Featureகட்டுரைகள்

ஆதலினால் சாதனை செய்வீர்!… ( கட்டுரை ) …. இளவாலை எஸ்.ஜெகதீசன்.

உலக சாதனைப் பதிவோடு வரும் பதிவேடுகள் உலகில் பல.

அதிகம் பதிவுகள் , அதிகம் பிரதிகள் எனப் பல அதிகங்களுடன் கின்னஸ் புத்தகம் அவற்றிலும் சாதனை புரிகின்றது.

110 நாடுகளில் 28 மொழிகளில் கிட்ட முட்ட 300 பக்கங்களுடன் 3 கோடிக்கும் சற்றே அதிகமான பிரதிகளுடன் வருடந்தோறும் வெளியாகின்றது.

திறமையானவர்களும் முதன்மையானவர்களும் மட்டுமே சாதிக்கலாம் என்றில்லை.

மனசு சுருங்கிப் போகாத எவராலும் எதனையும் எப்பவும் முயன்றால் சாதிக்க முடியும் என்பதே கின்னஸ் கோட்பாடு.

ஒரு சாதனை செய்தவரைக் கூட பத்திரமாகக் பதிவு செய்ய விரும்புவது கின்னஸ்.

ஆற்றல்களுக்கு சவால்விடும் சங்கதிகளை சந்தித்து சாதனையாளர்களாக கின்னஸில் அங்கீகாரம் பெறுவது முற்றிலும் இலவசமானது.

மத்தியஸ்தர்களின் நேரடி கண்காணிப்பு தவிர விண்ணப்பதாரிகளிடமிருந்து சாதனை புரிய கட்டணம் எதனையும் வசூலிப்பதுமில்லை. சாதித்த பின் அவர்களுக்கு கின்னஸ் பணம் வழங்குவதுமில்லை. செலவுகளை ஈடு செய்வதுமில்லை.

வாழ்நாளில் ஏதாவது ஒரு சாதனையாவது புரிந்து கின்னஸ் புத்தகத்தில் பெயர் பெறும் உத்வேகம் சகலரது மூளைக்குள்ளும் ஒரு மூலைக்குள்ளாக வெனினும் அமைதியாக ஆர்ப்பரிக்கும்.

உடலின் விசித்திரங்கள் , ஆச்சரியமான சாகஸங்கள் , உலகின் இயற்கை அற்புதங்கள் , விஞ்ஞான தொழில் நுட்ப வினோதங்கள் , நவீன உலகின் நவீனங்கள் , விளையாட்டு , கலை , கலாசாரம் , பயணங்களும் வாகனங்களும் போன்றன பிரதம சாதனைக் களங்கள்.

அவை ஒவ்வொன்றும் பல உப பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும்.

உதாரணமாக மனித உடல் விசித்திரங்களெனின் அசாதாரண உடல்வாகு , வயதும் வாலிபமும் , அதிசயிக்க வைக்கும் அங்கங்கள் , பிரமிப்பூட்டும் அழகு , கோரமான அவலட்சணம் , மருத்துவ மகத்துவம் , வழமைக்கு மாறனவை எனப் பிரிந்து விரிவடையும்.

அதி வேக பறவை எது என்ற ஆய்வுக்கு விடைகாண முயன்றதில் ஏற்பட்ட உற்சாகமான சுவாரஸியம் 1955 ல் கின்னஸ் பதிவேட்டை தோற்றுவித்தது.

வல்லூறு (Peregrine Falcon) மணித்தியாலத்திற்கு சுமார் 200 மைல் வேகத்தில் பறக்கும் என்ற பதில்தான் விழிகளை விரிய வைக்கும் கின்னஸின் முதலாவது பதிவானது.

எலிசபெத் மகாராணி 2021 ல் தனது 95 வயதில் இளைப்பாறக் கூடும் என்றொரு கதை. அவர் கூட கின்னஸில் பெயர் பெற்ற சாதனையாளர்தான்.

