“உன்னால் சிந்தனைகளைக் கொல்ல முடியாது”…. மல்லியப்புசந்தி திலகர்.

“உன்னால் சிந்தனைகளைக் கொல்ல முடியாது” (You cannot kill the ideas)
தோமஸ் சங்காரா பேசுகிறார் ஒரு விடுதலைப் போராளியின் உரைகளும் நேர்காணல்களும் – தொகுப்பு நூல் ![]()
மல்லியப்புசந்தி திலகர்.
கடந்த ஒக்டோபர் 8 – உலகம் முழுவதும் புரட்சிநாயகனாகக் கொண்டாடப்படும் சேகுவேரா வின் 53 ஆவது நினைவு தினத்தை பலரும் நினைவு கூர்ந்து எழுதி இருந்தார்கள்.
அவுஸ்திரேலியாவில் வாழும் எம்மவர், எழுத்தாளர், பத்திரிகையாளர் முருகபூபதி ‘அக்கினிக்குஞ்சு’ இணையத்தளத்தில் இரண்டு அங்கங்களாக எழுதியசேகுவேரா நினைவுக் கட்டுரை புதிய தகவல்களைப் தந்திருந்தது.
சேகுவேரா வின் உடல் புதைக்கப்பட்டுள்ள் சான்டா கிளாரா பிரேதேசத்துக்கான தனது நண்பர்களுடனான பயணத்தையும் சேகுவேரா நினைவுகளையும் இணைந்த அந்தக் கட்டுரையே இந்த நூலறிமுக கட்டுரைக்கான தூண்டுதலாக அமைந்தது. இன்று நாம் புரட்சி நாயகன் சேகுவேரா வின் 53 வது நினைவு தினத்தை நினைவுகூர்வதுபோல் அவரது 20 வதுநினைவு தினத்தை அனுஷ்டித்த அடுத்த வாரமே ஒக்டோபர் 15 ஆம் திகதி கொலைசெய்யப்பட்ட இன்னுமொரு புரட்சியாளனின் கதையே இந்த ‘தோமஸ் சங்காரா பேசுகிறார்’ ( Thomas Sankara Speaks – The Burkina Faso Revolution 1983-1987). 1988 ஆம்ஆண்டே முதல்பதிப்பு கண்ட இந்த நூல் 2014 ஆம் ஆண்டு ஐந்தாம்பதிப்பினையும் கண்டுள்ளது. சே குவேரா நம் சமகாலத்து நாயகனாக கொண்டாடப்படுவதற்கு காரணமே அவர் மக்களுடன் மிக அண்மித்து இருந்ததும், அண்மைய காலம் என கருதப்படக்கூடிய 1967 ஆண்டே இந்த உலகைவிட்டுப் பிரிக்கப்பட்டார் என்பதுவும்தான். அவரது நெருங்கிய தோழரான கியூப அதிபர் பிடல் கஷ்ட்ரோ மிக மிக அண்மைய 2016
ஆண்டுதான் இறந்தார் என்பது சே குவேராவை மேலும் மக்களிடத்தில் அண்மித்து வைத்திருப்பது. இதே போல1987 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆபிரிக்க நாட்டு புரட்சியாளனே இந்த தோமஸ் சங்காரா.![]()
இவர் கியுபா சென்று பிடல் கஸ்ட்ரோவை சந்தித்து உள்ளதுடன் அவரது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். பிரெஞ்சு காலனித்துவத்துக்குள் அகப்பட்டிருந்த ஆபிரிக்க தேசங்களில் ஒன்றான அப்பர் வொல்ட்டாவில் ( Upper Volta) 1949 ஆண்டு பிறந்தவர் தோமஸ் சங்காரா. உதவி பொலிஸ் அதிகாரியின் மகனான இவர் சாதாரண பாடசாலைக் கல்வியை அடுத்து இராணுவ கல்லூரியில் உயர்கல்வியையும் பெறுகிறார்.1972 ஆம்ஆண்டு மடகஸ்கார் நாட்டில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் ஆட்சி கவிழ்ப்பையே நிகழ்த்தியிருக்கிறது. அப்போது இவரிடம் பற்றிக் கொண்ட அரசியல் சிந்தனைகள் இவரை புரட்சிகர சிந்தனையாளராகவும் அடுத்து வந்த காலத்தில் ஒரு நாட்டுத்தலைவனாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது. கார்ல் மார்க்ஸ், லெனின் போன்ற அறிஞர்களின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்ட இவருக்குள் சேகுவேரா பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 1974 ஆம் ஆண்டு தனது நாடான அப்பர்வோல்ட்டா வின் இராணுவ சேவையில் இணையும் இவர், தனது நாடு பிரேஞ்சு தலைநகர் பாரிசிலும் வேறு இடங்களிலும் வாழும் நிலச்சுவாந்தர்கள், வணிகர்கள், பழங்குடித்தலைவர்கள், அரசியல்வாதிகளைக் கொண்ட ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கையில்அகப்பட்டு இருப்பதன் மீது அதிருப்தி கொண்டவராக 1982 ஆம் ஆண்டு அரச பணியினைத் துறந்து புரட்சிப்பாதையில் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தனத புரட்சிகர அரசியல் பயணத்தில் நான்கே ஆண்டுகளில் பல எல்லைகளைக் கடந்த இவரது பயணம் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8-10 வரையான திகதிகளில் சேகுவேராவின் 20 வது நினைவு தினத்தையொட்டிய அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் கண்காட்சியையும் 29 நாடுகளும் 40 அமைப்புகளும் இணைந்துஒழுங்கு செய்த மாநாட்டையும் நடாத்தி அதில் இறுதி உரையையும் ஆற்றியதை அடுத்து, ஐந்தே நாளில் ஒக்டோபர் 15 ஆம் திகதி தனது ஐந்து அமைச்சர்கள் ஏழு பாதுகாப்பு வீர்ர்களுடன் சகிதம் துப்பாக்கித் தாக்குதல் மூலம்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது அரசியல் பயணத்தில் இவரது உரைகளும் நேர்காணல்களும் புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்துவந்துள்ளதுடன் அதற்கான செயற்பாட்டு வடிவங்களையும் கண்டு உள்ளது. அதுவே அவரது மரணத்துக்கும் காரணமாகியுள்ளது. அத்தகைய இவரது உரைகளும் நேர்காணல்களும் தொகுக்கப்பட்டு இங்கே நூலாக்கம்பெற்றுள்ளது. பாத்பைன்டர் (Pathfinder) நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் இந்தநூல் 448 பக்கங்களையும் பின்னிணைப்புகளையும் கொண்டது.![]()
இவரது உரைகளின், நேர்காணல்களின் தலைப்புகளே அதன் உள்ளடக்கத்தையும் தோமஸ் சங்காரா பற்றிய புரிதலையும் ஏற்படுத்த வல்லன. மக்களின் எதிரி யார்? (1983 பொதுக்கூட்ட உரை), நமது நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் (1983 பிரகடனம்), அதிகாரமே உணர்வுள்ள மக்களின் ஆயுதமாதல் வேண்டும் (1983 ஊடகச்சந்திப்பு), எதேச்சதிகாரத்துக்கும் சமூக சமத்தவமின்மைக்கும் மாறான புதிய சமூகத்தைக் கட்டி எழுப்புதல் ( 1983 அரசியல் திசைமுகப்படுத்தல்உரை ), புரட்சிகர மக்கள் நீதிமன்றங்கள் ( 1984 தொடக்கவுரை ), நிறம் ஒன்றே ஆபிரிக்க ஐக்கியம் ( 1984 ஆபிரிக்க சுற்றுப்பயண முடிவில் ஆற்றிய உரை ), நமது போராட்டத்துக்கான பலத்தினை கியூப உதவியிலும்உதாரணத்திலும் பெறுதல் (1984 ), எமது கலாசாரத்தை உறுதி செய்தல், எமது அடையாளத்தை உறுதி செய்தல்( 1984 ஓவியக்கண்காட்சி யில் ஆற்றிய உரை), கறுப்பு ஹார்லமே (நகரம்) எமது வெள்ளை மாளிகை ( ஹார்லெம் நகர பொதுகூட்டம் 1984), சுதந்திரமே வெற்றியாதல் வேண்டும் (ஐ.நா பொதுக்கூட்ட உரை 1984), ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நாம் இணைந்து போராடுதல் வேண்டும் ( நேர்காணல் – இன்டர்கொன்டின்ன்டல்1984), எதிர்காலத்தைக் கண்டறியும் தைரியம் ( ஜீன் – பிலிப் ரப் உடனான நேர்காணல்1985), எம்மீது நியாயமற்ற வகையில் கட்டவிழ்த்துவிடப்படும் யுத்தங்கள் ஏராளம் ( 1985 பொதுக்கூட்ட உரை), ஆபிரிக்காவின் மேல்..( மொங்கோ பெட்டி உடனான நேர்காணல் 1985), மாலி துருப்புகள் சிறைக்கைதிகளல்ல; அவர்கள் நமது சகோதர்ர்கள் ( மாலி – பர்க்கினா தோழமை பேரணி 1986), ஏகாதிபத்தியமே எங்கள் காடுகளையும் புல்வெளிகளையும் பற்றியிருக்கும் தீ ( மரங்கள் காடுகள் குறித்த சர்வதேச மாநாடு – பாரிஸ் 1986),
புத்தகங்களும் வாசிப்பும் (1986 நேர்காணல் – ஜூன் ஆப்ரிக் இதழ்), பிரான்ஸ், போராடும் ஏனைய மக்களுடன் எங்களைப் பேசவைக்கிறது ( பிராங்கோபொன் மாநாட்டுச் செய்தி1986) CDR இன் பணி ; உணர்வைத்தூண்டுதல், இயங்குதல், விளைவுகளைக் கண்டறிதலாக இருத்தல் வேண்டும் CDR – Committees for the Defence of the Revolutionary ( கமிட்டியின் முதலாவது மாநாட்டு உரை 1986), நிக்கரகுவாவின் பக்கத்தில் ( டெனியல் ஒர்ட்டேகாவுக்கான வாழத்துச் செய்தி 1986), அணிசேரா நாடுகளின் அமைப்பு என்ன செய்கிறது ? ( சிம்பாப்வேயில் இடம்பெற்ற அணிசேரா மாநாட்டு உரை 1986), ஒரு மரணம் எங்களுக்கு பலமூட்டவதாகவும்்அறிவூட்டுவதாகவும் இருத்தல் வேண்டும் (சமோரா மைக்கல் இன் இரங்கல் உரை 1986), நாம் நிக்கரகுவா போராட்டத்தை உலகறியச் செய்தல் வேண்டும் ( மாங்குவா நகர பொதுக்கூட்டம் 1986), இங்கேயும் பிரான்சிலும், எம்மைச் சுரண்டுவோருக்கும் ஒடுக்குவோருக்கும் எதிராக… ( 1986), பெண்விடுதலை இல்லாத புரட்சி வெற்றி பெற முடியாது ( சர்வதேச பெண்கள்தினம் 1987), கடனுக்கு எதிரான ஓர் ஐக்கிய முன்னணி ( ஆபிரிக்க ஐக்கிய முன்னணி மாநாடு1987), நாம் கியூப எண்ணம் கொள்ளுதல் வேண்டும் ( கியுபா வானொலி பேட்டி 1987), நமது புரட்சியின் தேவை வெற்றிகாணும் மக்களுக்கானதல்ல, நம்பிக்கைக்கொள்ளும் மக்களுக்கானதாகவேண்டும் ( தாம் ஆரம்பித்த புரட்சியின் நான்காம் ஆண்டு நிறைவு மாநாட்டு உரை 1987), எட்டு மில்லியன் பர்கினியன்களும் எட்டுமில்லியன் புரட்சியாளர்கள் (தாம் ஆரம்பித்த புரட்சியின் நான்காம் ஆண்டு நிறைவுமாநாட்டு அரசியல் திசைமுகப்படுத்தல் உரை 1987), உன்னால் சிந்தனைகளைக் கொல்ல முடியாது ( சேகுவேரா மறைவின் 20 வது ஆண்டு நினைவஞ்சலி உரை) இப்படி முப்பது உரைகளையும், உரையாடல்களையும் கொண்ட இந்த நூலின் முப்பதாவது உரை உண்மையில் உருக்கமானது. ‘உன்னால் சிந்தனைகளைக் கொல்ல முடியாது’ (You cannot kill the ideas ) எனும் தலைப்பில் சேகுவேரா எனும் புரட்சி நாயகனுக்கு ்அஞ்சலி உரையாற்றிய அவன் வழிவந்த இனுமொரு புரட்சி நாயகனான தோமஸ் சங்காரா அந்த உரையோடு கொல்லப்படுகிறான். சங்காரா வாழ்ந்த காலம் நமது சமகாலம் என்பதாலோ, ஆபிரிக்க
தேசத்தில் நெல்சன் மண்டேலா எனும்பெரும் புரட்சிக்காரர் வாழ்த்ததாலோ என்னவோ பெரிதாக பேசுபொருள் ஆகவில்லை. ஆனாலும் இளவயதிலேயே தனது சிந்தனைகளைக் கூர்மையாக்கி வாழ்ந்து மறைந்த இந்தப் புரட்சியாளனின் உரைகளும் உரையாடல்களும் மிகுந்த கவனத்தைப் பெறுவதாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இடம்பெற்ற அணிசேரா மாநாட்டில் உரையாற்றியபோது தோமஸ் சங்காரா, அப்போது கொல்லப்பட்ட இந்திய பிரதமர் இந்திரா காந்தியை நினைவுகூர்ந்து நன்றி பகிர்ந்துள்ளார். அவரே தனக்கு அணிசேரா மாநாட்டில் உரையாற்ற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அதற்கானஆலோசணைகளையும் வழங்கியதாகவும் உரையிலே குறிப்படும் சங்காரா தனது ஆழ்ந்த மரியாதையையும் செலுத்தியுள்ளார். 1984 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் சங்காரா ஆற்றிய உரையில் பின்வருமாறு பதிவுசெய்கிறார். “ ஏழு மில்லியன் குநழ்தைகளும், பெண்களும், மனிதர்களும் பசியால்,தாகத்தால், புறக்கணிப்பால் செத்துக்கொண்டிருக்குத் தேசத்தில் இருந்து வருகிறேன்.எனது அபிலாஷை எல்லாமே எனது மக்களின் குரலாக ஒலிப்பதே. இந்த உலகில் மரபுரிமை மறுக்கப்படவர்கள் சார்பாக பேசுவதே. எங்கள் கிளர்ச்சிக்கான காரணத்தைக் கூறுவதே” 159 நாடுகளின் பேராளர்கள் முன்னிலையில் ஐ.நா அவையில் “பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் தேசத்தில் இருந்தும் சகோதர வாழ்த்துச் செய்தியை உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன்” எனும் உரையை ஆற்றும் வல்லமையை முபத்தைந்து வயதான ஒரு இளைஞர் பெற்றுக் கொண்டிருக்கிறார். “நான் இங்கே இதனைப் பேசுவதால் எனக்கு டாக்டர் பட்டம் பெறும் நோக்கமில்லை.நான் இயேசுவோ , நபிகளோ அல்ல. என்னிடம் அந்தளவிற்கு உண்மை இல்லை. எனது அபிலாஷை எல்லாமே எனது மக்களது குரலாக ஒலிப்பதே” என்று ஒடுக்கப்பட்ட தேசங்களின் குரலாக ஒலித்திருக்கிறார். பர்க்கினா பாசோ ( Burkina Faso ) எனப் பெயர்மாற்றம் பெற்ற தனது அப்பர் வொல்ட்டா மக்களினதும் ஆபிரிக்கமக்களினதும் குரலாக மட்டுமின்றி உழைக்கும் வர்க்கத்தினதும் பெண்களினதும்
இளைஞர்களினதும் குரலாக, புரட்சிகர தலைவராக தோமஸ் சங்காரா வாழ்த்துள்ளார் என்பதன் அடையாளமாக இந்த நூலின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவரது உரையில், உரையாடலில் ஒரு சமூக இழையோட்டத்திற்கான அடிப்படைத் தெரிகிறது. ஓவியக்கண்காட்சி, இயற்கை குறித்த பார்வை, வாசிப்பு, பெண்கள் குறித்த முற்போக்கு சிந்தனை, நன்றியுணர்வு, சர்வதேச பயணங்கள், சர்வதேச மாநாடுகள் என குறுகிய காலத்தில் துணிச்சலான அரசியல் பயணம் ஒன்றின்்தடமாக இந்த நூல் அமைகிறது. இவரது உரை, உரையாடல் தலைப்புகளில் ஓர் இலக்கிய நயம் விரவிக்கிடக்கிறது. இலக்கிய நயம் மிகுந்த இந்த நூலினை 2016 பிரான்ஸ் இலக்கிய சந்திப்பின்போது எனக்கு அன்பளிப்பாக வழங்கிய மூத்த தோழமை அழகிரி அவர்களுக்கு நன்றி கூறி இலக்கியச் சாரல் பகுதியில் கேசரி வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
( நன்றி: வீரகேசரி வாரவெளியீடு )
![]()