Featureகதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!,,,,, 01….. (உண்மைக் கதை) …. ஏலையா க.முருகதாசன்.

சுயசரிதை என்றால் என்ன?.

   

சுயசரிதை என்றால் அவரவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை,அவர்கள் விட்ட தவறுகளை,மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து இன்றும்குமுறிக் கொண்டிருக்கும் உணர்வுகளை தனது வாழ்க்கையில் பாடசாலையில் பணியிடத்தில் வெளிநாடுகளில் வாழும் போது தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி மனைவிக்குச் சொல்லுவதும் சூழ்நிலைக் கைதியாகி பிறகு அச்சூழ்நிலைக்குப் பழகிப் போய் சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை ஒளிவு மறைவு இன்றி எழுதுவதற்குப் பெயர்தான் சுயசரிதை.

பல இரகசியங்கள் இதய ஆழத்தில் புதைக்கப்பட்டு எங்கேயோ ஒளித்து வைக்கப்பட்டாலும் அவை மீண்டும் உயிர்த்தெழுந்து மூளைக்கலங்களை ஆக்கிரமித்து நிற்பதும்,இதயச்சுவர்களில் முட்டிமோதி ஒலியெழுப்பிக் கொண்டேயிருக்கும்.

மேலேத்தேய வாழ்வியலில் பண்பில் பல மனைவிகள் பல காதலிகள் என்பது கவனிக்கப்படாததும் கணக்கெடுக்கப்படாத ஒன்றாகும்.

ஆனால் தமிழர்களின் ஒருத்தனுக்கு ஒருத்தியென்ற கோட்பாட்டிற்கிணங்க வாழ முயற்சிக்கும் வாழ்வியல் பண்பாட்டில் நாங்கள் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறோமா என்றால் இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

மீறல்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதனை உடைத்துச் சென்ற சம்பவங்கள் ஏராளம் உண்டு.

எதுவுமே நடக்கவில்லை தமிழர் சமூகம் அமைதியாக இருக்கிறது.அங்கொரு பண்பாட்டு மீறல்களும் இல்லை என்று தோன்றும்.ஆனால் அங்கும் நிசப்தமாக பண்பாட்டு மீறல் சம்பவங்கள் நடந்துகொண்டுதானிருக்கும்.

பலமுறை நான் சிந்தித்த விடயம் இது: கொழும்பிலும் தென்னிலங்கைச் சிங்களப் பகுதிகளிலும் கடை வைத்திருந்தவர்களும் அரசாங்க பணி செய்தவர்களில் சிலரும் தமக்கான ஊரில் குடும்பங்கள் இருந்தும்பணி செய்த இடங்களிலும் வியாபாரம் செய் இடங்களிலும் துணைகளை தேடிக் கொண்ட கதைகளை நான் அறிந்து கொண்ட போது இப்படியும் இருப்பார்களா இப்படியும் இருக்குமாக என சிந்தித்தது ம் உண்டு.

அவை உண்மைதான் என்பதை என் ஊரைச் சேர்ந்த மிக நன்கு தெரிந்த ஒருவர் ஊரில் மனைவி ஒருத்தி இருக்கத்தக்கதாக தனது புத்தளத்து மனைவியை சிலாபத்தில் உள்ள கடைக்கு கூட்டிக் கொண்டு வந்ததையும் என்னிடம் நலம் விசாரித்துவிட்டு தனது புத்தளத்து மனைவிக்கு ஏதோ வாங்கிக் கொடுத்ததையும் கண்டேன்

அதே வேளை முன்பு மலாயா சிங்கப்பூருக்கு வேலை நிமிர்த்தமாக போகிறவர்கள் அங்கொரு குடும்பம் இங்கொரு குடும்பமாக வாழ்ந்ததையும் அறிந்திருக்கிறேன்.

அதற்குச் சாட்சியாக எனது வீட்டின் வடக்குப்புற வேலி எல்லையோடு ஒரு குடும்பம் வாழ்ந்தது.

மிகப்பெரிய வசதியான வீடு தென்னை மாமரங்கள் நிறைந்த வளவு ஒரு மகள் ஒரு தாய் என வாழ்ந்த வாழ்வை நானறிவேன். அத்தாயின் கணவர் ஊருக்கு எப்போ ஒருமுறை வந்திருக்கிறார். பிறகு அவர் மலாயாவில் குடும்பமாக வாழ்கிறார் என்பதை தாயும் அறிவார் மகளும் அறிவார்.

ஆனால் அவர்களுக்கான வாழ்க்கைச் செலவிற்கு உரிய பணம் மாதா மாதம் வரத் தவறவில்லை.மலாயா என்பது சிங்கப்பூர் பிரியாத போது இருந்த பெயர்.மலாயவிலிருந்து சிங்கப்பூர் என்ற பெயர் கொண்டு ஒரு நாடு உருவான போது மலாயா மலேசியாவானது.

எம்முடைய தமிழ்இன வரலாற்றில் மன்னர்களின் வாழ்வியல் முக்கிய பங்கு வகிக்கின்றது. பட்டத்து இராணி என்று ஒருவரும் அதற்கமைவல்லாத அரசு சார்ந்த பெண்கள் மன்னரின் மனைவியாகியமையும் அதைவிட அந்தப்புரத்து அழகிகள் எனப் பலரும்இருந்துள்ளமை வரலாற்று உண்மை.

தமிழ், வீரம்,மொழிக்காக பணியாற்றியமை கடல்கடந்து நாடுகளை பிடித்தமை அங்கெல்லாம் வெற்றிக்கொடி நட்டமை இவையெல்லாவற்றையும் பேசிய சங்க இலக்கியங்களாகட்டும் அவற்றை மீண்டும் தமிழினத்துக்கு சொல்ல வந்த இலக்கியங்களாகட்டும் மன்னர்கள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உறுதியான நிலைப்பாட்டுடன்தான் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் இலக்கியங்கள் எதுவுமே இல்லை.

ஏனோ தமிழ் இனத்தின் மேன்மை கெட்டுப் போய்விடும் என்பதற்காக அன்றைய படைப்பாளிகள் என்று சொல்லப்படுகின்ற புலவர்களும் எழுதவில்லை அதனை இலக்கியங்களாக படைத்த தொடர்வழி இலக்கியவாதிகளாக இருப்பவர்களும் எழுதவில்லை.

ஆக மொத்தத்தில் உண்மைகள் சொல்லப்படவில்லை.

மன்னர் காலத்திலிருந்து இன்றுவரை உள்ள தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் முறை பற்றி ஒரு தமிழ் ஆய்வாளளை எழுதச் சொன்னால் தன்னினத்தின் மேன்மையான பக்கங்களை எழுத மட்மே நினைப்பான்.

ஆனால் வெளிநாட்டு ஆய்வாளன் ஒருவன் தமிழ் இனத்தின் வாழ்க்கை முறைப் படிமங்களை ஒவ்வொன்றாக எடுத்து தூசிதட்டிப் பார்த்து எழுதுவானானால் பல உண்மைகளை எழுதுவான்.

உண்மைகளை எழுதிய பெருமாள் முருகனை எரிக்கிறேன் கொல்கிறேன் என்று சொன்ன சமூகந்தானே தமிழர் சமுகம்.இவையெல்லாம் உண்மைகளை எழுதாதே என்ற வன்முறை எதிர்ப்பேதான்.

இப்பதிவை வாசிப்பவர்கள் சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறார்.பூடகமாக எதை நோக்கிச் செல்கிறார் என யோசிக்கலாம்.

எழுத்தாளர்களில் பலவகையினர் உண்டு. தம்மை பன்னீரில் குளிப்பாட்டிய மனிதர்களாக தம்மை விலத்திவிட்டு மேலெழுந்த வாரியாக சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதுபவர்களுக்குள் எனது வாழ்க்கையில் இதுவெல்லாம் நடந்திருக்கு என்று தன்னையே எக்ஸ்ரெ எடுத்து எழுதுபவர்களும் உணடு.

காதலுக்காக முடி துறந்த மன்னர்களும் இருக்கவே செய்கிறார்கள். கரி -மேகன் என்று அரச குடும்பத்து சோடிகள் இன்றைய சாட்சி.

இன்னும் நிறையவே எழுதலாம்.ஆனால் நான் எழுதப் போகும் எனது மூன்றுவருட சிங்கப்பூர் வாழ்க்கைச் சுயசரிதை என்பது ஒளிவு மறைவற்ற உண்மைகளைக் கொண்டவை.எனது தாய்மாமன் மகாத்மா காந்தியின் சத்தியசோதனை என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தந்து வாசிக்கச் சொன்னார்.

வாசித்து முடித்த போது அந்தப் புத்தகம் எனக்குள் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது .55 வருடங்களாகியும் அதன் தாக்கம் இன்னும் இருக்கவே செய்கின்றது.

 

55 வருடங்களுக்கு முன்னால் வாசித்த சத்திய சோதனை நூலும் 39 வருடங்களுக்கு முன்னால் சிங்கப்பூரில் மூன்று வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையும் உண்மையைச் சொல் என அழுத்துகின்றது.5.11.54இல் மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் வேலை செய்த ஒரு பெண் எனக்குள் ஏற்படுத்திய தாக்கமே அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வரப் போகிற சுயசரிதை.

எனது மனைவியும் சிங்கப்பூரில் தன்னை எனக்கு மனைவியாக்கி வாழ்ந்தவர்களாகிய இரண்டுமனைவிகளும் எப்பொழுதுமே எதுவாக இருந்தாலும் என்னிடம் மூடிமறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

என்னைச் சிந்திக்க வைத்த வாக்கியங்களில் கிரேக்க தத்துவஞானி கூறிய “உனை நீ அறி” என்ற வாக்கியத்தை நினைத்து நான் பிரமிப்படைவதுண்டு.

எமது கல்லூரியான மகாஜனாவின் தாரக மந்திரம்.அதுவே எனது முகநூலின் மேடையை அலங்கரிக்கும் வாக்கியமாகும்.

சிங்கப்பூர்

பலருக்கு போக விரும்பும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.இலங்கையர்களும் இந்தியர்களும் போக அதிகம் விரும்பும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் என்றால் அது சொர்க்கபுரி நாடு என்பது பொது அபிப்பராயம்.வாழும் காலம்வரை வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்றால் சிங்கப்பூரில் வாழலாம் என்ற பொதுக் கருத்து உண்டு.

இலவசமாக இனிமையை அனுவிக்க முடியாது.அங்கும் கடுமையான வாழ்வாதாரத்திற்காக உழைத்து அதன் பயனாக இனிமையை அனுபவிக்கலாம்.சிங்கப்பூரைக் காதலர் தேசமென்றம் சொல்லலாம்.

சிங்கப்பூர் ஒரு நவீன நாடு. சிங்கப்பூரின் நுழைவாயிலான விமான நிலையமே நவீனம் பிரமாண்டம் அழகு என்ற கூறுகளால் ஆக்கப்பட்டு பார்ப்பவரை வியக்க வைக்கும்.அது பரப்பளவில் மிக மிகச் சிறிய நாடு.வடிவமைப்பில் பிரமாண்டம்.நான் எழுதத் தொடங்கிய, சிங்கப்பூரில் வாழ்ந்த எனது மூன்று கால வாழ்க்கையின் சுயத்தைச் சொல்லும் சுயசரிதையை எழுதத் தொடங்கியுள்ளேன்.என்னைத் தவிர்த்து நான் பாலிலும் பன்னீரிலும் கழுவப்பட்ட மனிதனாக என்னை பொய்யாக மேம்படுத்தி எழதப் போவதில்லை. காதலர் தேசமென்று சொன்னேன் அல்லவா.எமது இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் அது சொர்க்கபுரியாக இருந்தது என்பது நான் உட்பட அது தவிர்க்க முடியாததே.அங்கு சந்தித்து காதலர்களாகி கைகோர்த்து நடந்து திருமண உறவின் தீர்மானத்துடன் தாயகம் திரும்பியவர்கள் உண்டு.அங்குள்ள தொடர் மாடிக் கட்டிடங்களில் இருக்கும் அறைகளுக்கு பேசும் திறன் மட்டும் வருமானால் எம்மவரின் காதல் சல்லாபங்களின் வரலாற்றை அவை சொல்லும்.இது முகவுரைதான்.அங்கு வாழ்ந்த எனது சுயசரிதையை நீங்கள் வாசித்தால் என்னுடைய உண்மையான முகத்தை நீங்கள் காண்பீர்கள்.மனிதர்களின் மூளையும் மனமும் கோடானு கோடி இரகசியங்களை உள்ளடக்கிய இரகசியச் சுரங்கம். இந்தச் சுரங்கத்தின் கதவுக்கு பண்பாடு, கௌரவம் சமூக மரியாதை மிதிச்ச இடத்துப் புல்லும் சாகா நல்லவர்கள் என்று பல பூட்டுக்களைப போட்டு பலர் பூட்டி வைத்திருக்கிறார்கள்.ஆனால் நான் பூட்டுக்களைத் திறக்கத் தொடங்கிவிட்டேன். 39 வருட காலத்துக்கு முன் சிங்கப்பூரில் நான் வாழ்ந்த வாழ்வு மீண்டும் நினைவேடாக உஙகள் பார்வைக்கு.சுயசரிதையை அத்தனையும் எழுதப்பட வேண்டும்.ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் சுயசரிதை உண்டு.தனது தாயார் உயிருக்குப் போராடி படுத்த படுக்கையாக கிடந்த போது அடுத்த அறையில் நான் மனைவியுடன் உடல் உறவு கொண்டேன் என்று மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.அதையொத்த அல்லது அதிலும் மோசமான நிலைகூறும் சுயங்கள் பலபலரிடம் உண்டு.

இனி…………. (நினைவுகள் தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *