Featureகட்டுரைகள்

சாமானியனின் சரடு…..13…. ( கட்டுரை ) …. சங்கர சுப்பிரமணியன்.

என்னை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தவர் என் தாத்தாதான். சுயதொழிலையே பெரிதாக மதித்தார்கள். படிப்பது அறிவைப் பெருக்கிக் கொள்ளத்தான் என்பதை சொன்னால் குக்கிராமத்தில் அவ்வளவாகப் பெரிதும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் என்ன பயன்? ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்தாலே போதம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். அப்படியே படித்தாலும் என்ன
படிச்சு முடிச்சுட்டு கலைக்டர் வேலைக்கா போகப்போகிறான்? என்று நையாண்டி செய்பவர்களே அதிகம். அவர்களது மனநிலை அப்படி. ஏனெனில் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியே இருக்கும் கிராமம் அது.

அப்படி விவசாயம் செய்யும்போது அவர்களே முதலாளிகள். படித்து முடித்து விட்டு இன்னொருவனிடம் கைகட்டி வேலை பார்ப்பதை இழுக்கு என்று எண்ணிய மக்களும் இருக்கவே செய்தார்கள்.

விவசாயம் செய்வதால் அதற்கத் தேவையான மாடுகள் வளர்ப்பது. கூடவே ஆடுகளை வளர்ப்பது என்றும் அந்த ஆடு மாடுகளை மந்தைகளில் மேயவிட்டு மாலையில் வீட்டிற்கு அழைத்துவர என்று மாடுமேய்ப்பவர்கள் என்ற தொழிலெல்லாம் இருந்திருக்கிறது. மாடு மேய்ப்பதையும் கௌரவமான தொழிலாகவும் ஏற்றிருந்திருக்கிறார்கள்.

அதனால்தான் நாம்தமிழர் கட்சி சீமான்கூட அவர்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடுமாடு மேய்ப்பதைக்கூட அரசு ஏற்று நடத்தும் என்றார்.

அக்காலத்தில் மாடுமேய்ப்பதையும் கௌரவமான வேலையாகத்தான் எண்ணினார்கள். அடுத்தவனை ஏமாற்றி பிழைக்கும் தொழிலையும் பிச்சை எடுப்பதையும்விட மாடுமேய்ப்பது ஒன்றும்  கேவலமான வேலை இல்லை என்பார்கள். மாடுமேய்ப்பவனுக்கு நம்பி பெண்கொடுப்பார்கள். பெண்கொடுப்பவர் மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார் என்று கேட்டால் மாப்பிள்ளை மாடுமேய்க்கிறார். இரண்டு மந்தை இருக்கு. ஒரு மந்தையைத்தான் அவரால பார்க்க முடியுது. இன்னொரு மந்தையை பார்க்க வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார் என்று
பெருமையோடு சொல்வதுண்டு.

மாடு வளர்ப்பின் மூலம்  பசுமாடுகள் பால், தயிர், மோர், வெண்ணை, மற்றும் நெய் வியாபாரமும் காளைமாடுகள் உழுவதற்கும் மற்றும் இனவிருத்தி செய்வதற்கும் உதவுகிறது. ஆடு வளர்ப்பது பாலுக்கும்
இறைச்சிக்கும் பயன்படுவதால் கால் நடைவளர்ப்பதோ மாடுமேய்ப்பதோ மட்டமான தொழிலல்ல. அதனால்தானோ
என்னவோ வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்களை சில சமயங்களில் ஆசிரியர் கோபமாக நீங்களெல்லாம் மாடு மேய்க்கத்தான் இலாயக்கு என திட்டும்போது கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டும் எந்த சூடும் சொரணையும் ஏற்படுவதில்லை.

எனக்கும் இந்தமாதிரி அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சொல்லும்போது கோபம் வராவிட்டாலும் பயம் வந்தது. ஆசிரியர் சொல்லும் வாக்கு பலித்துவிடுமோ என்ற எண்ணம்தான். என் தாத்தா வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தார். ஒழுங்காக படிக்க வேண்டும். சரியாக படிக்காவிட்டால் ஏதாவது வேலைக்கு போகவேண்டியதுதான். தேர்வில் வெற்றியடையாமல் தோல்வி அடைந்து விட்டால் அதேவகுப்பில் மீண்டும் படிக்க வைக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். அவர் உண்மை சொல்லுகிறார அல்லது பொய் சொல்லுகிறாரா என்று தெரியவில்லை.

பொய்யாகவும் சொல்லி இருக்கலாம். அப்போதுதான் நன்றாகப் படிப்பேன் என்று எண்ணியிருப்பார். உண்மையாகவும் இருக்கலாம், யாருக்குத் தெரியும்? உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு சூழ்நிலையும் வந்தது. அதுதான் கடவுள் பாதி மிருகம் பாதி என்ற சூழ்நிலை. ஏய், என்ன ரெம்பவும் கதைவிடுற. கமலஹாசன் நடித்த ஆளவந்தான் படம் பத்து வருசத்துக்கு முன்னாலதான் வந்தது. ஆனா நீ என்னவோ படித்துக்கொண்டு இருந்தபோதே ஆளவந்தான் படம் வந்தமாதிரி கடவுள் பாதி மிருகம் பாதி என்று கதையெல்லாம் சொல்லலுற என்று நீங்கள் நினைப்பது எனக்கும் புரியாமல் இல்லை.

ஆனால் நான் சொல்ல வருவது தேர்வில்
பாதி வெற்றி பாதி தோல்வி. நான் ஏழாவது படிக்கும்போது சரியாகப் படிக்காததால்
ஆசிரியருக்கு பயந்து வெகு நாட்களாக பள்ளிக்கூடம் செல்லவில்லை. அப்புறம் சிரமப்பட்டு படித்ததால் தேர்வில் வெற்றி பெற்று விட்டேன். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தளவு இவ்வளவு நாட்கள் பள்ளிக்கு வந்திருக்கவேண்டும் என்ற கணக்கு இருப்பதால் அந்த அளவு நாட்கள் பள்ளிக்கு செல்லாததால் எனது தேர்வின் வெற்றியை நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனாலும் வெற்றபெற ஒரு வாய்ப்புள்ளது. அதற்கு ஒரு பரிகாரம் பண்ணவேண்டும்.

பரிகாரமாக கோவிலில் அர்ச்சணை பண்ண
வேண்டுமா? அல்லது எதுவும்
மந்திரவாதியிடம் மந்திரித்து கயிறு கட்ட வேண்டுமா? என்று குழம்பியிருத்த வேளை பரிகாரத்தை பள்ளயிலே சொன்னார்கள். ஒரு மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் வாங்கிவந்தால் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவித்து மேல் வகுப்புக்கு அனுப்பிவிடுவார்களாம். பள்ளியும் கோவில் மாதிரிதனே. கோவிலில் ஒருமாதிரி காணிக்கை என்றால் பள்ளயில் ஒருமாதிரி காணிக்கை. ஒருவழியாக தப்பிப் பிழைத்தேன். என் தாத்தா மருத்துவரிடம் சென்று காணிக்கையைப் கொடுத்து பையனுக்கு அடிக்கடி முடியாமல் போகிறது என்று சொல்ல அவரும் சோதித்துப் பார்த்து விட்டு ஆங்கிலத்தில் ஏதோ எழதிக் கொடுத்தார்.

என் தாத்தா பயபக்தியுடன் பள்ளியில் கொண்டுவந்து கொடுத்தவுடன் அருள்வாக்கு கிடைத்ததுபோல் என்னை மேல் வகுப்புக்கு அனுப்பி வைத்தனர். அப்போதே தெரிந்து கொண்டேன்.

நான் படித்து எழுதிய தேர்வு என்னைக் காப்பாற்ற வில்லை. ஒருதாள்தான் என்னை காப்பாற்றியது. இப்போதும் அதுதானே அரங்கேறுகிறது. தாள்தான் படிப்பதற்கு இடம், படிப்பு, வேலை, பதவிஉயர்வு, திருமணம், மருத்துவமனை, கடைசியில் சேரும் இடம் என எல்லாவற்றிற்றிலும் அந்த தாளின் ஆதிக்கம் எவ்வளவு வீரியத்துடன் செயல்படுகிறது என்பதை யாராலும் மறுக்கமுடியுமா? சாதாரணத் தாள் சகலத்தையும் ஆட்டிப்படைப்பதை நாமும் பார்த்துக்கெண்டுதான் இருக்கிறோம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *