தேவர் பிலிம்ஸ் „வாழ வைத்த தெய்வமும் கோகிலத்திற் கண்ணனாக வாழ்ந்த என்னுடைய „உச்சுவும்’!…. ( கட்டுரை ) ஏலையா க.முருகதாசன்.

„சவாரி மாடுகளுக்கும் சில காளைகளுக்கும் நலம் எடுப்பதை அறிந்த போது எவ்வளவு அநியாயம் என நான் கோபப்பட்டிருக்கிறேன்.தாங்கள் மட்டும் நலமில் வரும் நலத்தை அனுபவிக்க வேண்டும் வாயில்லாச் சீவராசிகள் அனுபவிக்கக்கூடாது என்ற இந்த பாவி மனிதர்கள் மீது தாங்கமுடியாத கோபம் எனக்கு!.’
நான் ஊரிலை அப்பு அம்மாவுடன் சிறுவனுக்கும் அப்பால் வயதில் இருந்த போது வளர்த்த செல்லப் பிராணிகள் „உச்சு உச்சு „ என்றழைக்கப்படும் நாய் .இந்த நாய்க்கு அம்மா அப்பு வைச்ச பெயர் டக்ளஸ்.ஒரு நாய் காணாமல் போனாலோ செத்தாலோ அடுத்த நாய்க்கும் அதே பெயரையே வைச்சனர்.
அடுத்தது ஆடு.ஆடு செல்லப் பிராணியாக அல்ல என்றாலும் என்னைப் பொறுத்தவரை அது எனக்குச் செல்லப் பிராணிதான். அது மறியாடு என்பதால் அதற்கு நான் வைச்ச பெயர் மீனா.
மாடு வளர்த்தனாங்கள். அது செல்லப் பிராணியல்ல நான் பெயர் வைக்கவில்லை கொஞ்சக் காலம் வளர்த்துப் போட்டு விற்றிட்டம்.
அடுத்த செல்லப் பிராணி வெள்ளை முயல்கள்.மூன்று சோடி முயல்களை நான் வளர்த்தனான்.
அடுத்த செல்லப் பறவை மூன்று புறாக்கள்.புறாக்களும் கொஞ்ச நாளைக்குப் பிறகு எங்கேயோ பறந்து போய்விட்டன.
அப்பப்ப அணில்குஞ்சு வளர்ப்பன். அவற்றைப் பார்க்க பாவமாயிருக்கும்,இரண்டொரு நாளில் அவற்றை விட்டிடுவன்.
இன்னொரு செல்லப் பறவை வெள்ளடியன் சேவல்.அதன் உயரத்திற்காக அதற்கு நான் வைச்ச பெயர் நெடுஞ்செழியன்.கோழிகள் நிறைய இருந்தாலும் என்னுடைய செல்லப் பறவை வெள்ளடியன் சேவல்.அது நல்ல உயரமாயிருக்கும்.
இந்தச் செல்லப் பிராணிகளுக்கும் எனக்குமிடையில் பெரிய சரித்திரமேயிருந்தது.
முதலிலை என்னுடைய உச்சுவைப் பற்றித்தான் சொல்ல வேண்டும்.அப்பு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்தவர்.
அவர் அங்கை யாருட்டேயோ கடுவன் குட்டி உச்சுவை வாங்கி வந்தவர்.எங்கடை வீட்டிலை மட்டுமல்ல பலரின் வீடுகளில் வளர்ப்பு நாய்களை உசு;சு உச்சு என்றுதான் கூப்பிடுவார்கள்.நாய்களுக்கு பெயர் இருந்தாலும் பெயரோடு உச்சுவையும் சேர்த்துத்தான் கூப்பிடுவார்கள்.
நாய்களுக்கு பெரும்பாலும் வீரா, சூரா,கறுவல், மறையன்,ரைகர்,சிங்கா,டக்ளஸ் என்று பெயர்கள் வைத்திருப்பார்கள்.
எங்கள் அயல்வீடுகள்; எட்டு. நாலு வீட்டில்தான் வைரவரின் வாகனமான நாய்கள் இருந்தன.அயல் வீடுகளில் ஒன்றான நாகரத்தினம் வீட்டிலும் ஒரு உச்சு நின்றது.
நாகரத்தினம் பாவிக்கும் கிணறு எங்களுக்கும் பங்குக் கிணறு.நான் குளிக்கப் போனால் அவருடைய உச்சு வந்து தலையை நிமிர்த்திப் பார்க்கும்.அதற்குத் தெரியும் இவர் தன்னுடைய எசமானின் நண்பர் மட்டுமல்ல,கிணற்றிலும் பங்கு இருக்குது என்று தெரிந்து பேசாமல் போய்விடும்.
அப்பப்ப ஒழுங்கையால் போவோர் வருவோரை வெருட்டிற மாதிரி குரைக்கும் அவ்வளவுதான்.மிச்சம் மூன்று நாய்களில் நவமணி வீட்டிலிருந்த உச்சுவும், சிதம்பரப்பிள்ளை ஐயா வீட்டிலிருந்த உச்சுவும் பிரச்சினையில்லாத உச்சுக்கள்.
நான் அவர்களுக்கு நல்ல அறிமுகமாகவானவன் என்றபடியால் என்மீது அந்த உச்சுக்களுக்கு எந்தக் காண்டுமில்லை.ஏதாவது தேவையின் நிமித்தம் அவர்களின் வீடுகளுக்குப் போனால்கூட அவை முற்றத்திலை படுத்திருந்தாலும் அவையை விலத்திக் கொண்டு போய்விடுவன்.
எனக்குப் பிரச்சினையே பாக்கியம்மா ரீச்சர் வீட்டிலிருந்த வீராதான் .அது கறுப்பு வெள்ளையுமான உச்சு.
நலம் எடுக்க முந்தி உச்சு என்னைக் கண்டால் வாலை ஆட்டும். வீரா வீரனாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டில் உள்ளவர்கள் வீராவுக்கு படுபாதகமான வேலையைச் செய்துவிட்டார்கள்.
அதாவது வீராவுக்கு அதன் விந்துப் பையை கிழித்து அதற்குள் இருந்த நலத்தை (விந்துவை தேக்கி வைத்திருக்கும் பை) வெட்டி எடுத்த அந்தப் பைக்குள் சாம்பலை வைத்துக் கட்டி என்னவெல்லோமோ நலம் எடுப்பவரைக் கொண்டு செய்துவிட்டார்கள்.
இதைச் செய்தவர்களை கேடுகெட்ட மனிதர்கள் என்றுதான் சொல்வேன்.மனிதரையும் சேர்த்து உயிரினங்களுக்கு விந்துப் பையென்று சொன்னாலும் சரி நலம் என்றாலும் சரி அவை இன்ப ஊற்று அல்லவா.அந்த இன்ப ஊற்று இல்லாதிருப்பின் மனித உயிரினம் தொட்டு அனைத்து உயிரினங்களின் பரம்பரைத் தோற்றம் இடம்பெற வாய்ப்பே இலலை;.
வீரா பெண் உச்சுத் துணையைத் தேடிப் பிடித்து மற்றைய உச்சுக்களுடன் சண்டை பிடித்து தனது தீரத்தை வீரத்தைக் காட்டி கலவி செய்து மகிழ்வதை வீராவுக்கு நலம் எடுத்துக் கெடுத்து விட்டார்கள்.பேசத் தெரியாத பிராணிக்கு பெருந் துரோகம் செய்து விட்டார்கள்.
நலம் என்ற சொல் சாதரண சொல் அல்ல.நலமாய் இருக்கிறீர்களா என்று கேட்கிறோம்.மற்றவர் நலமாயிருக்கிறோம் என்று சொல்வாரகள்;.
இங்கு நான் நலம் , நலமறிய ஆவல் என்று கடிதம் எழுதுகிறோம் அல்லவா.ஊன்றிக் கவனித்தால் மனித நலம் என்ற விசாரிப்பு இனவிருத்தியோடு சம்பந்தப்பட்டது என்பதைக் காணலாம்..இனவிருத்தி செய்யக்கூடிய ஆரோக்கியமான விந்தணுவே முக்கியம் என்பதால் விந்தணு நிரம்பிய பையை,அந்த அமுத சுரபியை குறியீடு கொண்டே நலமாகவிருக்கிறீர்களா என விளித்திருக்கிறார்கள் எனக் கருத இடமுண்டு.
நலமாக என்பதில் வரும் நலம் என்பதும் ஆங்கிலத்தில் ரெஸ்ரீஸ் என்பதும் ஒன்றேதான். நலம் அல்லது விந்துப் பை (ரெஸ்ரீஸ்)எவ்வளவு முக்கியமானது என்பதற்கு கீழ்வரும் உசாத்துணையைப் பதிவு செய்கிறேன்.
திரு.எரிக் கென்றிசன் (நிலான) பி.ஏ(ஓனர்ஸ்) எழுதி வெளியிட்ட பொது அறிவுப் பொக்கிசம் என்ற நூலில் 19ஆம் பக்கத்தில் ரெஸ்ரீஸ் என்ற நலம் அல்லது விந்துப் பையின் முக்கியத்தை இத்தகவல் அறியத்தருகின்றது.
„சத்தியமாகச் சொல்கிறேன் என்னும் போது இதயத்தில் கைவைத்துச் சொல்லும் வழக்கம் வந்த பின்ணணியானது,ரோம் நாட்டில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லும் போது தங்கள் விதைகளில் (Testes) வலது கையால் பிடித்துக் கொண்டு நான் சொல்வது எல்லாம் உண்மை என்று பேசுவார்கள் மனித குலத்தின் உற்பத்தித் தானத்தில் கைவைத்து சத்தியம் சொல்வார்கள்.காலப் போக்கில் இதயத்தில் கைவைத்துச் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.Testes என்ற சொல்லிலிருந்துதான் Testimony என்ற சொல் உருவானது.ரெஸ்ரிமொனி என்றால் சான்று என்று பொருள்.
அது போல நலம் என்பது விதையைக் (ஆண்)குறிப்பதாகும். எனவே நலமா, நலமறிய ஆவல் என்ற சொல் விதையைக் குறிக்கும் நலம் என்பதிலிருந்து வந்ததாகக் கொள்ளலாம்.
இனி வீரா என்ற உச்சுவுக்கும் எனக்கும் உள்ள பிரச்சினை என்னவென்றால்.வீராவுக்கு நலம் எடுக்கும் போது நான் வேடிக்கை பார்த்ததுதான் அதற்குக் கோபம்.வீரா நினைச்சிருக்கும் விதைப்பையை எடுக்கும் போது நாய்களின் இனவிருத்தித் தேவையைச் சொல்லியாவது தடுத்திருக்கலாமே என்று.அப்பொழுது வீரா உச்சு என்னைக் கோபத்துடன் பார்த்தது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்குது.
அதைவிட வீரா உச்சுவுக்கு இன்னொரு கோபமும் உண்டு.வீராவின் எசமானர் வீட்டிலை மூன்று பொம்பிளைப் பிள்ளையள் இருக்கினம்.
அவை மூன்று பேரும் இன்னும் அயலட்டைப் பிள்ளைகளும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒன்றாய் வளர்த்தனாங்கள்.
வீரா வீட்டுப் பொம்பிளைப் பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை சின்ன வயசிலிருந்தே என்னோடை நல்ல வாரப்பாடு. நானும் அவாவும் வளர்ந்த பின்பும்கூட வாரப்பாடு கூடினதேயொழிய குறையவே இல்லை.
இந்த வாரப்பாடு அடுத்த படிநிலைக்குப் போய் தோழி பிளஸ்ஸாக வளர்ந்துவிட்டது.இதையும் வீரா உச்சு கவனித்ததால் என்மீது இனியில்லை என்ற கோபம்.
நான் பொதுவாக அங்கு போனது மாறி அவளைப் பார்க்க போவதில் வந்து நின்றது. நான் போக வீரா உச்சு குரைத்துக் கொண்டு வர வீரா நில் அவர் என்னுடைய ஆள் என்று தோழி பிளஸ் சொல்ல, அது தெரிஞ்சுதான் நான் குரைத்தனான் என்பது போல என்ரை தோழி பிளஸை வெறுப்புடன் பார்க்கும்.
நான் குளிக்கும் போது அவள் கிணத்துக் கட்டிலை இருந்து கதைப்பதை, நான் கிணத்தடிக்கு வருவதைக் கண்ட அவள் குடம் நிறையக் கிடக்கும் தண்ணீரை கவிட்டு ஊத்திப் போட்டு தண்ணி அள்ள என்று கிணத்தடிக்கு வருவதை, ஒழுங்கையிலை பனையோலையால் கட்டிய வேலி மறைவிலை இருந்து கதைப்பதை வீரா உச்சு கவனித்திருக்கிறது.
தன்னுடைய விந்துப் பை எடுத்ததாலை நான் எவ்வளவு மகிழ்ச்சியை இழந்துவிட்டன் என்பதைப் பற்றி யாருக்குமே கவலையில்லை.ஊர் ஊராய் அலைஞ்சுதன்னும் தனக்குச் சோடியைப் பிடிக்கலாம் என்றால் ஆணிவேரையே மனித மிருகங்கள் அறுத்துவிட்டார்கள் என்ற கோபத்துடன் போதாதற்கு நலம் எடுக்கேக்கை வேடிக்கை பார்த்தவர் வடிவான பிள்ளையோடை பேசிச் சிரிப்பது எல்லை மீறிக் கையைப் பிடித்து இரண்டு பேரும் கதைப்பது எதற்கு என்று வீரா உச்சுவுக்கு நல்லாவே தெரியுமாதலால் அது கோபப்பட்டதில் நியாயமிருககிறது.
வீரா உச்சுவுக்கு கோபம் வந்ததற்கு அதிவிசேட காரணம்,நான் வளர்த்த டக்ளஸ் உச்சுவுக்கு நலம் எடுக்காமல் வளர்த்ததுந்தான்.
சவாரி மாடுகளுக்கும் சில காளைகளுக்கும் நலம் எடுப்பதை அறிந்த போது எவ்வளவு அநியாயம் என நான் கோபப்பட்டிருக்கிறேன்.தாங்கள் மட்டும் நலமில் வரும் நலத்தை அனுபவிக்க வேண்டும் வாயில்லாச் சீவராசிகள் அனுபவிக்கக்கூடாது என்ற இந்த பாவி மனிதர்கள் மீது தாங்கமுடியாத கோபம் எனக்கு.
கொஞ்சம் அப்பிடி இப்பிடி நடக்கிற பொடியங்களைப் பார்த்து அறுத்துக் கொண்டு திரியிற கிடாய் என்று சொல்லி தம்பியவைக்கு நலம் எடுத்தால்தான் அடங்குவினம் என்று சொல்வதை அனைவரும் அறிவர்.
என்னுடைய உச்சுவின்ரை கதையைச் சொல்ல வந்த நான், என்னுடைய அயலட்டை உச்சுக்களைப் பற்றியும் சொல்ல வேண்டி வந்திட்டுது. சொன்னால்தான் என்னுடைய உச்சுவுக்கு நான் செய்த சில்லறைத் தொந்தரவுகளையும் சுதந்திரத்தையும் நீங்கள் அறிய வாய்ப்புண்டு.
என்ரை உச்சுவை அப்பு சின்னனாய்க் கொண்டு வந்து தர அதை நான் குளிப்பாட்டி சீராட்டி வளர்க்கத் தொடங்கினேன்.
சவர்க்காரம் போட்டு குளிக்க வார்த்ததற்குப் பிறகு அதற்கு புழுதி பட்டுவிடக்கூடாது எனபதற்காக சாக்கிலை கொண்டு போய்விட அது தண்ணியை உதறிப் போட்டு புழுதியிலை போய் புரண்டு விளையாடும்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அது வளர்ந்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.எனக்கு அம்மா மூன்று மீன் துண்டுகள் போட்டால் என்ரை உச்சுவுக்கு ஒரு மீன் துண்டைப் போட்டிடுவன்.
ஆட்டிறைச்சிக் கறியில் அரைவாசியைப் போட்டிடுவன்.என்னுடைய உச்சு மண்ணிறம்.மயிர்கள் மினுமினுக்க வாட்சாட்டமாய் அத வளர்ந்து கம்பீரமாய் நின்றது.
எனக்குச் சின்ன வயதிலிருந்தே பேரீச்சம் பழம் சாப்பிடுவதில் நல்ல விருப்பம்.பத்துச் சதத்திற்கு கண்ணப்பர் கடையில் பேரீச்சம் வாங்கினால் அது கிட்டத்தட்ட அப்ப அது அரை றாத்தல் இருக்கும்.
பேரீச்சம் பழத்தை வாங்கிக் கொண்டு தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து நடக்கத் தொடங்கினால் கொட்டைகளை அங்கையும் இங்கையும் துப்பிக் கொண்டு சாப்பிட்டபடி அம்பனைக்கு வந்து சேர்ந்துவிடுவன்.
பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்திருக்குது என்று அம்மா சொன்னதும் ஒரு காரணம் நான் பேரீச்சம்பழத்தை விரும்பிச் சாப்பிட்டதற்கு.இதைவிட பேரீச்சம்பழத்தை சாப்பிட்டுக் கொண்டு மகாஜனவடி எங்கடை வீட்டுக்குப் போற மேற்குப்புற ஒழுங்கையில் திரும்பி நடக்க வாசலடியிலை நின்ற ஆறுமுக வாத்தியார் கேட்டார் என்ன சாப்பிட்டுக் கொண்டு போறாய் என்று, நான் சொன்னன் பேரீச்சம்பழம் என்று.அவர்; நல்லது பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்திருக்கு சாப்பிடு என்றார்.
வாத்தியாரும் சொல்லிப் போட்டார் என்றவுடன் என்னுடைய உச்சுவுக்கு பேரீச்சம் பழங்கள்; வாங்கி பழங்களைப் பிய்ச்சு கொட்டையளை எறிஞ்சு போட்டு சோத்தோடு கலந்து குடுக்கத் தொடங்கினன்.என்னுடைய உச்சு ஆண்மை பெருக்கெடுத்து நின்றது.
என்னுடை உச்சுவுக்கு குரைக்கிற வேலை அதிகம் இல்லை.அப்பப்ப இரண்டொரு முறை குரைக்கும். அதாலும் இதாலும் நடந்து போட்டு வந்து முற்றத்திலை படுக்கிறதுதான் அதனுடைய வேலை.
சில நேரம் ஒழுங்கை பனையோலை வேலி மறைவிலையிருந்து நானும் தோழி பிளஸ்சும் கையிலை பிடிச்சுக் கொண்டு அருகருகே நின்று கதைக்கேக்கில காவலாய் படுத்திருக்கும்.
வீரா உச்சு பார்க்கும் அதுவுன்ரை வீட்டடியிலிருந்து. அது யோசித்திருக்கும் காவல் வைச்சுக் கதைக்கிறார் என்று.பேரீச்சம்பழக் கதை வீரா உச்சுவுக்குத் தெரியாது.
தெரிஞ்சிருந்தால் எனக்கு அநியாயம் செய்ய ஒத்துழைச்சுப் போட்டு அவர் தன்னுடைய உச்சுவுக்கு ஆண்மைபெருக்கிப் பழம் போட்டு வளர்க்கிறார் என்று பெரும் கோபம் கொண்டு குரைச்சு வீட்டுக்காரரை எட்டிப் பார்க்க வைச்சு நானும் தோழி பிளஸ்சும் களவாகக் கதைக்கிறதைக் காட்டிக் கொடுத்திருக்கும்.
என்னுடைய உச்சுவுக்கு நான் தேவர் பிலிம்ஸின் வாழ வைத்த தெய்வம் என்ற படம் பார்த்ததால் வந்தது பிரச்சினை. இந்தப் படத்தை நான் வெலிங்டன் தியேட்டரில் போய்ப் பார்த்தனான்.அந்தப் படத்தில் ஜெமினி கணேசன் நடித்திருந்தார்.
எனக்குத் தேவர் பிலிம்சின் படங்கள் பார்ப்பதில் அதிக விருப்பம் உண்டு.அதற்குக் காரணம் அவரின் படத்தில்,யானை,குதிரை, மாடு, நாய்,பாம்பு, சேவல், மயில் என எல்லாம் நடித்திருக்கும்.
வாழவைத்த தெய்வம் படத்தில் நாய் திறமாக நடித்திருக்கும்.அந்தப் படத்தைப் பார்த்ததும் என்னுடைய உச்சுக்கும் அதைப் பழக்குவதென்ற முடிவுடன் வீட்டுக்கு வந்த நான் முதலிலை பூவரசம் தடியொன்றை வெட்டி அதனுடைய தோலை உரித்து வெயிலிலை காயவிட்டுப் பிறகு தடிக்கு நல்லெண்ணை பூசி தடியை அடுப்பு நெருப்பிலை சூடுகாட்டி எடுத்தன்.
உச்சுவுக்கு தோல்பட்டி தேவை. தோல் கிடைக்கவில்லை.எங்கடை தோட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வேலாத்தையிடம் பனைமட்டை உரித்து நாய்ப்பட்டி மாதிரி செய்து தரச் சொன்னன்.விசயத்தைச் சொல்ல சிரிப்புடன் தனது நாயைக் கூப்பிட்டு கழுத்தைச் சுற்றி அளந்து பார்த்து பனைநாரில் நாய்ப்பட்டி செய்து தந்தார.
அவருக்கும் அம்மா என்று அழைக்கப்படும் அவருடைய மனைவிக்கும் வாழவைத்த தெய்வம் படத்தின் கதையை அவையின்ரை வீட்டு விறாந்தையிலிருந்த கப்பிலை சாய்ந்திருந்தபடி விலாவாரியாகச் சொன்னன்.
நொங்கு(நுங்கு) சீவித் தந்தார் குடிச்சன்.எனக்குப் பக்கத்தில் கிடந்த வெற்றிலைத் தட்டத்திலிருந்து பாக்கு வெற்றிலையை எடுத்து சப்பிக் கொண்டு வந்த நான் எனது உச்சுவுக்கு பயிற்சி கொடுக்கும் ஏற்பாட்டில் இறங்கினன்.
முதலிலை பனை நார்ப்பட்டியைக் உச்சுவுக்குக் கட்டினன்.பிறகு வீட்டோடை இருந்த வெறும் புலவுக்கு உச்சுவின் கழுத்துப் பட்டியை பிடிச்சு உச்சுவைக் கூட்டிக் கொண்டு போனன்.
முதல் பயிற்சி எறிந்த பந்தை உச்சுவைக் கொண்டு எடுப்பிப்பது என்ற முடிவுக்கமைய பந்தை எறிந்து விட்டு போய் எடு என்றன்.
உச்சு உச்சு போய் எடு என்றன்.உச்சு முன்னங்கால் இரண்டையும் ஊன்றிக் கொண்டு என்னைப் பார்த்திட்டு கையிலை கிடந்த தடியைப் பார்த்திட்டு பந்தையும் பார்த்தது.
பந்தை எறிந்துவிட்டப்; போய் எடு என்று அடிச்சன்,கோபத்திலை உதைஞ்சன்,சனியனே நீயும் ஒரு நாயா தேவற்றை நாய் என்ன எல்லாம் விளையாட்டுக் காட்டுது என்று கோபத்திலை புறுபுறுத்துக் கொண்டு நானே பந்தை எறிந்து நானே பந்தை எடுக்க என்னுடைய உச்சு அங்கையும் இங்கையும் நடந்து போட்டு,எறிந்த பந்தை நானே எடுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.
பந்தை எறிஞ்சு போட்டு உச்சுவின்ரை கழுத்துப்பட்டியிலை பிடிச்சு தரதரவென்று இழுத்துப் பார்த்தன்.உச்சு பிறேக் பிடிச்சு நின்றதேயொழிய என்னுடைய ஆசை நிறைவேறின பாடில்லை.
கிணத்தடியிலை நின்ற தோழி பிளசும் பரமேசும் இவர் என்ன நாய்க்கு வேடிக்கை காட்டுகிறார் என்று பார்ப்பதற்காக இரண்டு கதியாலுக்குமிடையில் புகுந்து வந்துவிட்டனர்.
எனக்கருகில் நின்ற தோழி பிளஸ் சும்மா நிற்காமல் என்ரை கையைப் பிடிச்சுக் கொண்டு நிற்க, பரமேஸ் இவள் என்ன உங்கடை கையைப் பிடிச்சுக் கொண்டு நிற்கிறாள் கொம்மா வந்தால் அவ்வளவுதான் என்று சொல்ல பரமேசின்ரை வாய் பொன்வாய் என்பது போல அம்மா வந்து கொண்டிருக்கையில் , ஏய் கையை விடு தாய் வந்து கொண்ருக்கிறார் என்று பரமேஸ் சொல்ல தோழி பிளஸ் கையை விட்டிட்டு தள்ளி நின்றிட்டாள்.
நீ நாயை வைச்சு என்ன செய்கிறாய் என்று கேட்டபடி வந்த அம்மா, தோழி பிளஸ் நிற்பதைக் கண்டதும், நாய்கு;கு வேடிக்கை காட்டினது போதும் குளிச்சிட்டு வந்து சாப்பிடு என்று கொஞ்சம் கோபமாகச் சொல்லிக் கொண்டே போயிட்டார்.
அம்மாவுக்கு தோழி பிளசிலை எப்பவும் ஒரு கண். பரமேசிலையும் கண் என்றாலும் அது அவ்வளவு வெப்பியாரம் இல்லை.
உச்சுவும் குந்தி இருந்துவிட்டு அலுப்புத் தட்டிச்சோ தெரியாது. நீயும் உன்ரை பந்தும் , உன்ரை தடியும் தேவற்றை படமும் என்ற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு முற்றத்திலை படுக்க அது போய்விட்டது.
தோழி பிளசும் போய்விட பரமேஸ் கேட்டாள் இவள் என்ன எப்பவும் கையைப் பிடிச்சு கதைக்கிறாள் நீங்களும் பிடிக்கட்டும் என்ற மாதிரி விட்டிட்டு நிற்கிறியள் என்று கேட்க அது சும்மா ஒரு பொழுது போக்குக்கு என்றேன்.
கையைப் பிடிக்கிறது பொழுது போக்கோ.உங்கள் இரண்டு பேரைப்பற்றியும் கனகதை நடக்குது என்றாள்.என்ன கனகதை நடக்குது என்றேன்.பிறகு சொல்றன் என்றாள்.நான் சொன்னன் நான் ஒரு சோழிசுறட்டு இல்லாத பொடியன் என்று ஊர் கதைக்குது தெரியுமோ என்றன்.
இந்த இலகையிலேயே நான்தான் அச்சாப் பொடியன் என்று கதைக்கினம் தெரியுமோ என்றன். ஊர்உலகம் அப்படித்தான் நினைக்குது எனக்கெல்லோ தெரியும் உங்களைப்பற்றி என்றவள் பிறகு எல்லாம் சொல்றன் என்று அவளும் போய்விட்டாள்.
உச்சுவுக்கு பந்துப் பயிற்சி குடுத்த கதையும் அதோடை கைபிடிச்ச கதையம் எட்டுப்பட்டிக் கிராமத்துக்கு பரவுதல் போல எல்லா வீட்டுக்கும் பரவிவிட்டது.
என்னோடொத்த வயது சிதம்பரப்பிள்ளையின்ரை இராசப்பிள்ளைக்கு உச்சுவுக்கான பந்துப் பயிற்சியுடன் கைபிடித்துக் கதைக்கும் விசயமும் தெரிய வந்திட்டுது.
சைக்கிளிலை போனாலென்ன நடந்து போனாலென்ன குறுக்கு வழியென்பதற்காக அவையின்ரை வீட்டடியாலைதான் போக வேணும்.
அடுத்த நாள் அதாலை போகேக்கிலை இராசாப்பிள்ளை.நாய் பந்தைப் பிடிக்கத் தொடங்கிவிட்டுதோ என்று சிரித்துக் கொண்டு கேட்டவள் பந்துக் கதையோடை கைபிடிக்கிற கதையும் உலாவுது என்றாள்.
நான் சொன்னன் நான் சோழி சுறட்டில்லாத பொடியன் என்று உங்களுக்கும் தெரியுந்தானே என்று.அப்படித்தான் நானும் நினைக்கிறன்.ஆனால் எந்தப் புற்றிலை எந்தப் பாம்பு இருக்குது என்று ஆருக்குத் தெரியும், என்று சொல்ல கதையை வளர்க்கக்கூடாது என்று போயிட்டன்.சோழிசுறட்டில்லாத பொடியன் என்ற பெயர்ப் போர்வை எனக்குத் தேவை.
இது ஒரு புறம் இருக்க என்னுடைய உச்சுவைக் காணவில்லை.ஒரு கிழமையாகியும் உச்சு வரவில்லை.
; உன்ரை ஆய்க்கினை தாங்கேலாமல் அது போயிட்டுது என்று அம்மா சொன்னார்.வாழ வைத்த தெய்வத்தாலை வந்த வினை என்றார்.
இப்படியாக இருக்க ஒரு நாள் தெல்லிப்பழைச் சந்திக்கு சைக்கிளிலை போய்க் கொண்டிருக்கேக்கை செல்வநாயகம் வீட்டொழுங்கைக்கு கொஞ்சம் முன்னுக்கு றோட்டுக்கு வடக்குப் பக்கத்தில் இருந்த இழுப்பை மரத்தடியிலையிருந்து என்னுடைய உச்சு வாலை ஆட்டிக் கொண்டு வந்ததைக் கண்டன்.
சைக்கிளை நிற்பாட்டினதும் பெடலிலை வைச்சிருந்த என்னுடைய காலை நக்கியபடி வாலை ஆட்டிக் கொண்டிருக்க நான்கு பெண் நாய் மனைவிகள் அவரைச் சுற்றி நின்றன.
என்னுடைய உச்சுவைச் சுற்றி நாலு தோழிகள் நின்றதைக் கண்ட என்னுடைய உச்சு ஒவ்வொருவரையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே என்னைப் பார்த்தது எப்படி இருந்தது என்றால்.இவர்தான் என்னுடைய சின்ன எசமான். எனக்கு ஆண்மை பெருக்கியான பேரீச்சம்பழம் குடுத்து வளர்த்தவர்.அதனால்தான் நீங்கள் என்னை உங்கள் கணவனாக ஏற்று என்னிடம் இருந்து சந்தோசத்தைப் பெற்று என்னோடு நிற்கிறீர்கள் என சொல்வது போல இருந்தது.என்னுடைய உச்சு கோகிலத்து கண்ணணாக மகிழ்திருந்தான்.பந்துப் பயிற்சியைச் செய்யாவிட்டாலும் அவன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து நான் மகிழ்ந்தேன்.
என்னைச் சந்திக்கும் போதெல்லாம் கொஞ்சத் தூரம் நடந்து வந்து நன்றியைக் காட்டினான். மிருகங்களும் அதையதை அனுபவிச்சு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
பிறகு என்னுடைய உச்சு இடைக்கிடை எங்களுடைய வீட்டுக்கு வருவதும் இரண்டு நாள் நிற்பதும் பிறகு போவதுமாக இருந்தான்.
