Featureகட்டுரைகள்

பச்சை நாகரிகம்!…. ( கட்டுரை ) … இளவாலை எஸ்.ஜெகதீசன்.

உலர் வலய நாடுகளில் வருடம் பூராவும் குளிர் வலய நாடுகளில் கோடை காலத்திலும் நன்கு வெளியே தெரிந்து எல்லோரையும் சற்று உற்றுப் பார்க்க வைப்பது – பச்சை நாகரிகம்.

உடல் தழுவும் இக் கலாசாரத்தை தற்போதைய தமிழர் பெரிதும் மோகிப்பது இல்லை.

தமிழரின் கை விடப்பட்ட நாகரிகம் இது என்ற கருத்தும் கை விடப்பட்ட தமிழரின் நாகரிகம் இது என்ற கணிப்பும் இன்னமும் சிலரிடம் நிலவுகின்றது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இக் கலாசாரம் தூர கிழக்கு நாடுகளில் பரவுவதற்கு ஜப்பானிய சுதேசிகளான அயனுகளும் நியுஸிலாந்தின் பழங்குடியினரான மவோரிகளும் முன்னோடிகளாக அமைந்தனர்.

அவர்களிடமிருந்து மங்கோலியர்களிடம் வியாபிக்க மங்கோலியரிட மிருந்து ரோமரும் கிரேக்கரும் அபகரித்து உலகெங்கும் உலவ விட்டதே பச்சை நாகரிகம் என்பதும் சம காலத்திலேயே நியூஸிலாந்து மவோரிகளிடமிருந்து எகிப்துக்கும் தென் அமெரிக்காவிற்கும் கடலோடிகள் கவர்ந்து சென்றனர் என்பதும் தொல்லியல் ஆராய்ச்சியாளரின் கணிப்பு.

ஜப்பானிய அயனுகளும் நியுஸிலாந்தின் மவோரிகளும் தென் அமெரிக்க ஹைடாகளும் தமது தொல்குடித் தொன்மத்தை இன்று வரை முக்கியத்துவம் கொடுத்துப் பேணுகின்றனர்.

மனித தோலில் பச்சை குத்தியதற்கான சான்றுகள் கிமு 4 மிலேனியம் வரை ஆழமாகப் புதைந்து உள்ளது.

கற்காலத்தில் அது அழகுக்கு அடையாளமானது.

அடையாளத்திற்கு அழகு சேர்த்தது.

பொற்காலத்தில் காதலர்களுக்கு காதல் சின்னமாகவும் பக்தர்களுக்கு உடனுறை தெய்வமாகவும் மூட நம்பிக்கை உள்ளவர்களுக்கு தாயத்தாகவும் முரடருக்கு ஆழ் மனப் பிரதிபலிப்பாகவும் பச்சை மேனியில் கோலமிடுகின்றது.

இளமையில் குத்திய பச்சை முதுமை வரை அழிவதில்லை என்ற பழமை மாறி பச்சை குத்துவதால் ஏற்படும் வலியும் செலவும் அதனை அகற்றுவதற்கு பன்மடங்கு அதிகமாகும் என்ற நிலைமை நவீன யுகத்திலுண்டு.

மனச் சோர்வு பதட்டம் உள்ளவர்கள் பச்சை குத்திக் கொள்வதன் மூலம் நிவாரணம் பெறுவதாக ஒரு கருத்தும் துளையீட்டு மருத்துவ முறைக்கு நிகரானது என்ற கருத்தும் நிலவுகின்றது.

ஆரம்பத்தில் உலகெங்கும் குறைவான பச்சை குத்தும் நிலையங்கள் மறைவிடங்களில் இயங்கின.

ஆனால் தற்பொழுதோ நிலையங்கள் கண்ட கண்ட இடங்களிளெல்லாம் குத்துகின்றன.

அதற்கு பச்சை குத்துவதில் தேர்ந்தவர்களின் வளர்ச்சியும் நவீன உபகரணங்களின் வருகையும் பச்சை குத்திக் கொள்வதில் உள்ள ஆர்வமும் காரணமாகலாம்.

முப்பரிமாணத்துடன் உருவாக்கப்படும் பச்சை குத்துதல் மிகவும் கிராக்கி பெற்று முனைப்புடன் முன்னேறுகின்றது.

தோலின் தன்மையை உணரக் கூடிய நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படுவதால் பல வர்ணங்களைக் காட்டுவதுடன் வேதிப் பொருட்கள் படும் போது ஒளிரும் தன்மை கொண்டதாகவும் பக்க விளைவுகள் அற்றதாகவும் முப்பரிமாண பச்சை ஏகோபித்த விருப்புடன் முன்ணணியில் உள்ளது.

உடல் முழுவதும் பச்சையால் நிரப்பி வேறு கிரக வாசியோ என மிரட்டுபவர்களும் விரல் நகங்களின் அளவில் மிகச்சிறிய உருவங்களுடன் உறுத்தாதவர்களும் கோட்டோவியம் போல ஒற்றைக் கோட்டால் அலுவலை முடிப்பவர்களும் கோலங்களின் களமாக மாறியவர்களும் நகரத்தின் முக்கிய கட்டிடங்களை மேனியைச் சுவராக்கிச் சுமப்பவர்களும் பச்சை மீதுள்ள தமது இச்சையை வெளிப்படுத்துவதை உலகெங்கும் காணலாம்.

உடம்பில் உள்ள தழும்புகள் வடுக்கள் மருக்கள் கரும் புள்ளிகள் போன்றவற்றை மறைக்க முடியாமல் தவித்தவர்கள் தற்பொழுது அவற்றின் அருகே பொருத்தமான வடிவங்களை வரைந்து அழகூட்டிட வாய்ப்பளிப்பது தொன்மத்தின் தொடரான இந்தப் பச்சையே!

செல்லப்பிராணிகளை பச்சை குத்திக்கொண்ட காலம் மெல்ல மெல்ல அருகி செல்லப்பிராணிகளுக்கே பச்சை குத்திக் கொள்ளும் அநாகரிகம் படு வேகமாக அருகில் வருகின்றது.

தொலையாதிருப்பதற்கான அடையாளம் அது என்கிறார்கள் நாகரிகவாதிகள்!

தொலைந்து போன அடையாளம் அது என்கிறார்கள் ‘பட்டிக்காட்டார்’!

மனித உடம்பில் தமது செல்லப்பிராணிகளின் உருவங் களையும் செல்லப்பிராணிகளின் உடலில் தமது முகங் களையும் பச்சை குத்திக் கொள்ளும் வேடிக்கை மனிதர் பழக்க தோஷத்தில் பாம்பை பிடித்து பச்சை குத்த முயன்றால் என்னாவது!

செல்லப்பிராணிகளுக்கு பச்சை குத்துவது நெறிமுறையா என்ற சர்ச்சை புறந்தள்ளப்படுகின்றது. செல்லப் பிராணிகள் வலியால் துடித்தாலோ தொற்று நோயால் துவண்டாலோ உரிமையாளர் சிறை செல்ல நேரிடலாம்.

பூதகர வடிவம் எடுத்துக்கொள்ளும் பச்சை எது தெரியுமா?

அது கண்ணுக்குள் மை ஊற்றுவது!.

கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக் கொண்டு என்ற சொல்லடை சாதாரணம்.

அது என்ன புதிதாய் கண்ணுக்குள் மை என்கிறீர்களா?

இது கண்ணுக்குள் பச்சை குத்தும் குருட்டு நாகரிகம்..

மன்னிக்கவும் நவீன நாகரிகம்.

விழி வெண் கோளத்தைச் சுற்றியுள்ள தோலினுள் (sclera) நீலம் ஊதா பச்சை கறுப்பு போன்ற நிறங்களில் ஒன்றை பரவவிடுவார்கள்.அது விழி மென்சவ்வு ஊடாக உள்ளிறங்கி படிந்துவிடும்.பின் அந்த விழி அந்த நிறத்தில் பயங்கரமாத் தோற்றமளிக்கும்.

இந்த நவீன நாகரிகம் கண்களுக்கு நிரந்தர வலியையும் பார்வை இழப்பையும் ஏற்படுத்த வல்லது.

உலக நாடுகள் பல இந்த நாகரிகத்தை தடை விதித்துள்ளன.

எனினும் மருத்துவ காரணங்களுக்காக கருவிழி படலத்தில் (cornea) ஊசி மூலம் உட்புகுத்தப்படும் பச்சையும் மூடித் திறக்கும் இமைகளில் குத்தப்படும் பச்சையும் பாதுகாப்பானவை.

நாக்கையும் பற்களையும் இப்பொழுது பச்சை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளதையும் ஆங்காங்கே காண முடிகின்றது.

சூரியன் – நட்சத்திரம் – புலி – ஓநாய் – காளைமாடு – சிலந்தி – பாம்பு – தேள் – சிறகு – ரோஜா – செவ்விந்தியர் – மண்டை ஓடு – பல்லி – டால்பின் – ட்ராகன் போன்றன தாயகத்தில் பிரபலம் பெற்றிருந்தது பச்சையான பசையான நினைவு.

முதன்முறை பச்சை குத்திக் கொள்பவர்களில் பெரும்பாலான ஆண்கள் தமது கையின் மேற் பகுதியையே அதற்குரியதாகவும் பெண்கள் கணுக்காலே அதற்கு உகந்ததாகவும் கருது கின்றார்கள். முன் கை

மணிக்கட்டு மறுபக்கத் தோள் கழுத்து முதுகு மார்பு என்பன முறையே அடுத்த அடுத்த அங்கங்களாக தெரிவாகின்றன.

ஆனால் இன்றோ..குத்தக் கூடாத உறுப்புகள் எவையோ அவைதான் முன்னுரிமை பெறுகின்றன.

தன்னை காதலிப்பவரின் பெயரை பச்சை குத்திக் கொள்பவர்கள் கண் கெட்ட காதலர்கள் என்றும் நான் உன்னை காதலிக்கின்றேன் என பச்சை குத்திக் கொள்பவர்கள் தூர நோக்குப் பார்வை உள்ள காதலர்கள் என்று கூறும் காதல் மன்னர்களும் அனுபவஸ்தர்களும் பச்சை உலகில் நிறைய உண்டு.

காதலர் காதலிக்கும் புதிய பச்சை வடிவம் எது தெரியுமா? தனித்தனியே ஓர் உருவத்தை வரைந்து கொள்வது. ஒன்றிணைந்தால் அது வேறு உருவமாக உரு மாறுவது. பாகுபலி படம் நினைவில் உள்ளவர்களுக்கு பச்சை தீ நீயடா பாடல் நினைவுவரின் கைகள் கோர்க்க சிறகாகி அழகு காட்டும்.

உடல் சிதைவுற்றாலும் இலகுவில் பச்சை சிதிலமடைவ தில்லை என்பதாலும் தீயில் எரியாது என்பதாலும் நீரில் கரையாது என்பதாலும் அகிலமெங்கும் ராணுவத்தினர் பலர் தமது விலா பகுதியில் பச்சை குத்துவதும் ஊன் அடையாளம் என்று அதை குறிப்பிடுவதும் பெரிய ராணுவ ரகசியமல்ல!

தற்போதைய கனடிய பிரதமரின் இடது தோளில் பிரமாண்ட மான பச்சை உள்ளது அவரை தழுவாதவர்களுக்கும் தெரியும்.

அமெரிக்க ஜனாதிபதிகள் 45 பேரில் 35 பேர் பச்சை குத்தியிருந்தமை உலகிற்கே தெரியும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கையில் கட்சிக் கொடியை வைத்திருத்தல் கட்டாயமல்ல!

ஆனால் கட்சிக் கொடியை கையில் பச்சை குத்தும் கட்டாயம் அவர்களுக்கிருந்தது.

ஹவாய் தீவுகளில் பச்சை குத்தாத ஆணை எந்தப்பெண்ணும் திருமணம் புரியக் கூடாது என்னும் விசித்திர சம்பிரதாயம் எழுதப்படாத சட்டம்.

பெண்கள் பூப்படைந்ததும் நெற்றியில் ஆரம்பித்து அங்கமெங்கும் விஸ்தாரம் பெறும் பச்சை குத்தும் பழக்கம் தொல் பழங்குடி மக்களின் வழக்கம்.

பச்சை குத்திக் கொள்ளாதவர்களை புறம்போக்கு எனக் கருதுவர்கள் ஆபிரிக்க மக்களில் ஒரு பகுதியினர்.

பச்சை குத்திக் கொள்பவர்கள் ‘அனுபவசாலிகள்’ என்ற அபிப்பிராயம் உள்ள பாமர மக்களும் இருக்கின்றார்கள்.

ஒரு காலில் சேவலையும் மறு காலில் பன்றியையும் பச்சை குத்தும் கடலோடிகள் நீரில் மூழ்க மாட்டார்கள் என்ற மூட நம்பிக்கையும் உண்டு.

அடுத்தவர் பெயரை பச்சை குத்தக் கூடாது.அது அன்னியோன்யமாக உள்ள உறவையோ நட்பையோ ஜன்ம விரோதமாக்கும்.666 மிகக் கூடாது.எதிர் மறை சக்திகளை இலகுவில் ஈர்கும்.

777 மிக நல்லது. பிள்ளையார் நல்லது. யானை நல்லது. டால்பின் நல்லது. லேடிபக் நல்லது.

– இவ்விதம் எண்ணுக்கணக்கற்ற நல்லது கூடாததுகளை உள்ளடக்கியது பச்சை உலகம்.

கிருமி நாசினி என காரணம் கூறி நிலக்கரியுடன் சிறு நீரையும் கலந்து பச்சை குத்துபவர்கள் இன்று இல்லை.

உலகெங்கும் பெண்களே பச்சை குத்திக் கொள்வதில் ஆண்களை விட கூடுதலான ஆர்வம் உள்ளவர்களாகத் தென்படுகின்றனர்.

முதன்முறை பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள் ஏற்கனவே பச்சை குத்திக் கொண்டுள்ள தமக்கு விருப்பமான ஒருவரை உடன் அழைத்துச் செல்வது ஒரு சம்பிரதாயமாக காணப்படுகின்றது.

அளவைப் பொறுத்து 15 நிமிடங்கள் முதல் பல தவணைகளில் பல மணித்தியாலங்கள் வரை பச்சை குத்துவதற்கு தேவைப்படும்.

அளவையும் தரத்தையும் குத்தப்படும் இடத்தையும் பொறுத்து கட்டணம் அறவிடப்படுகின்றது.

பல நாடுகளில் பெற்றோர் அனுமதித்தாலும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு பச்சை குத்துவது சட்ட விரோதமாகும்.

அத்துடன் சித்தப்பிரமை சரும வியாதி உள்ளவர்கள் கர்ப்பிணிகள் போதையில் சுய நினைவிழந்தோர் மீது பச்சை குத்தவும் தடையுண்டு.

எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி எவரும் எப்பொழுதும் எங்கும் பச்சை குத்திக் கொள்ளலாம் என்ற நிலை மெல்ல மெல்ல பல நாடுகளில் மாற்றம் காண்கின்றது.

உடல் நலத் தகுதிச் சான்றிதழ் அவசியம். ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு இசைவளிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் செயல்படுகின்றன.

பிரதம காவல் நிலையங்கள் மருத்துவமனைகள் சிலதில் நவீன இலத்திரனியல் பச்சை பாவனையில் ஈடுபடுத்தப் படுகின்றது.

இதனை பொருத்திய 15 நிமிடங்களில் இரத்ததில் உள்ள மதுசார அளவையும் நீரழிவு நோய்க்கு காரணமான கணைய நீர் மட்டத்தையும் அது வெளிப்படுத்தும். பின்னர் அதனை அகற்றிவிடலாம்.

கரும் புள்ளி செம் புள்ளி குத்துவது ஒரு நேர்த்திக் கடனாகவும் கருதப்பட்டது. கழுதை மீது ஏற்றி ஊரை சுற்றி வருவது ஒரு களங்கமாகவும் கணிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு கரும் புள்ளி செம் புள்ளி குத்துவதால் நோய் நொடியின் பாதிப் பிலிருந்து அவர்கள் பாதுகாக்கப் படுவர் என்பது அவர்களது நம்பிக்கை.

கரும் புள்ளி செம் புள்ளி குத்துவது தோலின் மீது சாயம் பூசுவது என்பதால் பச்சை குத்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பவர்களே அநேகர்.

பச்சை குத்திக்கொள்பவர்கள் எவருக்கும் கீழ் படியாத மூர்க்க குணம் உள்ளவர்கள் புரட்சியாளர்கள் என்ற குற்றச் சாட்டும் வரலாற்றில் உண்டு.

தோல் புற்று நோய் தோன்றுவதற்கும் அரிப்பு ஒவ்வாமை ஏற்படுவதற்கும் தொற்று நோய்கள் சில தொற்றுவதற்கும் பச்சையும் பச்சையான ஒரு காரணம்.

பச்சையில் நிரந்தரமானவை தற்காலிகமானவை என இரு வகை.

தோலின் மீது பூசப்படுபவை அல்லது ஓட்டப்படுபவை தற்காலிகம் எனவும் ஏனையவை நிரந்தரம்.

வயதாகி சருமம் சுருங்கி வறண்டிருப்பினும் என்றோ குத்திய பச்சை மட்டும் மங்காமல் அதில் இழையோடும் கலை நுணக்கத்தைப் புலப்படுத்தும்.

சிறு ஊசி முனைகள் மூலம் சருமத்தில் துளையிட்டு தோல் படலத்தின் ஆழமான கீழ் மண்டலத்தில் பச்சை வர்ணத்தைச் செலுத்துவதே பச்சை குத்துதலாகும்.

மேல் நோக்கி நகராத கலங்களுள் செலுத்தப்படும் வர்ணம் வாழ் நாள் முழுவதும் அங்கு தரித்திடும். தோலின் கீழ் சில மில்லி மீட்டர் அடியில் படிவதால் கண்களுக்கும் தெளிவாகப் புலப்படும்.

நச்சுத்தன்மையற்ற அதனை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வெளியேற்ற முயன்று விட்டு பின்னர் இருந்து தொலையட்டும் என விட்டுவிடும்.

மஞ்சள் மாவுடன் அகத்திக் கீரையை அரைத்து துணியில் கட்டி நெருப்பிலிட்டுக் கரியாக்கி நீர் கலந்து பசையாக்கி பச்சை நிறத்திலிருக்கும் அதனை கூரான ஆயுதத்தால் தொட்டு தோலில் குத்தி தேவையான வடிவங்களை வரைவது பண்டைக் கால பச்சை குத்தும் மரபாகும்.

ஆதியில் கூரான ஆயுதங்கள் மிருக எலும்புகள் மரக் கொப்புகள் சப்பாத்திக்கள்ளிச் செடியின் முட்கள் போன்றவற்றால் தோலின் மீது

ஆழமாக கீறி அக்காயங்களில் மூலிகைச் சாறு நிலக்கரி சாம்பல் மை ஆகியவற்றினால் அலங்காரம் ஊட்டி பச்சை குத்தப்பட்டன.

எரிமலைக் குழம்பின் இறுகிய பாறையைக் கூட பச்சை குத்தும் கருவியாக பழங்குடி பாவித்துள்ளது.

தற்பொழுது நவீன மின்சார உபகரணங்களின் நுண்ணிய ஊசிகளால் இரசாயன பல வர்ணக் கலவைகள் தோல் படலத்தின் ஆழமான கீழ் மண்டலத்தில் துல்லிய வடிவங்களில் பதிக்கப்படுகின்றன.

இந்த இரசாயனக் கலவையில் நிக்கல் (nickel) குறோமியம் (chromium) கோபால்ட் (cobalt) மங்கனீஸ் (manganese) டைடேனியம் டைஒக்சைட் (titanium dioxide) போன்றவை காணப்படும்.

இயந்திரம் மூலம் பச்சை குத்திக் கொள்வோரின் உடல் எறும்பு கடிப்பது போல சிறிதாய் வலிக்க நிமிடத்துக்கு 50 முதல் 3000 தடவைகள் மின் ஊசிகளால் தேவையான அளவு மையினை தோலினடியில் புகுத்த முடியும்.

மா மரங்களிலிருந்து மாங்காயை பிடுங்கி அதன் காம்பிலிருந்து வடியும் பாலை பச்சை குத்திய இடங்களில் ஊற்றி் அந்த இடம் பொங்கி கொப்பளம் ஆக அந்தப் பச்சை நீங்கிவிடும் என நம்பியவர்கள் கிராமங்களின் தொல்குடித் தழும்பாக இன்னமும் நினைவில் நிலவுவர்.

சித்தா மற்றும் ஆயள் வேத வைத்திய முறைகளாலும் லேசர் கதிர் சிகிட்சை மூலமாகவும் பச்சையை நீக்கலாம்.

கறுப்பு நீலம் ஊதா சிவப்பு இலகுவிலும் பச்சை மஞ்சள் சிரமத்துடனும் லேசரால் அகற்ற முடியும்.

பச்சை விட்டுச் செல்லும் தழும்பு மென் தோற் பகுதிகளில் தாமதமாகவும் தடிப்பான தோற் பகுதிகளில் விரைவாகவும் நீங்கும்.

நியூஸிலாந்தவரான லக்கி டயமண்ட் றிக் என்பவரே ஆகக் கூடுதலான பச்சைகளை உடையவர் என்ற பெருமை பெறுகின்றார். ஏற்கனவே உள்ள கடினமான நிறமுள்ள பச்சைகளின் மேல் வேறு வடிவங்களை மிருதுவான நிறங்களில் மீண்டும் குத்திய பின்பும் மேனியில் குத்த

இடமில்லாததால் கண் மடல்களிலும் வாயினுள்ளும் குத்தியுள்ளார். – ஏன் ‘அங்கும்’ குத்தியுள்ளார் இந்த ‘உம்மாண்டி.’

பறக்கும் போது மிதக்கும் போது மலை முகட்டில் ஆழ்கடலில் என பச்சை குத்துவதை சாதனை ஆக்கியவர்கள் நிறைந்தது இந்த உலகம்.

பச்சை குத்தாமலே நீங்கள் அழகானவர்தானே! பின் பச்சை எதற்கு என்பதை பச்சை தீட்டிக் கொள்ள முன்பாக சிந்தித்துக் கொள்வதும் அழகாகும்.

Loading

One Comment

  1. பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய அருமையான கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *