கவிதைகள்
பறித்தல் நன்றோ?….. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

விலங்கு அணைய மக்கள் வாழும்
விந்தைதான் இதுபோல இப்பாரில்
எவ்விடத்தும் கண்டதும் உண்டோ
சொல்வீரோ உம் சிந்தை தொட்டு
எங்குமே கண்டிடா செயல்போலிங்கு
பெண்டிரும் செய்து வாழ்ந்திருந்தார்
செடி கொடிகளில் மலரும் மலர்தனை
கொய்து சிரமதில் வைத்து மகிழ்ந்தார்
பேதைதன் செயல் கண்டுமே ஆடவர்
மகிழ்ந்து அன்புடனே தழுவி நின்றார்
காலங்கள் சுழல கொண்டவன் மறைய
பேதை கொண்டை கொலுவீற்றிருந்த
மலரைப் பறித்து மாபாதகம் செய்துமே
மக்களிவர் ஆண்மக்கள் என்று தம்மை
அடையாளம் காட்டிட்டாலும் மக்களன்று
மாக்களென மாநிலத்தே தூற்றல் முறையே
இம்மண்ணிலே மகிழ்ந்து வாழ்ந்தவராம்
மணவாளரும் மறைந்தால் இப்பெண்டிர்
உரிமையாம் மலரணிந்து உளம் மகிழும்
பண்பை குற்றமென பறித்தலும் நன்றோ!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()