கவிதைகள்

புவி மெச்சிடும் வகையிலே வாழ்ந்திடுவோம்!….. ( கவிதை ) கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 விவாதங்கள் செய்வதை விட்டிடுவோம் – என்றும்
         விரும்பாத சொற்களைக் கழைந்திடுவோம்
         குறைகூறும் பழக்கத்தை ஒழித்திடுவோம் – நாளும்   
         குன்றாத நட்புடன் வாழ்ந்திடுவோம் 
 
         பேராசை கொள்வதை விட்டிடுவோம்  – நிதம்
         பெரும்பொருள் சேர்ப்பதைத் தவிர்த்திடுவோம் 
         யாருக்கும் உதவாத பொறாமதனை  – நாங்கள்
         வாழ்வினில் இருந்துமே எறிந்திடுவோம் 
 
        மன்னிக்கும் இயல்பினை வளர்த்திடுவோம்  – என்றும்
        மற்றவர் மகிழ்ந்திடச் செய்திடுவோம்
        வெறுப்பினை வெறுப்புடன் பார்த்திடுவோம்  – நிதம்
        விருப்புடன் யாவர்க்கும் உதவிநிற்போம் 
 
        உழைப்பினை உயர்வெனக் கருதிடுவோம்  – நாளும்
        உண்மையை நேசித்தே நின்றிடுவோம்
        கிடைப்பதை நல்லதாய் ஆக்கிடுவோம்  – என்றும் 
        கீர்த்தியுடன் வாழ முயன்றிடுவோம் 
 
        புத்தியை நன்றாகத் தீட்டிடுவோம்  – நாளும்
        புத்துணர் வோடென்றும் இருந்திடுவோம்
        சத்தியம் நேர்மை யெலாமெமக்கு  – நல்ல
        சொத்தெனக் கொண்டுமே  வாழ்ந்திடுவோம் 
 
       நட்புடன் நாளுமே நடந்திடுவோம். – என்றும்
       நயமிகு சிந்தனை இருத்திடுவோம் 
       வெட்கிடும் செய்கையை விரட்டிடுவோம் – புவி
       மெச்சிடும் வகையிலே வாழ்ந்திடுவோம்  
       

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *