Featureகட்டுரைகள்

காட்டுமிராண்டி மொழியா? கொதிக்கிறது குருதி! சூத்திர மனிதனா? குறைகிறது சுருதி!… ( கட்டுரை )

சிறுவயதில் இறை நம்பிக்கை மிக அதிகமாக கொண்டிருந்தாலும் இன்றும் வீட்டில் எனது குடும்பம் இறைநம்பிக்கை மிகுந்தவர்களாய் இருப்பினும் எனக்கு இறைநம்பிக்கை அவ்வளவாக கிடையாது. அதற்காக நம்மைக் காக்கும் இயற்கையைக்
கூட இறையாக எண்ணாத மூடன் அல்ல நான். அவர்கள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்பதை நான் இயற்கையாக மலையிலும் இருக்கிறான் மடுவிலும் இருக்கிறான் என்பதை உணர்கிறேன். பெரியார் தத்துவங்களைப் பிடிக்கும் என்பதால் நான் திராவிடர் கழகத்தான் இல்லை.

அரசியல் கட்சிகள் எதுவும் தமிழருக்கு நல்லது அதிகம் செய்யாமல் போனதால் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவனுமில்லை. ஐம்பது ஆண்டு அரசியலில் திராவிடக்கட்சிகளால் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னணியில் இருந்தாலும் இதைவிட எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை
இலஞ்சக் காடாக மாற்றிவிட்டார்கள். எங்கே இலஞ்ச வழக்கு தம்மீது பாய்ந்து
சசிகலா நிலை நமக்கும் வந்து விடுமோ என்று பயந்து தமிழ்நாட்டுக்கு தீங்கான திட்டங்களையும் எதிர்க்கும் துணிவற்று தமிழ் நாட்டையே சுடுகாடாக்க சுயநலத்துக்காக துணைபோகிறார்கள்.
ஆதலால் நான் எந்த அரசியல் கட்சியின் அபிமானியும் இல்லை. என் கருத்தை கூறும் உரிமை மட்டும் எனக்குள்ளது.

பெரியாரின் கருத்தைப் பிடிக்காதவர்கள் அவர் பேசியதன் உட்பொருளை உணராமல் மேம்போக்காக பார்க்கிறார்கள். எப்படி மகாத்மா காந்தியை குஜராத்தியர் என்று பார்க்காமல் அஹிம்சை மற்றும் விடுதலக்காகப் பார்க்கிறோமோ அப்படித்தான் பெரியாரை கன்னடர் என்று பார்க்காமல் சுயமரியாதைக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் பார்க்கவேண்டும். அவரின் தத்துவங்களில் உண்மை இருந்ததால்தான் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் எல்லாம் அவரது சிலைகள் உள்ளன.

இந்தியாவில்தான்  மக்கள் ஒன்றுபட்டு இன்பமாய் வாழ முடியாதபடி நீநியைச் சொன்ன மனு இருந்திருக்கிறார் என்றால் இலங்கையிலும் மக்களைப் பிரித்து இழிவுபடுத்த மக்களுக்கு தேவையற்ற கருத்துக்களை வழங்கிய ஆறுமுக நாவலர் தோன்றியிருக்கிறார் அல்லவா?

இவரைப்பற்றி இலங்கையைச் சேர்ந்த
அன்பர் திரு. கலையரசன் போன்ற உண்மையை தோலுரித்துக் காட்டுபவர்களால் மட்டுமே வெளியுலகத்துக்கு தெரியவருகிறது.
இவர்களெல்லாம் சமுதாயத்துக்கு ஆற்றிய அரிய தொண்டான மக்களைப் பிரித்து இழிவு செய்யும் மட்டமான செயலைப்பற்றி பேசாமல் அம்மக்களின் ஏற்ற தாழ்வு மற்றும் தீண்டாமையை ஒழிக்க சமூகநீதியைக் கையிலெடுத்த பெரியாரை குறைசொல்லல் எவ்வகை நியாயம்?

பலருக்கு தமிழ்நாட்டின் வரலாறு சரியாக தெரிவதில்லை. இன்று ஈழத்தில் நடந்தது
என்றோ திருமலை நாயக்கர் காலத்தில்
தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இலட்ணக்கணக்கான தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தெலுங்கர்கள் குடியேற்றப்பட்டார்கள். தமிழை புறந்தள்ளி
அரசுமொழியாக தெலுங்கை திணிக்க முயன்றதுடன் சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள. கோவில்களில் தமிழ் அர்ச்சகர்களையும் தமிழையும் வெளியேற்றி
பாரப்பணர்களையும் சமஸ்கிருதத்தையும் உள்ளே கொண்டுவந்தார்கள்.

இன்று ஈழத் தமிழர்கள் காண்பதை என்றோ தமிழ்தாட்டில் கண்டுவிட்டார்கள். இதையெல்லாம் எதிர்த்துத்தான் பெரியார் போராடினார். இதைமறந்து நன்றி மறந்து தமிழனால் எப்படி இருக்க முடியும்? இன்னா செய்தாரையும் ஒறுப்பவனல்லவா தமிழன். பெரியார் ஒன்றும் அரசியல் கட்சி தொடங்கவில்லயே. இலஞ்சம் வாங்கி நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கவில்லையே.

சிலருக்கு சகமனிதர்களை இழிவுபடுத்துகிறார்களே என்பதைக்காட்டிலும் ஒருவர் மொழியை இழிவுபடுத்திவிட்டார் என்று ஒரு கோபம்.
இந்தியாவில் மனுநீதி சொல்லி மனிதர்களிலேயே ஒருபிரிவினரை பிரம்மாவின் பாதங்களில் இருந்து பிறந்தவர்களென்று தீண்டத்தகாதவர்களாய் கற்பித்தார்கள். அதையே இலங்கையிலும் ஆறுமுக நாவலர் அரங்கேற்றியிருக்கிறார்.

இதற்கெல்லாம் கொதிக்காத குருதி மொழியை ஒருவர் காட்டுமிராண்டி மொழி என்று கூறியிருக்கிறார் என்று எண்ணி கொதித்தெழுகிறது. எனக்கும் பெரியார் அப்படிச் சொன்னதில் உடன்பபாடில்லலை.

மனிதன் தோன்றித்தான் மொழியை உருவாக்கினான். மொழி மனிதனை உருவாக்கவில்லை. மனிதன் அழிந்தால் மொழி அழிந்து விடும். மொழி அழிந்தால் மனிதன் அழிந்து விடுவதில்லை. ஆதலால் மொழியை விட மனிதன் உயர்ந்தவன் என்ற உண்மையை நாம் உணரவேண்டும். எனவே மொழியை இழிவு படுத்துபவரைவிட மனிதரை இழிவு படுத்துபவர் மேல்தான் அதிக கோபம் ஏற்பட வேண்டும். இங்கு ஒருவருக்கு இருவராக மனிதரை இழிவுபடுத்துபவர்களை விட்டு மொழியை ஒருவர் இழிவு படுத்துகிறார் என்று கொதித்தெழுகிறோம். மனிதனுக்கு எங்கிருக்கிறது நியாயம்?

இனி மொழிக்காக கொதித்தெழுவதில் எந்தவகையில் உண்மையுள்ளது என்று பார்ப்போம். எனக்கு என் தாய்மொழி மீது தீராத காதலுண்டு. எனவே ஒருவர் என் மொழியை பழிக்கிறார் என்றால் அதை எளிதாக கடந்து செல்ல முடியாது. தமிழ் மொழி இம்மண்ணில் முதன்முதலில் தோன்றிய மூத்தமொழி. தமிழில் இருந்தே மற்றமொழிகள் தோன்றின என்பது வரலாற்று உண்மை.

மனிதன் மண்ணில் தோன்றியவுடன் நாகரிகம் அடைந்து விடவில்லை. அவன் காட்டிலும் மலையிலும் காட்டுமிராண்டியாகவே வாழ்ந்தான். அவன் காட்டுமிராண்டியாக  வாழ்ந்தபோது பேச ஆரம்பித்த மொழிதான்
காட்டுமிராண்டிகளின் தாய்மொழியானது. ஆதித்தமிழன் காட்டுமிரண்டி என்பதால் அவன் பேசியமொழியையும் காட்டுமிராண்டி மொழி என்று மிகமிக தொன்மையான மொழி என்ற பொருளில் கூறியிருப்பார். அப்படித்தான் நான் பார்க்கிறேன்.

மிக மிக தொன்மையான மொழி என்றால் கோபம் வருவதில்லை. அதையே காட்டுமிராண்டியான காலத்தில் பேசப்பட்ட காட்டுமிராண்டி மொழி என்றால் கோபம் வருகிறது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருவரை “பசு மாதிரி வருகிறார்” என்று சொல்லும்போது வராத கோபம் அதையே சற்று மாற்றி “மாடு மாதிரி வருகிறார்” என்று சொல்லும்போது வருகிறதல்லவா? உண்மையில் பசு என்றாலும் மாடு என்றாலும் மாடு தான் என்பதை புரிந்து கொள்வதில்தான் சிக்கல் உள்ளது.

கோடிக் கணக்கான தமிழர் இருக்கிறோம். உண்மையிலேயே ஒருவர் தமிழை இழிவு படுத்துகிறார் என்றே வைத்துக் கொள்வோம். தமிழ் இழிவடைந்து விடுமா? இதேபோலவே கோடிக்கணக்கான மத நம்பிக்கை உடையவர்கள் இருக்கிறார்கள். யாரோ ஒருவர் பாதத்திலிருந்து பிறந்தவர்கள் என்பதால் மனிதர்கள் இழிவடைந்து விடுவார்களா? அப்போது மட்டும் கோபம் ஏன் வருவதில்லை? இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழன் ஆட்டுபவர்களுக்கு ஏற்றபடி ஆடும் பொம்மை ஆகிவிட்டான் என்றே தோன்றுகிறது.

ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், தமிழை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். கோபம் வருவதில் நியாயம் இருக்கிறது. அவர் மட்டுமே சொன்னார். ஆனால் தமிழை நீசபாஷை அதாவது இழிவான மொழி என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சொல்லும்போது எங்கே போனது தமிழ்பற்று?

இலங்கையில் நாயக்க என்ற பெயருடையவர்களெல்லாம் புத்தமதத்தை
தழுவி சிங்களரகளாகவே மாறி எப்படி ஆட்சி அதிகாரத்தைக் அனுபவிக்கிறார்களோ அப்படியே தமிழ்நாட்டிலும் நாயக்கர் காலத்தில் குடியேற்றப்பட்ட தெலுங்கர்கள் தமிழைத் தழுவி தமிழர்களாகவே மாறி ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள். அங்கிருக்கும் நாயக்காக்களை எங்கும் அனுப்பமுடியாது. ஏனென்றால் மலையகத் தமிழர்களை வெளியேற்ற போராடியவர்களைப் போல அவர்களை வெளியேற்ற போராடமாட்டார்கள். தமிழ்நாட்டிலும் தெலுங்கர்களை வெளியேற வேண்டும் என்று போராட மாட்டார்கள்.

சரி, இதற்கு என்னதான் வழி? நாமே சிந்திக்க வேண்டும். எல்லா இனத்துக்கும் வீழ்ச்சி ஏற்படத்தான் செய்திருக்கிறது. ரோமானியப் பேரரசு, கிரேக்கப் பேரரசு, சோழப் பேரரசு என்ற வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு பேரரசு வீழ்ச்சியடையும்போது அந்த இனமும் சேர்ந்தே வீழ்ச்சியடையும். ஈராயிரம் ஆண்டுகளாக வீழ்ந்நு கிடந்த இனம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சுயமரியாதை, பெண்ணடிமை போன்ற சமூகநீதிகளில் முன்னேறி இருக்கிறது என்பதை நேர்மையானவர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள்.

திராவிடக் கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் தமிழருக்கும் தமிழ்நாட்டிக்கும் தீங்குதரக் கூடிய அபாயகரமான சட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை உணர்ந்து மக்கள் மொழிக்காக 1967ல் எப்படி ஒரு மாற்று அரசியலை கொண்டுவந்தார்களோ அவ்வாறு மொழிக்காகவும் நாட்டு நலனுக்காகவும் ஒரு மாற்று அரசியலை கொண்டு வரவேண்டும். எல்லாவற்றிற்கும் தமிழர் பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும்.

இது சாத்தியமா என்றால் முடிந்தால் எல்லாம் சாத்தியமே என்ற உண்மை புலனாகும். சொந்த மண்ணை விட்டு விரட்டப்பட்ட இஸ்ரேலியர்கள் உலகின் பலபாகங்களில் பரவிக்கிடந்தாலும் மீண்டும் மிடுக்காக வந்து இஸ்ரேல் நாட்டை உருவாக்கவில்லையா? பொருளாதாரத்தில் எட்டமுடியா அளவுக்கு உயர்ந்து வல்லரசுகளையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லையா? அவர்களால் முடியும் போது நம்மால் ஏன் முடியாது?

தமிழ்நாட்டினர் நாட்டை ஒன்றும் இழக்கவில்லை. யாரை நம்ப வேண்டும் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் இலஞ்சம் வாங்கி வாக்குசெலுத்தி நம் உரிமைகள் எல்லாவற்றையும் ஏன் இழக்கவேண்டும் போன்ற எண்ணங்களை மட்டும் இழக்காமல் இருந்தால் போதும். பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழர்கள் வித்தியாசமானவர்கள் இல்லையா? ஒருவர் முதுகில் ஒருவர் குத்துவது, நான்தான் பெரியவன் நீதான் பெரியவன் என்ற மனப்பான்மை, ஒருவரை ஒருவர் குறை கூறவது, எங்களுக்கு எல்லாம் தெரியும் எங்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டாம் என்று சொல்வது போன்ற குணங்கள்
இல்லாமல்

எல்லோரும் தமிழரே என்ற உணர்வில் நாம் தமிழர் என்று இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டில் நல்லாட்சி மலரும்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

2 Comments

  1. நன்றி நண்பரே, உங்கள் உணர்வை மதிக்கிறேன். என் கட்டுரையை வாசித்து ஒற்றைச் சொல்லில் என்னை விமர்சித்ததில் மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வழ்த்துக்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *