கவிதைகள்
காதல் ஒருமை….. காமம் பன்மை.!…. ( கவிதை ) …. கலைப்பரிதி.

கோடாரி விழிகளால் வெட்டியது காதல்…..
பிளந்த இதயம் சொட்டுது காமம்.
இன்று வரை ஆறாத ரணம் நெஞ்சம்.
துடிப்பின் ஏக்கம் துளையிடும் ராகம்.
தனிமையின் தனித்துவம் காதல் மகத்துவம்….. 

ஆசை அலைகள் கரை மோதும் தாகம்.
எனக்கவள் எனக்கவன் என்பது மோகம்.
என்னாளும் காதலில் தின சுகம் முத்தம்.
இராட்சத மனங்களும் ஆசையில் சங்கமம்.
காதலின் நிழலிலே யாவுமே சிறை மனம்.
விரசமாய் மொழி தரும் பார்வைகள் யாகம்.
உயிரையும் தாண்டிடும் அவன் அவள் காமம்.
புள்ளியில் இரு வழிக் காவியம் குவியும்.
புடவையும் வேட்டியும் தாலியில் சரணம்.
பகலோ இரவோ உணர்வதை வரையும்.
பசும்பால் கையேந்திய சடங்குகள் விடியும்.
யுத்தத்தில் கலந்தது காதலும் காமமும்.
சத்தங்கள் வாய் பொத்தும் நாட்களே உன்னதம்.
யுகங்களைக் கடந்தது காதலின் இராட்சியம்.
காதலும் காமமும் கலியுகம் கண்ட உச்சம்.
கலைப்பரிதி.
![]()