சமானியனின் சரடு…..18….. ( கட்டுரை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

இதற்குமுன் தபால் அலுவலகத்தில்தான் அவசரச் செய்தியாக தந்திகொடுக்க முடியும் என்று எழுதியிருந்தேன். பெரும்பாலும் மரணச் செய்திகளை தெரியப்படுத்தவே இந்த தந்தி கொடுக்கும் முறையை பயன்படுத்தினார்கள். ஆதலால் ஒரு வீட்டுக்கு தந்தி வந்திருக்கிறது என்றாலே என்ன ஏதுவென்று பதற ஆரம்பித்து விடுவார்கள். தந்தி ஆங்கிலத்தில்தான் இருக்கும். தமிழில் இருந்தாரும் அவர்களுக்கு வாசிக்க தெரியாது என்பது வேறு விடயம்.
தந்தி வந்தவுடன் அதையும் எடுத்துக் கொண்டு என்னிடம் ஓடிவருவார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஆங்கிலத்தில் புலி என்று நினைப்பு. அந்த அளவுக்கு எல்லோரையும் நம்பவைத்துள்ளேன். பள்ளிப் பாடமான ஆங்கிலக்கதையை மனப்பாடம் செய்து அதை பாராமல் ஒப்புவித்து அப்படி ஒப்பவிக்கும்போது உடல்மொழி மூலம் ஆங்கிலத்தில் மிகவும் திறமை வாய்ந்தவன் போல நம்பவைத்துள்ளேன். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் உருவாகி இருக்க முடியும் என்று.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இல்லாததை இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். செய்யாத பணிகளை செய்து முடித்துவிட்டதாக கணக்கு காட்டுவார்கள். அதற்காக எல்லா அரசியல்வாதிகளையும் அப்படிச் சொல்லி விடமுடியாது. காமராஜ், கக்கன், அண்ணா போன்றோரெல்லாம் இருந்திருக்கவே செய்திருக்கிறார்கள். கண்மாயை தூர்வாரியதாகவும், இல்லாத வீதியை செம்மைப்படுத்தியாதாகவும் வந்த செய்திகளே அதற்கெல்லாம் சான்றாகும்.
அதபோலவே ஆங்கில அறிவு வெறும் பூஜ்ஜயத்தை வைத்துக் கொண்டே ஒரு ராஜ்ஜியத்தையே ஆண்டு வந்திருக்கிறேன்.
அதற்காக கொடுங்கோலன் என்று எண்ணி விடாதீர்கள். சொற்ப அறிவை வைத்து சிறு சிறு சேவைகளை செய்துள்ளேன். அதற்காக நான் மேற்கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டுமானால் சில தகிடுதித்தங்களை செய்துதானே ஆக வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் தந்திரம் செய்வது, கள்ளவாக்குகளை பதிவு செய்வது, வாக்குப் பெட்டிகளை திருடிச் செல்வது போன்று இன்றைய காலக்கட்டத்தில் நடப்பதை கண்கூடாகப் பார்க்கிறோமல்லவா?
அதற்காக என்னை அந்த அளவுக்கு மோசமானவனாக எண்ணிவிடாதீர்கள். திறமைசாலி போன்று போலியான நடிப்பு. அதற்கு நான் மேற்கொண்ட உத்திகள். பள்ளிக்கூட நூல்நிலையத்தில் உள்ள ஆங்கில தமிழ் அகராதிமூலம் அதிகமாக தந்திகளில் பெரும்பாலும் வரும் மரணம், விபத்து, அம்மை, வருதல், போதல்
போன்ற வார்த்தைகளின் பொருளை தமிழில் தெரிந்து வைத்துக் கொண்டு என்னை மேதாவியாக காட்டியிருக்கிறேன். சில சமயங்களில் தெரியாத வார்த்தைகள் வந்து திணறியுமிருக்கிறேன். ஆனால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் சமாளித்தும் இருக்கிறேன்.
எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் ஒரு நேர்த்திக்கடன் செய்வார்கள். ஒரு குடும்பத்தில் மகனுக்கு விபத்தில் கை முறிவு ஏற்பட்டு சிரம்பட்டான். உடனே அக்குடும்பத்தில் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டார்கள். மகனுக்கு கை கூடிய சீக்கரம்குணமாகி பழைய நிலைக்கு வரவேண்டும் “கயிறு குத்து” நடத்துகிறோம் என்பதே வேண்டுதல். அக்குடும்பத்தினர் உறவுகளுக்கு கோவில் திருவிழா பற்றி கடிதம் எழுதியவர்கள் கயிறு குத்து வேண்டுதலை நிறைவேற்றப் போவதை எழுத மறந்து விட்டார்கள்.
கிராமங்களில் சில முக்கியமான நிகழ்வுகளை நெருங்கிய உறவுகளை முறைப்படி தெரிவிக்காவிட்டால் பெரிய குற்றமாகக் கருதப்படும். கொலைக்குற்றம் செய்ததைப்போல் உறவுகளுக்குள் பிளவு ஏற்பட்டு விலகிவிடுவார்கள். கயிறு குத்து நடத்துவதாக வேண்டிக் கொண்ட குடும்பம் அதை நிறைவேற்றப் போவதை முக்கிய உறவுகளுக்கு தெரியப்படுத்தாமல் திருவிழா என்றுமட்டும் மொட்டையக கடிதம் எழதி இருந்தார்கள். இப்போதுதான் அவர்களுக்கு செய்த தவறு தெரிந்தது. உறவுகள் வந்த இடத்தில் கயிறு குத்து பற்றி தெரிய வந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்பது புரிந்தது.
முதலில் நான் உங்களுக்கு ஒன்றை விளங்க வைக்கவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் என்னைப்பற்றி தவறாகப் புரிந்து கொள்வீர்கள். இவன் தெருவில் வித்தை காட்டுபவன்போல் கயிறு குத்து, கயிறு குத்து என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்கிறான் ஆனால் அதை என்னவென்று சொல்லமட்டேன் என்கிறானே என்று நினைப்பீர்கள். ஆதலால் அதை விளக்கமாக கூறுவது என் கடமை. கயிறு
என்பது சுமார் ஒன்றரை மில்லிமீட்டர் பருமனுள்ள மிகவும் மெல்லிய பிரம்பு.
பிரம்பு என்றால் மூங்கிலில் இருந்து தயாரிப்பது. இந்த பிரம்பு பன்னிரண்டு முதல் பதினைந்து அடி நீளமிருக்கும். இதை வட்டமாக சுருட்டி வைத்துக்கொள்ள முடியும். இப்படி நான்கு பிரம்புகள் இருக்கும். இந்த பிரம்பின் ஒருமுனை மிகவும் முள்போன்று ஊசியாக இருக்கும். காலில் முள்குத்தினால் எப்படி இருக்குமோ அப்படி உடலில் குத்தினால் சதைக்குள் சென்றுவிடும். இதை உடலில் குத்திக்கொண்டு செய்வது தான் வேண்டுதல். இந்த வேண்டுதலை நிறைவேற்ற சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தமிழர் வாழ்வில் நாக்கில் அலகு குத்துதல் போன்ற உடலை வறுத்தி செய்யும் வேண்டுதல்போல் இதுவும் ஒருவகை வேண்டுதலாகும்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()