கட்டுரைகள்

பூ….இவ்வளவுதானா?….. ( கட்டுரை ) ….. இளவாலை எஸ்.ஜெகதீசன்…. கனடா.

இதன் சரியான பெயர் என்னவென்று பலருக்குத் தெரிந்திருப்பதில்லை.

தெரிந்தவர்களும் ‘அயத்து மறந்துங் கூட’ அப் பெயரை உதட்டோரமாவது உச்சரிப்பதுமில்லை.

பதினொரு மாதங்கள் எங்கிருந்தது என எவரையும் அக்கறை எடுக்கா திருக்க விட்டு விட்டு மார்கழி மாதத்தில் மட்டும் தேவாலயங்கள் வீடுகள் அலுவலகங்கள் அங்காடிகள் என எங்குமே நீக்கமற நிறைந்திருந்து பார்குமிடமெல்லாம் பார்க்க வைத்து வியப்பைத் தருவது இது.

இலையைப் பார்த்து பூ என்று அழைக்கும் விநோதமும் இதுவரை இதற்குரியது.

இதன் பூர்வீகம் மெக்ஸிக்கோ.

பழங்குடியினர் இதிலிருந்து செஞ்சாயம் உருவாக்கினர்.

ஆண்டீஸின் மகுடம் என தென் அமெரிக்கர் இதனை அழைக்கின்றனர்.

சுவாலை இலை மரங்கள் என்றும் சிங்க றால் மரங்கள் என்றும் சொல்லுவோரும் இருக்கின்றனர்.

யூபோர்பியா புல்செரிமா ( Euphorbia pulcherrima ) என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

இதற்கு நத்தார் பூ புனித பூ மார்கழி பூ அலங்கார பூ என்ற பெயர்களும் புழக்கத்தில் உள்ளன.

பெத்தலகேமில் ஜேசுபிரான் அவதரித்த பொழுது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக இலைகள் தோன்றுவதாகவும் சிலுவையில் அறையப்பட்ட பொழுது சிந்திய இரத்தத்தை சிவப்பு நிறம் பிரதிபலிப்பதாகவும் நம்புபவர்கள் நம்புகின்றனர்.

16ம் நூற்றாண்டில் ஏழைச் சிறுமி ஒருத்திக்கு நத்தார் பரிசாக இதனை ஒரு தேவதை வழங்கியதெனவும் அதனால் அந்த வீடு சகல ஐஸ்வர்யங்களுடனும் ரட்சிக்கப்பட்டது எனவும் நத்தார் காலத்தில் அது இருக்குமிடம் இன்றும் மாட்சிமையுறும் என்பதும் ஐதீகம்.

ஒடித்தால் பால் வடியும் தாவர வர்க்கத்தை சேர்ந்தது. சிலருக்கு இதனால் தோல் அரிப்பு ஏற்படுவதுமுண்டு.

பூமியில் எங்கும் இத் தாவரம் பத்து அடி உயரத்துக்கு இயற்கையில் வளரும்.

நச்சுத் தன்மை கொண்டதல்ல. எனினும் உண்ணுவதற்கும் உகந்ததல்ல. உட்கொள்வோருக்கு வாந்தி பேதி ஏற்படும்.

கட்டிடங்களினுள் இரண்டு அடி உயரம் வரை வளரக் கூடிய இதற்கு மனிதருக்கு இதமான சுவாத்தியம் இதமளிக்கும்.

ஈரலிப்பற்றிருந்தால் மட்டுமே நீர் தேவை.

சிவந்த இலைகளிருக்கும் வேளைகளில் உரமிடக் கூடாது.

ஆறு மணி நேரத்துக்கெனினும் பகலில் அதிக வெளிச்சமும் இரவில் அதிக இருளும் தேவை.

அப்பொழுதுதான் இலைகள் கூடுதலாக சிவப்பு நிறமாகும்.

சிவப்பு நிறத்தின் அடர்த்தி இலைகளில் அதிகரிக்க அதிகரிக்க இதன் பெறுமதியும் அதிகரிக்கும்.

நத்தார் காலங்களில் ஏனைய சாடிச் செடிகளிலும் பார்க்க எண்பத்தைந்து வீதம் இவற்றின் விற்பனை அதிகரிக்கும்.

அமெரிக்கா பூராவும் இவை வர்த்தக ரீதியாக பண்ணைகளில் வளர்க்கப் பட்டாலும் கலிபோர்னியாவே முன்ணணி வகிக்கின்றது.

நத்தார் காலங்களில் சுமார் தொன்னுரறு சதவீத ஏற்றுமதி அமெரிக்காவிலிருந்து உலகெங்கும் சென்றடைகின்றது.

வருடந்தோறும் அண்ணளவாக 200 டாலர் வருமானம் அமெரிக்கா ஈட்டுகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட வர்க்கங்கள் இதற்கு உண்டு. இவற்றை 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்களே அதிகளவில் விரும்பி வாங்குவதாக கருத்துக் கணிப்பு கூறுகின்றது.

செயற்கையாக இவற்றின் நிறத்தை மாற்ற முடியாது. சிவப்பு அதிக அளவிலும் வெள்ளை மஞ்சள் மென்சிவப்பு ஆகிய நிறங்கள் சொற்ப அளவிலும் நத்தார் காலத்தில் கட்டிடங்களை அலங்கரிக்கின்றன.

இயற்கை ஆர்வலரும் ஆன்மீக சிந்தனையாளரும் மெக்ஸிக்கோ நாட்டுக்கு அமெரிக்காவின் முதலாவது தூதுவருமான ஜோல் போயின்ஸெத் என்பவர் இதனை 1825 ம் ஆண்டு அமெரிக்காவிற்கு அறிமுகம் செய்தார்.

அதனால் இதற்கு போயின்ஸெத்தியா ( pointsettia) என்ற பெயர் சூட்டப்பட்டது.

அவரது நினைவு தினமான மார்கழி மாதம் 12 ம் திகதி இதன் தேசிய தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button