அதிக வயது வரை வாழும் அரசி. நீண்ட கால மகாராணி. 45 நாடுகளின் நாணயங்களில் முகம் காட்டுபவர். மகாராணிகளுள் கோடீஸ்வர மகாராணி. அரசியாகி அறுபது ஆண்டுவிழாவின் ஒரு பகுதியான 670 படகுகளின் பவனியின் காரணகர்த்தா போன்றவை அவற்றுள் சில.

ஆகக்கூடிய தனி நபர் சாதனை என இதுவரை 600 வித்தியாசமான சாதனைகளை ஆஷ்ரிட்டா பேர்மன் என்ற 66 வயதான அமெரிக்கர் கின்னஸில் பதிவு செய்துள்ளார்.

அவற்றுள் பல முறியடிக்கப்பட்டு தற்பொழுது 226 சாதனைகள் மிஞ்சியுள்ளன.

மூன்று நிமிடங்களில் 28 பலூன்களை மூக்கினால் ஊதி நிரப்பியமை , ஒரு நிமிடத்தில் 86 முந்திரிகைப் பழங்களை உண்டமை , பருமனான 31 வெள்ளரிக் காய்களை தனது வயிற்றின் மீது வைத்து சிறு சிறு துண்டுகளாக ஒரு நிமிடத்துக்குள் வெட்டியமை போன்றவை அவரது சாதனைகளுக்கு ஒரு சிறு சான்று.

1979 ம் ஆண்டு தனது கால்களை அகலமாக அகட்டி வைத்து இடைவிடாமல் 27 000 தடவைகள் துள்ளியதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவருக்கு இன்று 86 பக்கங்கள் அவரது சாதனைகளுக்கு சாட்சியமளிக்கின்றன.

ஆழிக்குமரன் ஆனந்தன் என பிரபலமாக அறியப்பட்ட விவேகானந்தன் செல்வ குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்தி கடந்தது , மன்னாரிலி ருந்து தனுஷ்கோடி வரை நீந்தி மீண்டும் மன்னார் வரை நீந்தியது , தொடர் நடனம் , மெது நடை போன்ற ஏழு உலக சாதனைகளுக்குரியவர் என்கின்றது கின்னஸ்.

தனது 60 சவால்களை தமிழ் மகன் சுரேஷ் ஜோக்கிம் சாதனையாக்கியுள்ளார்.

கூடை பந்துடன் அதிக நேரம் , ஒரு காலில் நெடு நேரம் , நகர் படியில் கூடுதலான நேரம் என குறுகிய காலத்தில் வித்தியாசம் வித்தியாசமான சாதனைகளுடன் உயர்ந்தார்.

ஒவ்வொரு மணித்தியாலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக 1000 மணித்தியாலங்களில் தொடர்ச்சியாக 3495 கி.மீ ஓடியதே முதலாவது சாதனை.

உலகில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு நிவாரணமளிக்க வேண்டும் என்ற நன் நோக்கத்துக்காகவே 33 சாதனைகளை பயன்படுத்தினார்.

உலக நாடுகள் பல இவரது சாதனைகளின் களமாகின.

எண்ணுக் கணக்கற்ற தமிழர்கள் கின்னஸில் பெயர் பெற்றிருப்பது அவர்களில் பலரது சாதனைகளிலும் பார்க்க வியப்பை அளிக்கின்றது.

மறைந்த ஜெயலலிதாவின் மறையாத கின்னஸ் சாதனைகளில் ஒன்று சுவீகர வாரிசின் 150 000 பேருடனான திருமணம்.

மிக நீண்ட நேரம் வானொலி அறிவிப்பாளர் என்பது தான் பலரால் பல தடவைகள் முறியடிக்கப்பட்ட சாதனை வரிசையில் என்றுமே முன்ணணியில் திகழ்கின்றது.

