Featureஇலக்கியச்சோலை

அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்….. பூவுலகைக்கற்றலும் கேட்டலும்!

படித்தோம் சொல்கின்றோம்:

ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் பூவுலகைக்கற்றலும் கேட்டலும் –

முருகபூபதி.

பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா?

ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன.

https://www.facebook.com/397373090713448/videos/386173295453962/

அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில் வதியும் கவிஞர் ஆழியாள் மதுபாஷினி.

இவர், இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, தனது கல்வியை மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்து, பின்னர் மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமாணி பட்டமும், நியுசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுமாணிப்பட்டமும் பெற்றவர். தகவல் தொழில்நுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவும் பெற்றவர்.

உரத்துப்பேச, துவிதம், கருநாவு முதலான கவிதைத் தொகுப்புகளை 2000 முதல் 2013 வரையிலான காலப்பகுதிக்குள் வரவாக்கியவர். பூவுலகைக் கற்றலும் கேட்டலும் தொகுப்பு ஆழியாளின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆதிக்குடிகள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு.

ஆழியாளின் கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகியமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆழியாள் இலங்கையில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திலும் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றியிருப்பவர்.

பெண்கள் சந்திப்பு, மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதலான கலை இலக்கிய அமைப்புகளிலும் அங்கம் வகிப்பவர். இவரது கவிதைகள் ஊடறு, காலம், அணங்கு, மூன்றாவது மனிதன், பூமராங் முதலான இதழ்களிலும் வந்துள்ளன.

பூவுலகைக் கற்றலும் கேட்டலும் தொகுப்பினை ” அணங்கு” பெண்ணியப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பேரன்பும், பெருங்கருணையும் கொண்ட பூமித்தாய்க்கும் , ஆதிக்குடிகளுக்கும் இந்த நூலை ஆழியாள் சமர்ப்பணம் செய்துள்ளார்.

ஷேன் ஹென்றி, யுங்கே, ஈவா ஜோன்சன், ஜோன் லூயிஸ் கிளாக், ஏர்னி டிங்கோ, பான்ஸி ரோஸ் நபல்ஜாரி, அனெட் கொக்ஸ், கெவின் கில்பேர்ட், ரூபி லாங்போர்ட், ஜூன் மில்ஸ், லெஸ் ரஸிஸ், ஐரிஸ் கிளைட்டன், சார்மெயின்- பேப்பர்டோக்கிறீன், எலிசபெத் ஹொஜ்சன், லீசா பெல்லியர், லொரெயின் மக்கீ- சிப்பெல், டெபி பார்பன், ஆர்ச்சி வெல்லர், பொப் ரான்டெல், ஜூலி வட்சன் நுங்காராயி, ஹைலஸ் மரீஸ், ரோய் மோரிஸ், போலா அஜூரியா, ஜாக் டேவிஸ், ரெக்ஸ் மார்ஷல், கொஸ்டேன் ஸ்ரோங், லோரி வெல்ஸ் ஆகியோரின் கவிதைகளை ஆழியாள் தமிழுக்கு வரவாக்கியுள்ளார்.

இத்தொகுப்பினைப்படிக்கும்போது கென்யா முன்னாள் அதிபர் கென்யாட்டாவின் ஒரு கவிதையும் தமிழக எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரானின் ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (கதைத்தொகுதி) மற்றும் அண்மையில் நான் பார்த்து கலவரமடைந்த விஜய் சேதுபதியின் தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கத்தில் வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படமும் நினைவுக்கு வந்தன.

” அவர்கள் வரும்போது எங்களிடம் நிலங்களும், அவர்களிடம் வேதாகமமும் இருந்தன. பின்னர், எங்களிடம் வேதாகமமும் அவர்களிடம் எங்கள் நிலங்களும் இருந்தன.”

இது கென்யாட்டாவின் ஒரு கவிதை.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து பார்ப்போமேயானால், வனாந்தரமயமாதல், பாலைவனமயமாதல், வறட்சிமயமாதல், வெப்பமயமாதல், கிராமமயமாதல், நகரமயமாதல் முதலான பரிணாம வளர்ச்சியும் இவை தொடர்பான சிந்தனையும் மேலோங்கியிருந்தன. கடந்துவிட்ட சில நூற்றாண்டுகளிலிருந்து பார்த்தால் உலகமயமாதலும் பேசுபொருளாகிவிட்டது. இதற்கு தேசங்கள் பலியாகியிருப்பதை காணமுடிகிறது.

அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளையும் படிப்படியாக உலகமயமாதலுக்குத்தள்ளி, அவர்களின் நிலங்களை பறித்தவர்கள், அவர்களது சந்ததிகளை திருடி மதமாற்றமும் இனமாற்றமும் செய்தவர்களின் சந்ததி இன்று அவர்களை நினைவுகூர்ந்துவிட்டே அரச பொது நிகழ்வுகளை தொடங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

அறுபதினாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்றின் தொடர்ச்சியைக்கொண்டிருக்கும் இந்த ஆதிக்குடிகள் நூற்றுக்கணக்கான இனக்குழுக்களாக வாழ்பவர்கள். அந்தக்குழுக்களுக்கென தனித்தனி மொழிகள் – (வரிவடிவம் அற்ற பேச்சுமொழிக்குரியவை ) – பண்பாடுகள், கலாசாரங்கள் இருப்பதையும் அறிவோம்.

அவர்கள் மத்தியில் இசைக்கலைஞர்கள், புள்ளிக்கோலம் வரையும் ஓவியர்களும் வாழ்கின்றனர். பூமியை கற்றவர்கள். தங்களது உணவுத்தேவையை தாம் நேசித்த பூமித்தாயிடமிருந்தே பெற்றவர்கள். அவர்கள் கனவுகளை தேவதையாக பூஜித்தவர்கள்.

அவர்களின் வாழ்வில் அத்துமீறியவர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் வரலாறாகியுள்ளன. திரைப்படங்களாகவும் ஆவணப்படங்களாகவும் கவிதைகளாகவும், நாடகங்களாகவும், கதைகளாகவும் படைக்கப்பட்டுவருகின்றன.

தமிழர்களின் புலப்பெயர்விலிருந்து ஆறாம் திணையும் உருவாகியிருக்கிறது என்று ஆய்வுரீதியாக தெளிவுபடுத்தியிருப்பவர் கவிஞர் ஆழியாள். இவ்வாறு மக்களின் புலப்பெயர்வு குறித்து அக்கறையுடன் ஆய்வு செய்தவர், கங்காரு தேசத்தின் புதல்வர் புதல்வியரின் வாழ்வுக்கோலங்களையும் தமிழுக்கு வரவாக்கியிருக்கிறார்.

இத்தொகுப்பில் இடம்பெறும் ஜூன் மில்ஸ் எழுதியிருக்கும் “நான் இறக்கும்போது” என்ற கவிதையை பாருங்கள்:

நான் இறக்கும்போது – வேறு எதைச்செய்தாலும் என்னைத் – தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லாதீர்கள் – நான் இறக்கும்போது மனிதர் செய்த எந்தச் சவப்பெட்டிக்குள்ளும் – என்னை வைத்துவிடாதிருங்கள் – நான் இறக்கும்போது வெள்ளையரின் சாபப் பிரார்த்தனைகளைச் சொல்லி- என்பெயரில் செபிக்காதீர்கள்

நான் இறக்கும்போது / என் பிள்ளைகள் அனைவரையும் / அன்போடு பராமரியுங்கள் / நான் இறக்கும்போது என்னை குளிரோடையில் வைத்து / என் சகோதரிகள் குளிப்பாட்டி விடட்டும் / நான் இறக்கும்போது என் உடலின் நிர்வாணத்தை மரப்பட்டை கொண்டு உடுத்திவிடுங்கள் / நான் இறக்கும்போது ஏழிப்பாலை மரத்தின் மேலே / என்னை அடக்கச்செய்யுங்கள் நான் இறக்கும்போது என் பிள்ளைகள் அனைவரையும் அன்போடு பராமரியுங்கள் / நான் இறக்கும்போது என் கதையை நிர்மலமான / நீலவானின் கீழே சொல்லுங்கள் / நான் இறக்கும்போது நம் மூதாதையரின் வழித்தடங்களை முன்னெடுத்துச்செல்லுங்கள்

நான் இறக்கும்போது என் பிள்ளைகளுக்கு வாழ்தலைக் கற்றுக்கொடுங்கள் / நான் இறக்கும்போது என் பிள்ளைகளை அன்போடு பராமரியுங்கள் /

நான் இறக்கும்போது என்னை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லாதீர்கள்.

இக்கவிதையின் முதல் வரியையும் இறுதி வரியையும் படித்தபோது, எனக்கு கென்யாட்டாவின் மேலே குறிப்பிட்ட கவிதை வரிகள்தான் நினைவுக்கு வந்தன. நான் இறக்கும்போது என்ற இக்கவிதையை எஸ்.பி. எஸ். வானொலி தமிழ் ஒலிபரப்பில் ஆழியாளே வாசித்திருக்கிறார். அதற்கு சிறந்த பின்னணி இசையும் தரப்பட்டிருந்தது. எத்தனைபேர் கேட்டார்கள் என்பது தெரியாது. முடிந்தால் இணையத்தில் அதனைக்கேட்டுப்பாருங்கள்.

இத்தொகுப்பில் இடம்பெறும் கறுப்பு எலி என்ற கவிதை வரலாற்றுச்செய்திகளையும் தருகின்றது. இதனை எழுதியவர்: ஐரிஸ் கிளைட்டன்.

1941 ஆம் ஆண்டளவில் லிபியாவில் நடந்த கடும்போரின்போது அவுஸ்திரேலியப்படையில் ஆதிக்குடியினரும் இருந்துள்ளனர். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள்ளும் குகைகளிலும் எட்டுமாதங்கள் வரையில் தாக்குப்பிடித்திருந்தனர். அந்த வீரர்களை டொப்ருக்கின் எலிகள் என்பார்களாம்.

இலங்கைப்போர்க் காலத்தில் பதுங்குகுழிகளில் இருந்தவர்களின் கதைகளை அறிவீர்கள். அதுபற்றியும் அதிர்ச்சியும் கலக்கமும் சுவாரஸ்யமும் நிரம்பிய பல செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

எனது மகனும் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இருந்தவன். அவனும் தான் நாட்கணக்கில் கிழக்குத்தீமோரில் பதுங்கு குழியில் இருந்த கதைகளை சொல்லியிருக்கிறான்.

இக்கவிதையில் அன்சாக் தினம் பற்றியும் சொல்லப்படுகிறது. ஆதிக்குடியைச்சேர்ந்த ஒரு முன்னாள் போர் வீரர் பற்றிய இந்தக்கவிதை வாசகரிடத்தில் கண்ணீரை வரவழைக்கலாம். அந்த முன்னாள் வீரர் இறுதிக்காலத்தில், களிமண் தரையிலான தகரக்கொட்டிலில் தைத்துப்பொருத்திய பைகளை கதவாக்கி வாழ்ந்திருக்கிறார்.

இக்கவிதை இறுதியில் இவ்வாறு முடிவடைகிறது:

பெருமை மிக்க கறுப்பினக் குழுவைச்சேர்ந்த இவ்வீராதி வீரர் சுற்றிவர யாருமின்றி தன்னந்தனியனாய் இறந்துபோனார்.

இக்கவிதை, ஈழப்போரில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் பலரது இன்றைய வாழ்வுக்கோலங்களை நினைவுபடுத்துவதும் தவிர்க்கமுடியாததே!

ஒரு மாநிலத்தில் ஆதிக்குடி மக்களின் இன்றைய வாழ்வை சித்திரிக்கும் வகையில் சுயவிமர்சனப்பாங்கிலும் ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது.

தலைப்பு: பென்சன் நாள். இதனை எழுதியவர்: சார்மெயின் – பேப்பர்டோக்கிறீன்.

அவர்கள் தைல மரங்களுக்கு அடியில் குந்தியிருக்கிறார்கள்.

தபால் நிலையம் எப்போது திறக்கும் / என்று காத்திருக்கிறார்கள்.

மற்ற நாட்களைவிட இன்று கொஞ்சம் சுத்தமாக

சிலர் கதையளந்துகொண்டு, / சிலர் சிரித்துக்கொண்டு, வேறு சிலர் அமைதியாக குந்தினபடி,

கையில் கிடைக்கப்போகும் காசை / என்ன செய்யப்போகிறார்கள் என்று எவரும் பேசிக்கொள்ளவில்லை / அதற்கு தேவையும் இல்லை.

கடைசியில் எல்லோரும் போய் கிளப்பில்தான் கிடப்பார்கள் / சிரிப்பும் குடியும் அடிதடி கலாட்டாவுமாய் /

இன்று பென்சன் நாள்.

ஏரியிலும் குளத்திலும் தண்ணீரை அருந்திக்கொண்டிருந்த மக்களுக்கு “தண்ணியை” அறிமுகப்படுத்தியது யார் என்பது பற்றி இங்கு சொல்லவேண்டியதில்லை.

வந்தவர்கள் தண்ணியை மாத்திரமா அறிமுகப்படுத்தினர். இதுபற்றியும் ஆழியாள் இந்த நூலின் அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்:

” இம்மண் கைப்பற்றப்பட்டுப் புதிய ஆங்கிலேயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது, இச்சூழலைச் சாராத , இந்நிலத்துக்கு ஒவ்வாத எத்தனையோ பறவை, மிருகங்களும், தாவரங்களும், ஊர்வனவும் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை இப்பூர்வீக நிலத்தின் சுற்றுச்சூழற் சமநிலையை பெரிதும் குலைத்தன. புதிய நோய்களும் அறிமுகமாயின. ”

இங்கு வாழும் இலக்கியவாதிகள், குறிப்பாக கவிஞர்கள் அவசியம் படிக்கவேண்டிய கவிதைத் தொகுப்பு “பூவுலகைக்கற்றலும் கேட்டலும்” நான் இந்த நூலில் அம்மக்கள் பற்றி கற்றது சொற்பம்தான். காணொளியாகப் பெற்றவை அநேகம்.

ஆழியாளின் தீவிர தேடலிலிருந்து தமிழ் இலக்கியத்திற்கு வரவாகியிருக்கும் அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைளை படித்துக்கொண்டிருந்தபோது, எமது இலக்கிய நண்பர் நொயல் நடேசன் தான் சென்று பார்த்துவிட்டு வந்த Northern Tertiary யில் இருக்கும் உலறு கல்மலை பற்றிய பதிவும் நினைவுக்கு வந்தது.

ஆதிக்குடிகளின் அருங்காட்சியகத்தின் முன்னாள் இருந்த கண்ணடி உண்டியலில், ” இதுவரை எமது மண்ணில் இருந்து பெரிதளவு செல்வத்தை எடுத்தீர்கள். அதிலிருந்து சிறிது பணத்தை இந்த உண்டியலில் போடுங்கள் ” ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தேன். அந்தக் கூர்மையான சொற்கள் என்னிதயத்தில் ஆழமாகத் தைத்தது.

ஆழியாளின் மொழிபெயர்ப்பிலிருக்கும் கவிதைகளும் எமது இதயத்தை தைக்கின்றன.

வாசிப்பு அனுபவம் என்பது, வாசிக்கப்படும் புத்தகத்தினுள் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. வாசிக்கப்படும் புத்தகம், பல வாயில்களையும் திறந்துவிட்டு எம்மை அழைத்துச்செல்லும்.

—0—

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.