நல்ல காலம் வீரா உச்சுவுக்கு இந்தச் செய்தி தெரியாது. தெரிஞ்சால் தோழி பிளசுக்கும் எனக்குமிடையில் அதுதான் வில்லனாயிருக்கும்.வீரா உச்சு பாவம்.
எந்த நோக்கமாக இருந்தாலும் வாயில்லாச் சீவன்களின் விதையை அகற்றுவது கொடுமையிலும் கொடுமையானது.மன்னிக்க முடியாத குற்றம். காதல் காமம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.எல்லா உயிரினத்துக்கும் உண்டு.
(குறிப்பு: தோழி பிளஸ் என்பதன் அர்த்தம்.தோழிக்கு அடுத்தபடியான காதலி என்ற இடத்தை நோக்கிப் போவதாகும்.)
வாரப்பாடு – விருப்பம்,அன்பு
இலகை – மக்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட பரப்பளவைக் குறிப்பது
சோழி சுறட்டில்லாதவன் – எந்தப் பிரச்சினையும் இல்லாதவன்.
![]()
அன்புள்ள திரு. முருகதாசன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களது கட்டுரையான தேவர் பிலிம்ஸ்
“வாழவைத்த தெய்வமும் கோகுலத்திற் கண்ணனாக வாழ்ந்த என் உச்சுவும்” என்ற கட்டுரையை வாசித்த நான் எனது பார்வையினை பகிர்கிறேன். தங்களது கட்டுரையில் “யான்
பெற்றஇன்பம் பெறுக இவ்வையகம்” என்ற தத்துவம் இழையோடுவதைக் கண்டேன்.
எல்லா உயிரிடத்தும் அன்பு வைப்பவர்
என்ற உங்களது உள்ளக்கிடக்கையின்
வெளிப்பாடு ஆடு, மாடு, கோழி, நாய் என்று எல்லா உயிரிடத்தும் தாங்கள் காட்டும்
அன்பின் வாயிலாகவெளிப்படுகிறது.
பாலுணர்ச்சி என்பது எல்லா
உயிரினங்களுக்கும் பொதுவான
இயற்கையின் தூண்டுதல். அதை வாயில்லாபிராணிகளுக்கு கிடைக்க விடாமல்
செய்யும் உரிமையை மனிதனுக்கு யார்
கொடுத்தது என்ற ஆதங்கம் தங்கள்
படைப்பில் வெளிப்படுவதைக்கண்டேன்.
வீராவுக்கு கிடைக்காத வாழ்க்கை
தங்களது உச்சுவுக்கு நான்கு
மனைவிகளுடன்கிடைத்துள்ளது.
தங்களப்போல் உச்சுவுக்கு சோற்றுடன்
பேரிச்சம் பழத்தை கலந்து கொடுக்காவிட்டாலும் வீராவின் வீட்டினர் அதன் ஆண்தன்மையை சிதைக்காமலாவதுஇருந்திருக்கலாம் என்ற வேதனையை
கட்டுரையில் சிறந்த மனிதாபத்தோடு
வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
நலம் என்ற சொல்லுக்கு ஆதாரங்களுடன் இன்னொரு பொருளையும் எடுத்துச் சொல்லியிருப்பது அற்புதம். புதிய
சொல்லாடல்களையும் அதற்குரிய
விளக்கத்தையும்கொடுத்திருப்பது என்
போன்றோருக்கு உதவியாக
இருந்திருக்கும். தமிழில்ஆங்கிலத்தைக்
கலந்து பேசுபவர்களுக்கும்
எழுதுபவர்களுக்கும் மத்தியில்
“தோழிபிளஸ்” என்ற சொல் அவர்களது
அகராதிக்குள் நுழையலாம்.
மெர்சலாயிருக்கு, கியராவவது போன்று
இச்சொல்லும் வலம் வரலாம்.
இரண்டு நாய்களை வைத்து வாழ்க்கையின் யாதார்த்தமான நெளிவு சுழிவுகளை ஒரு கதை மாதிரியே கட்டுரையில்
சொல்லியிருப்பது நன்றாக உள்ளது. தேவர்மட்டுமா பிராணிகளை வைத்து
படமெடுப்பார் என்னாலும் இரண்டு நாய்களைவைத்து ஒருகட்டுரையே எழுத முடியும்
என்று காட்டியிருக்கிறீர்கள்.
வித்தியாசமான முயற்சியாகவே பார்க்கிறேன்.
அன்புடன் என்றும்,
சங்கர சுப்பிரமணியன்.