு உழைத்துக் கொடுக்கிறேன் என்று சொன்னால் சிரிப்பார்களே தவிர, பாருங்கள் அவர் தனது மனைவி பிள்ளைகளுக்கு உழைத்துக் கொடுக்கிறார் என்று பாராட்டவா போகிறார்கள்.

அது போலத்தான் தமிழருவி மணியனும் தான் அறவழியில் வாழ்கிறேன் என்று சொல்வதாகும்.அவரைப் போல சொல்லாமல் பல இலட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த அறிகுறியைக் கண்ட ரஜனிகாந்த்தும் அவரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டால் தனக்கு இலாபம் தனது கட்சி உள்ளும் புறமும் ஆன்மீகக் குடிசை என மக்களை நம்ப வைக்க முடியும் என்று அவரை இணைத்துக் கொண்டார்.

அரசியல் என்றால் தான் நடிக்கும் திரைப்படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில் பத்துப் பேரை அடித்து நியாயத்தை நிலை நாட்டுவது போல நடிப்பதற்கு ஒப்பானதுதான் என்று ரஜனிகாந்த் மட்டுமல்ல அரசியலுக்கு வரத் துடிக்கும் எல்லா நடிகர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

ஊழலாலும் இலஞ்சத்தாலும் வளர்ந்துவிட்ட நாடுகளில் தூய்மையான அரசியல் என்பது கல்லில் நார் உரிப்பது போன்றதே.தூய்மையான அரசியல் என்பது இன்றைய சூழலில் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

கல்விமான்கள் நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டில் கல்விசார்ந்த புத்திஜீவகளிலிருந்து மக்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெளிவான விளக்கத்தைச் சொல்லி அதை உள்வாங்கிய மக்களைக் கொண்ட சமுதாயத்திலிருந்து யாரைத் தேர்வுசெய்ய வேண்டும் என்ற சிந்தனையற்றவர்களா தமிழக மக்கள்.

இதை யோசித்தால் தமிழகம் என்பது சினிமா மாயையில் அகப்பட்டுள்ள மாநிலமா என நினைக்கத் தோன்றுகின்றது.

தமக்கு இருக்கும் இரசிகர் பட்டாளத்தை அலை மோதும் அரசியல் ஞாயிறுகள் என்று நினைத்துவிட்ட நடிகர் ரஜனிகாந்தும் ,நினைத்துக் கொண்டிருக்கும் சில நடிகர்களும் அரசியல் என்பது மிகச் சுலபமானது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்டமைப்பு அலகுகளை சிறப்பாகக் கொண்ட நாடுகளில் அரசியல் என்றால் என்ன என்று மூலை முடுக்கெல்லாம் கற்றுக் கொண்ட அரசியலாளர்களே அந்தந்த நாடுகளின் அரசுகளில் அங்கம் வகிப்பதற்கு பல ஆண்டுகளின் அனுபவமும் அரசியல் செயல் திறனும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது.

இந்த நிலையில் ரஜனிகாந்த் தலைவா என்றும் வாழ்க என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் இரசிகர்கள் அனைவரும் புத்திஜீவிகள் எனவும் அவர்களுக்குள் அதீத அரசியல் அறிஞர் என நினைத்துக் கொண்டு அரசியலில் பொழுது போக்கிற்காக இறங்க முயற்சித்தமை ரஜனிகாந்தின் பலவீனமே.

நடித்து முடித்து பணம் சம்பாதித்து முடித்து அதற்குப் பிறகு அரசியல் அரியாசனத்தில் உட்காரலாம் என்று நினைத்தமை ரஜனிகாந்த் தமிழக மக்களை தவறாக எடை போட்டமையேயாகும்.

நீண்ட நெடுங்காலமாக பொது வாழ்விலும் அரசியலிலும் ஈடுபட்டு தான் நம்பும் கட்சி மீது பற்றுதியுடன் தன் மக்கள் சந்திக்கும் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்ட சாதாரண அரசியல் தொண்டனுடன்

ரஜனிகாந்தை ஒப்பிடும் போது அவர் அரசியலில் சீரோவேதான் அதாவது பூஜ்ஜமே.

திருக்குறளில் சொன்னவற்றையும் ஒளவையார் சொன்னவற்றையும் தனிமனிதனும் சரி சமுதாயமும் சரி அரசியல்வாதியும் சரி அதைக் கடைப்பிடித்தாலோ சட்டமாக்கினாலோ அதுவே தூய்மையான அரசியலாகிவிடும்.

ஆனால் தமிழக மக்கள் அப்பொழுதுதான் கற்காலத்தைவிட்டு காட்டு வாழ்ககையை விட்டு வந்தவர்கள் போல ரஜனிகாந்த் தமிழக மக்களுக்கு புத்திசொல்ல வெளிக்கிட்டமை அவருடைய அறியாமையையே காட்டுகின்றது.

ஊடகங்கள் அவரை மாபெரும் அரசியலாளர் என தமது பத்திரிகை விற்பனைக்காக அவர் போகுமிடமெல்லாம் துரத்தி துரத்தி அவரின் கருத்தைக் கேட்க அவரும் தமிழகத்தில் தன்னைத்தவிர யாருமே அரசியலாளர் இல்லை என கற்பனையில் மிதந்துதிர்த்த சொற்கள் யாவும் தத்துவஞானிகள் சொன்ன அரசியலுக்கான வரைவிலக்கணம் என்று அவற்றை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ந்திருக்கின்றன.

இத்தகு ஊடகங்கள் அரசியல் கல்வியில், பொருளாதாரக் கல்வியில,; மானிடவியல் கல்வியில், சமூகக்கல்வியில் விற்பன்னர்களாகவோ, கலாநிதிகளாகவோ இருப்பவர்களிடம் கருத்துக் கேட்டார்களா என்றால் இல்லவே இல்லை.

வீட்டுக்கு வரும் விருந்தாளி திண்ணையோடு உட்கார வேண்டுமே தவிர வீட்டுக்கூடத்துக்கு வர முயற்சிக்கக்கூடாது என்று ரஜனிகாந்தை விமர்சித்த பாரதிராஜா நண்பா நீ ஒரு மொழிக்குரியவன் அல்ல என்று நசுங்கல் அறிக்கை விட்டுள்ளார்.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வராவிட்டால் தமிழகம் குட்டிச்சுவராகிவிடாது.

இதில் பரிதாபத்துக்குரியவர் தமிழருவி மணியந்தான்.அவரும் சமகால அரசியலை நன்கு புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகின்றது.

தனது நடத்தையையும் தனது குடும்ப பாங்கினையும் வைத்து பல்வேறு குணாம்சங்கள் கொண்ட தமிழக மக்களோடு ஒப்பு நோக்கி பார்த்ததுதான் அவரின் சிந்தனைத் தவறாகும்.

இன்றைய நவீன தொழில்நுட்பமும் பொருளாதார, உற்பத்திப் போட்டிகள் நிறைந்த உலகில் அனைத்து மக்களையும் மகான்களாக மாற்றலாம் என்பது என்றுமே நடக்காத காரியமே.

திரைப்படத்தை பொழுது போக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பார்க்க வேண்டுமே தவிர அதில் நடித்தவர்களை மேய்ப்பானாகவோ வழிபாட்டுக்குரியவனாகவோ பார்க்கத் தேவையே இல்லை.

ஒரு நடிகனுக்காக மண் சோறு சாப்பிடுவதும், அவர் அரசியலுக்கு வரவில்லையே என்பதற்காக தீக்குளிக்க முயற்சிப்பதும் படு முட்டாள்தனம்.உங்கள் உங்களுக்கு உங்கள் உங்கள் மனைவி பிள்ளைகளும் உற்றார் உறவினர்களுமே மிக முக்கியமானவர்கள் என்று நினையுங்கள்.

திரைப்படம் பார்த்து உணர்ச்சிவசப்படுபவர்கள்.நடிகர் நடிகைகள் பல பணியாளர்கள் சூழ அவர்கள் நடித்துக் கொண்டிருப்பதை கமரா படம் பிடிக்கிறது என்பதையும் அதைத்தான் திரையில் பார்க்கிறீர்கள் என்பதையும் படம் பார்க்கும் போது ஒவ்வொருவரும் நினைத்தீர்களானால் தியேட்டருக்குள் போனவராகவே திரும்பி வருவீர்கள்.இல்லையென்றால் மந்திரிச்சுவிட்ட கோழியாகத்தான் வருவீர்கள்.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வராவிட்டால் தமிழக மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button