எஸ் பொ – சில நிகழ்வுகளின் பகிர்வு!…. (சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

எஸ்.பொ! தமிழ் இலக்கிய உலகைக் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கலக்கிக்கொண்டிருந்த ஒப்பற்ற தனித்துவம் மிக்கதோர் இலக்கியச் சக்திமிக்க இரண்டு எழுத்துக்கள், இவை.
எஸ்.பொ என்றாலே பலருக்குக் கலக்கம். இன்னும் சிலருக்கு நடுக்கம். ஆனால் அந்த எழுத்துக்குரியவரின் எழுத்துக்களிலே எல்லோருக்குமே விருப்பம்.
எனது பள்ளிப்பருவத்திலே, எஸ்.பொ என்றால் யாரென்று தெரியாத நிலையில் அவரது நாடகமொன்றை நெறியாள்கை செய்தேன். தினகரன் வெள்ளிவிழா மலர் என்று ஞாபகம். அதிலே “தினை விதைக்காதவர்கள்” என்ற ஒரு நாடகம் வெளிவந்திருந்தது. எழுதியவர் எஸ்.பொன்னுத்துரை. அதை வாசித்த போது அது எனக்குப் பிடித்துப் போகவே அதனை நண்பர்களோடு சேர்ந்து தயாரித்தேன். அதில் சேனரதன் என்ற பாத்திரத்திரத்தில் நான் நடித்தேன். அதுதான் எஸ்பொ அவர்களுடன் ஏற்பட்ட முதலாவது ஈர்ப்பு. அப்போது எஸ்.பொன்னுத்துரை என்றால் யாரென்றோ, அவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்றோ எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
![]()
ஆனால், பின்னர் பத்தாம் பதினோராம் வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவரது “தீ” யையும், “வீ”யையும் வாசிக்கும் பாக்கியம் பெற்றேன். அந்தவயதிலே அது பாக்கியம்தானே! வாசிக்க வாசிக்க இன்பக் கிழுகிழுப்பு. உள்ளத்தில் மட்டுமல்லாமல் உடலிலும் எழுச்சி ஏற்படுத்திய தீயையும், வீயையும் பலதடவைகள் வாசித்து இன்புற்றேன். அதுவரை வாசித்துத் தள்ளிய இந்தியச் சஞ்சிகைகளிலும், துப்பறியும் நாவல்களிலும் இல்லாத தூய்மையையும், இலக்கியச் செறிவையும், என் இதயம் உணரத் தொடங்கியது, முதன்முதலாக தமிழ் மொழியின் வித்தியாசமான நடையழகொன்றை என் மூளை பதிவுசெய்யத் தொடங்கியது.
தீயையும், வீயையும் வாசித்த பின்னர் எஸ்பொவின் நூல்களை வாசிக்கத் தேடினேன். புத்தகக் கடையொன்றிலே, எஸ்பொ “ ? ” என்று ஒரு நூலைக் கண்டேன். வாங்கி வாசித்தேன். 2147 ஆம் ஆண்டிலே தான் சஞ்சரிப்பதாகக் கொண்டு, 1972 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அந்த நூலின் பெயரே “ ? ” என்பதுதான். அப்போது எனக்குப் பத்தொன்பது வயது. அதை வாசிக்கும்போது சில விடயங்கள் சுவையாக இருந்தாலும் பல விடயங்கள் எனக்குப் புரியாமல் இருந்தன. பின்னர் அரசசேவை அனுபவம், பல்கலைக்கழகப்பட்டம் எல்லாம் சேர்ந்தபின்னர் அதை மீண்டும் வாசித்தபோது ஒவ்வொரு வரியையும் உணர்ந்து படித்துச் சுவைத்தேன். கேலியும், கிண்டலும் நிறைந்த சொல்லாட்சி அந்த நூல்முழுவதும் தூவிக்கிடக்கின்றது. அத்துடன் எஸ்பொ தீர்க்கதரிசனம் மிக்கதோர் அபூர்வமான எழுத்தாளர் என்பதை அந்த நூல் எனக்கு உணர்த்தியது. அவர்மேல் பற்றும், மதிப்பும் பன்மடங்கு அதிகரித்தது.![]()
1973 இல் ஒரு நாள் மட்டக்களப்பு நகர மண்டபத்திலே பட்டி மன்றம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. “ஈழத்து இனப்பிரச்சினையை ஒத்துழைப்பு மூலம் தீர்க்க மூடியும், முடியாது” என்பது தலைப்பு. முடியும் என்றதலைப்பிலே பேசுவதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கேட்டார்கள். அது எனது சொந்தக் கருத்துக்கு முரணானதாக இருந்தபோதிலும் அந்தப்பக்கத்தில் பேசுவதற்கு ஒரு பேச்சாளர் தேவைப்பட்டதால், எந்தப்பக்கத்திலும் என்னால் பேசமுடியும் என்று அவர்கள் நம்பியதால், என்னிடம் கேட்டார்கள். எனது கட்சியின் தலைமைப் பேச்சாளர் எஸ்.பொ. மற்றவர் மாலா இராமச்சந்திரன். பட்டிமன்றம் ஆரம்பிப்பதற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் நான் இருவரையும் முதன்முதலாகச் சந்திக்கிறேன். தலைமைப் பேச்சாளரான எஸ்பொவிடம் சென்று, “நான்தான் ஸ்ரீகந்தராசா” என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தார். தனது கட்சியில் பேசுவதற்கு ஒரு பொடிப்பிள்ளையை ஒழுங்கு செய்திருக்கிறார்களே என்று அவர் நினைத்திருக்கலாம். எதிர்தரப்பில் பேசுவதற்கு வந்திருந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். எஸ்பொ பேச ஆரம்பிக்கும்போதே அவர்களைப்பார்த்து, “குட்டியாடு குடலேறக் கொழுத்தாலும் வழுக்கல் வழுக்கல்தான்” என்று எள்ளினார். தொகுப்புரையின்போது, “எனது கட்சியிலும் குட்டியாடு ஒன்று இருக்கிறது. ஆனால் இது குட்டியிலேயே முற்றிய ஆடு என்பதை உணர்ந்திருப்பீர்கள்” என்று என்னைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பட்டிமன்றம் முடிந்தபின்னர் என்னிடம் “துடிப்பாக இருக்கிறீர். பேச்சு நன்றாக வருகிறது” என்று அளவோடு பாராட்டினார்.
1977 இல் என்று நினைக்கிறேன். ஆண்டு சிலவேளை வேறாக இருக்கலாம். கலாசார அமைச்சின் தமிழ் நாடகப் போட்டிகள் கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அவரைக் கண்டேன். மிகுந்த ஆவலுடன் அவரை அணுகிக் கதைத்தேன். அடுத்த நூல் என்ன என்று கேட்டேன். “ஓர் ஆமத்துறுவின் காதல்” என்று சொன்னார்.
1992 இல் அவுஸ்திரேலியாவில் அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ்.எஸ். பாஸ்கரின் வீட்டிலே எஸ்பொ அவர்களை நெருக்கமாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக்கிடைத்தது. சிட்னியிலே வாழும் எஸ்பொ அவர்கள், அன்றுமுதல் மெல்பேணுக்கு வரும்போதெல்லாம் என்னைத் தொடர்பு கொள்வார். அடிக்கடி தொலைபேசியிலும் பேசிக்கொள்வோம். உலகப்புகழ்பெற்ற ஒரு மாபெரும் எழத்தாளரான எஸ்பொ அவர்களுடன் அவ்வாறு மிக அன்னியோன்னியமாக அளவளாவுவது என்வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே நான் கருதினேன். அவரைப்பற்றி முன்னர் நான் கேள்வியுற்ற சுவையான கதைகள், உலவிய வதந்திகள், அவரது மேடைப்பேச்சுக்களில் இடம்பெற்ற சாடல்கள், சொற்பிரயோகங்கள் இப்படிப் பல்வேறு விடயங்களைப் பற்றி நேரடியாக, நெருக்கமாக, நட்பாக அவரோடு பேசியதெல்லாம் இனிமையான அனுபவங்கள். எந்த விடயத்தைப் பற்றி அவர் நமக்கு எடுத்துச் சொல்லும்போது புதியதொரு பல்கலைக்கழகத்திலே பயில்வதைப் போன்ற உணர்வு ஏற்படும்.
1993 இல் மெல்பேணில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவரது “வலை” என்ற நாடகம் எனது நெறியாள்கையில் அரங்கேறியது. எஸ்பொவின் வசன நடையை,
அதுவும் அந்த வரலாற்று நாடகத்திலே அவர் வடித்து வைத்திருக்கும் வார்த்தைச் சாலங்களை கருத்து மாறாமல் உச்சரிக்க வைப்பதிலும், பொருத்தமான நடிப்பை நடிகர்களிடம் இருந்து வெளிப்படுத்தச் செய்வதிலும் மிகவும் கரிசனை எடுத்துக்கொண்டேன்.
எஸ்பொவிடம் மேதாவித்தனமாகச் சில கற்றுக்குட்டிகள பேச முற்படுவதுண்டு. அப்பொதெல்லாம்; அவர் இலேசான ஒரு புன்சிரிப்பை உதிர்ப்பார். எதுவும் தெரியாதவர்போலவே அமைதியாக இருப்பார். அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவரோடு கதைப்பவர்களுக்கு அவர் ஒரு நல்லாசிரியராக நடந்துகொள்வார். மிகப்பெரிய பண்டிதர்களையும், எழுத்தாளர்களையும், பேராசிரியர்களையும் தாக்கு தாக்கென்று தாக்கி விமர்சிக்கும் எஸ்பொ அவர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒருபோதும் மட்டம் தட்டியதில்லை. எப்பொதும் ஊக்கமளித்து. ஊற்சாகப்படுத்தி அவர்களுக்கெல்லாம் ஏணிப்படியமைத்துக் கொடுப்பதையும் தனது பணியாகவே கருதினார்.
எஸ்பொவின் எழுத்துக்களைப் படிப்பது இன்பம். இந்த உலகில் அது எல்லோருக்கும் கிடைக்கலாம். எப்போதும் கிடைக்கலாம். அவரது பேச்சுக்களைக் கேட்பது இன்பம். அது பலருக்குக் கிடைத்தது, கிடைக்கும். அவரோடு உறவாடக் கிடைப்பதோ ஆனந்தப் பேரின்பம். அது சிலருக்குத்தான் சிடைக்கும். அந்தச் சிலரில் நானும் ஒருவன் என்பதிலே எனக்குப் பெருமை. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்வதற்கும், அவர் நடந்துதிரிந்த என்தாயக மண்ணிலே நடந்ததிரிவதற்கும், அவர் புலம்பெயர்ந்த நாட்டிற்கே புலம் பெயர்வதற்கும், அவர் அடிக்கடி சென்று தங்கும் தமிழ் நாட்டிலும் சென்று அவரைச் சந்திப்பதற்கும் என்போன்ற சிலருக்குகிடைத்த வாய்ப்பு வாழ்வின் மகத்தான கொடுப்பினை.
தனது இறுதிக் காலத்தில் பாதி தமிழ் நாட்டில், மீதி அவுஸ்திரேலியாவில் என்றவாறு வாழ்ந்து கொண்டிருந்த எஸ்பொ அவர்கள் அந்தத் தள்ளாத வயதிடகூட, எழுத்து ஊழியத்திலும் நூல்பதிப்புப் பணியிலும் முழுநேரமும் ஈடுபட்டிருந்தார்.
இப்போது அவரது ஆறாவது நினைவு தினம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் இலக்கிய வரலாற்றின் சிலபக்கங்களில் தடித்த எழுத்துக்களால் நிரப்பப்பட்டவராக எஸ்பொ எப்போதும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
![]()