ஆகக் கூடுதலான வயது வரை வாழ்ந்தார் என்பதும் அவ்வப்பொழுது முறியடிக்கப்படும்.

122 வருடங்கள் 164 நாட்கள் வாழ்ந்த ஜீன் லூயிஸ் என்பவர்தான் இப்பொழுது கின்னஸில் ‘வாழ்கின்றார்.’

இலகுவாக முறியடிக்கக் கூடிய சாதனைகளாக ஒரு நீண்ட பட்டியலை கின்னஸ் தனது இணையத் தளத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைத்துள்ளது.

ஒன்றின் மேல் ஒன்றாக 248 இறு வட்டுகளை ஒற்றை விரலில் தாங்குதல் , 261 ரீ ஷேட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அணிதல் , முப்பது மணித்தியாலங்கள் இரண்டு நிமிடங்களுக்கும் அதிகமாக தழுவிக் கொள்ளல் , ஒரு நிமிடத்தில் 33 முட்டைகளை இரு விரல்களால் நசுக்கி உடைத்தல் , 45 X 45 சதுர அங்குல அளவுள்ள ஜன்னல் கண்ணாடிகள் நான்கை ஒன்பது விநாடிகளில் சுத்தமாக்கி பளீரிடச் செய்தல் , ஒன்பது வாழைப்பழங்களை உரித்து உண்ணல் எனத் தொடங்கித் தொடரும் அப் பட்டியல் பார்க்க இலகுவாகத் தோன்றும்.

பூ இவ்வளவுதானா என்று எண்ண வைக்கும்.

முயன்று முடிப்பதுதானே சாதனை.

அதி பயங்கர சாதனைகளாக கின்னஸ் பத்து சாதனைகளை மிகவும் ‘பயத்துடன்’ தெரிவிப்பதாக குறிப்பிடுகின்றது.

1. கொடிய விஷமுள்ள உயிருள்ள பதின் மூன்று கிலுகிலுப்பை பாம்புகளை பத்து விநாடிகள் வாயினுள் திணித்திருப்பது வாயைப் பொத்தி அடிக்கத்

தோன்றிடினும் அவற்றுள் முதலிடம் பெறுகின்றது. அமெரிக்கரான ஜாக்கி பிபி என்பரே இந்த சாதனையாளர்.

2. ஆணிகளின் மீது படுத்திருப்பவர் மேலாக உந்துருளிகளை ஒரு முறை இரு முறையல்ல இருபது முறை ஓட்டுவது பார்ப்பவர்களை பதற வைக்கும். படுத்திருப்பவரை சிதற வைக்கும். இதற்கு இரண்டாம் இடம். அவுஸ்திரேலியரான செய்ன் ஹல்ட்கிரேயின்தான் இந்த வலி தாங்கி.

3. 127 000 அடிகள் அதி உயரத்திலிருந்து வான் குடை மிதவையை உதறி விட்டு அம்போ என யாராவது குதித்து 843 மைல் வேகத்தில் நிலத்தை நோக்கி வருவாரெனின் அவர் அம்போ என்றுதானே எண்ணத் தோன்றும்? ஆனால் ஆஸ்திரியரான பிலிக்ஸ் பாம்கார்ட்னர் குதித்தாரே. அதற்கு மூன்றாமிடம்.

4. அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 பேருந்துகளை தனது உந்துருளி மூலம் ஒரே தாவு தாவி முதுகெலும்பை உடைக்காமல் முன்பிருந்த சாதனையை உடைத்த அமெரிக்கரான புப்பா பிளாக்வெல் நான்காமிடத்திலுள்ளார்.

5. இங்கிலாந்தை சேர்ந்த ஜோண் ஈவன்ஸ் என்ற தடியன் 352 இறாத்தல் எடையுள்ள மகிழுந்தை சும்மா அப்படியே அலாக்காகத் தூக்கி 33 விநாடிகள் தலையில் சுமந்தது ஐந்தாம் இடத்தில் உள்ளது.

6. .05 வீதம் மது சாரம் இரத்தத்தில் கலந்திருந்தாலே வாகனம் செலுத்த அனுமதி மறுக்கப்படும் இடத்தில் ஒரு வீதம் மது சாரம் இரத்தத்தில் போதையூட்ட கின்னஸின் ஆறாம் இடத்தைத் தனதாக்கியவர் ஒரு போலாந்துக்காரர்.

7. பிரேசில் நாட்டவரான லாசோ ஷாவர் சுவிஸ் – இத்தாலி எல்லைப் பகுதியில் உள்ள மலைத் தொடரில் 200 அடி உயரத்திலிருந்து 76 மைல் மணித்தியால நேரத்தில் தண்ணீரில் குதித்து மலைக்க வைத்தது பயங்கர சாதனையாக ஏழாமிடத்தில் கின்னஸில் பதிவாகியுள்ளது.

8. பயங்கரவாதம் தகர்க்க முன் நியூயோர்க் இரட்டைக் கோபுரங்களின் உச்சிகளுக்கு இடையே இருந்த 1300 அடிகள் நீளமான கம்பி மீது பற்றுக் கோடுகள் எதுவுமின்றி நடனமாடிக் கொண்டே 45 நிமிடங்களில் கடந்த பிரான்ஸ் தேசத்தவரான பிலிப் பெட்டிட் எட்டியுள்ளது எட்டாமிடத்தை.

9. கின்னஸ் உலகிற்கு நன்கு பரிட்சையமான அமெரிக்கரான ஆஷ்ரிட்டா பேர்மனை நோக்கி கடலுக்கு அடியில் 7 அடிகள் தூரத்திலிருந்து துப்பாக்கி மூலம் படபடவென சுடப்பட்ட 2 அடிகள் நீளமுள்ள 14 ஈட்டிகளை ஒற்றைக் கையால் லாவகமாக பிடித்த சாதனை ஒன்பதாவது பதிவு.

10. பறக்கும் விமானத்தின் இறக்கை மீது 80 வயதில் முதலாவது தடவையாகவும் 93 வயதில் இரண்டாவது தடவையும் சோர்வின்றி நடந்த அயர்லாந்தவரான தோமஸ் லாக்கியின் தீவிரம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

பார்வையாளர்களுக்கோ பொது மக்களுக்கோ சாதனை முயற்சியில் ஈடுபடுபவர்க்கோ ஆபத்தை ஏற்படுத்தும் இவை போன்ற எந்தவொரு சாதனையையும் கின்னஸ் தற் பொழுது ஊக்கமளிப்பதில்லை.

வேடிக்கையான சாதனைகளும் குறைவில்லாமல் கின்னஸில் இடம் பெறுவது வாடிக்கை.

அபான வாயு மூலம் ஐந்து மெழுகுவர்த்திச் சுடர்களை அணைத்த பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜெராட் ஜெஸ்ஸியின் ‘வேதனையால்’ பிலிப்பைன்ஸே மூக்கை பிடித்திருக்குமோ? யாரறிவர்!

உணவுடன் தொடர்புடைய சாதனை முயற்சிகளோ அல்லது முறியடிப்புகளோ கின்னஸ் நிறுவன வழிகாட்டுதல்களின் பிரகாரமே மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

சாதனை முடிவில் எஞ்சிய உணவை வீணடிக்கக் கூடாது. ஒன்றில் உட்கொள்ள வேண்டும் அல்லது நுகர்வோருக்குப் பகிர்தல் வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளில் ஒன்று.

பதின்மூன்று வயதுக்குட்பட்டவர்களும் சாதிக்கலாம்.

ஆனால் விண்ணப்பத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னரே முயற்சிக்க விரும்பும் பதிவின் வகை பரிசீலிக்கப்படும்.

சாதனை செய்ய முனைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.

அதனால் முயல்பவர்களின் எண்ணிக்கை முடித்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

அறுபதாயிரம் விண்ணப்பங்களை கின்னஸ் வருடா வருடம் பரிசீலிக்கின்றது.

வாரத்துக்கு ஆயிரம் என்ற ரீதியில் வருடத்திற்கு ஐம்பதாயிரம் சாதனை முயற்சிகளை அல்லது முறிப்புகளை கின்னஸ் வருடந் தோறும் கையாள்கின்றது.

ஒருவர் ஒரு நாளில் அல்லது ஒரு தடவையில் மூன்று விண்ணப்பங்களை மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

மேலதிகமானவை ஏற்கப்படுவதற்கு தாமதமாகவே அவகாசம் வழங்கப்பட்டு அறிவிக்கப்படும்.

ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கு மூன்று மாதங்கள் சாதாரணமாகத் தேவை.

துரித சேவையெனின் ஐந்து வேலை நாட்களில் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிசீலனை முடிவுகள் தெரிவிக்கப்படும்.

கின்னஸ் நிறுவனம் தபால் மூலமான அல்லது தொலை பேசி மூலமான அல்லது மின்னஞ்சல் மூலமான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதை நிறுத்தி காலம் கனக்கச் சென்று விட்டது.

தாம் பயன்படுத்தாத அவற்றை இயலுமான வரை சாதனையாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என அண்மைக் காலங்களில் அறிவிக்கின்றனர்.

இயங்கலை மூலமான விண்ணப்பங்கள் மட்டுமே தற்பொழுது பரிசீலனைக்கு ஏற்கப்படுகின்றன.

முழுப் பெயர் , பிறந்த திகதி , விலாசம் , நாடு , தொலை பேசி , மின்னஞ்சல் ஆகியவை அங்கத்துவ பதிவுக்கு தேவை.

உடனடியாகவே இயங்கலையில் விண்ணப்பம் கிடைத்த தகவலும் அங்கத்துவ இலக்கமும் விபரக் கோவையும் வழங்கப்படும்.

அங்கத்தவர்கள் தமது சாதனை முயற்சிகள் அல்லது முறியடிப்புகள் பற்றி விபரக் கோவையில் கோரப்பட்டவாறு தகுந்த சான்றுகளுடன் பின்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.

செய்யவுள்ள சாதனை என்ன? புத்தம் புதுச் சாதனையா? அல்லது இதற்கு முன்பு யாராவது செய்த சாதனையின் முறியடிப்பா? போன்ற முழு விபரமும் எதிர்பார்க்கப்படும்.

கோரிக்கை ஏற்கப்படின் சாதனையை செய்ய வேண்டிய விதி முறைகள் அனுப்பப்படும்.

அதற்கு விண்ணப்பதாரி உடன்படும் பட்சத்தில் குறிப்பிட்ட ஒரு தினத்தில் அந்தச் சாதனையை நிகழ்த்துமாறு தெரிவிக்கப்படும்.

முடிப்பதற்குள் முடிவு மாறினாலும் தெரிவிக்கபபடும்.

அதிகாரபூர்வ கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில் மட்டுமே புதிய சாதனையை உருவாக்கவோ அல்லது உள்ள சாதனையை முறியடிக்கவோ முடியும் என்ற நிபந்தனை பரவலாக உண்டு.

ஆனால் இதற்கு விதி விலக்காக மலை முகட்டில் ஏறல் , நீண்ட நகம் வளர்த்தல் போன்ற இன்னோரன்ன பல தூரத்திலிருந்தே துப்பறியப்படும்.

கின்னஸ் அதிகாரிகள் நேரடி கண்காணிப்புக்கும் மற்றும் துரித சேவைக்கும் பணம் அறவிடப்படும்.

மத்தியஸ்தர்களுக்கு உரிய மணித்தியாலங்களுக்கான வேதனமும் பயண தங்குமிட செலவும் விண்ணப்பதாரிகள் செலுத்த வேண்டும்.

சாதனை ஆரம்பிக்க முன்னராகவே கட்டண விபரங்களை விலாவாரியாக அறிந்து கொளல் நலம்.

எல்லாம் நிறைவேறிய பின்னர் முடிவு இயங்கலையில் தெரியவரும்.

சாதனை ஏற்றுக் கொள்ளப்பட்டால் கின்னஸ் உலக சாதனை சின்னத்துடன் கூடிய அங்கீகர சான்றிதழ் வழங்கப்படும்.

இட வசதியின்மை காரணமாக சுமார் நான்காயிரம் பதிவுகளை மட்டுமே வருடந்தோறும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் வெளியிடுகின்றது

ஆனால் ஆகக் குறைந்தது நாற்பதாயிரம் தற்போதைய பதிவுகளை தரவுத்தளத்தில் பார்வையிடலாம்.

நூலில் உங்களது சாதனைகள் சேர்க்கப்படாமலிருந்தாலும் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அவை இணைக்கப்பட்டிருக்கும்.

உலக நூலகங்களில் அதிகமாகத் திருடப்படும் நூல் என்ற சாதனையும் கின்னஸ் புத்தகத்துக்கு உண்டு.

கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் தலைமையகம் இங்கிலாந்தின் லண்டனிலும் பிராந்திய அலுவலகங்கள் அமெரிக்கா , பராகுவே , ஜேர்மனி , இத்தாலி , துபாய் , துருக்கி , இந்தியா , சீனா , ஜப்பான் , அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் உள்ளன.

அதிகாரபூர்வமாக பயிற்சி பெற்ற உலக சாதனை தீர்ப்பாளர்கள் 69 பேர் இந் நாடுகளில் உள்ளனர்.

உலக சாதனைகளை கோவைப் படுத்தும் அல்லது ஆவணப்படுத்தும் மிகப் பெரிய நிறுவனமாக கின்னஸ் மக்களின் ஏகோபித்த அங்கீகாரம் பெற்றுள்ளது.

புத்தக வடிவுடன் மட்டுப்படுத்தாது தொலைக் காட்சி அருங்காட்சி என பல் வேறு ரூபங்களில் விஸ்தாரம் பெற்றுள்ளது.

கின்னஸ் உலக சாதனை அருங்காட்சியகங்களும் உலகெங்கும் உள்ளன.

Guinness World Records Ltd., 3rd Floor,184 – 192 Drummond Street,London NW1 3HP அல்லது www.guinness worldrecords.com என்பன கின்னஸின் விலாசங்கள்.

கின்னஸ் பிரிவெரி என்பவரால் 1955 ஆம் ஆண்டு முதன் முதலாக கின்னஸ் சாதனைப் புத்தகம் 198 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது தொடக்கம் இன்று வரை மனிதராலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் மிகச் சிறந்த உசாத்துணை நூலாக திகழ்கின்றது.

1998 ஆம் ஆண்டின் பின்னர் புத்தகத்தின் தலைப்பில் உலக சாதனை என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் என்ற பெயரில் வெளி வருகின்றது.

கின்னஸ் தினம் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி என 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுவதுடன் கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும் வருடந்தோறும் இதே தினத்தில் வெளியாகின்றது.

முன்பெல்லாம் மிகப் பெரிய சாதனை உலக சாதனை என்றே வியக்கப்பட்டது! விளிக்கப்பட்டது!

ஆனால் இப்போதோ கின்னஸ் உலக சாதனை என்பதே உச்சம் தொடுகின்றது!

எப்பொழுது நினைத்தாலும் வெட்கம் தராத நிகழ்வே சாதனை!.

உங்கள் சாதனை உங்கள் வாழ்வின் நேசத்துக்குரிய ஒரு நேரமாகும்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *