கவிதைகள்

கவிதை செய்யீரோ!…. ( கவிதை )….. சங்கர சுப்பிரமணியன்.

தீந்தமிழ் தேனை செவ்விதழ் பிழிந்திட
செவ்விதழ் வழியும் தேனெடுக்க மறந்து
தேமதுரத்தமிழின் பொருள் காணலானேன்
செவ்விதழ் பொழியும் செந்தமிழ் தேனாகும்

கயலென கன்னியர் கண்களை சொன்னால்
கவிதைநூல்களில் நீந்தும் என் கண்களை
கன்னியரும் ஒருநாளாகிலும் சொல்லாரோ
கயல்களில் பெண்ணின்றி ஆணில்லையோ

யார் மீட்டினாலும் இசைக்கின்றது வீணை
அவள் கைவிரல் மீட்ட இளந்தளிரெனில்
என் கைவிரலது மீட்ட நாண் அறுந்திடுமோ
என் விரல்தனை இரும்புலக்கை என்பீரோ

களமதில் நின்று கலங்கடிப்பதில் கண்டேன்
என்னைப்போன்றே எதிரியை களமாடினாள்
களமாடுதலிலே ஒரு கறை காணாதபோது
கன்னியும் என்னின்று எங்ஙனம் வேறென்பீர்

ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபடுத்தி
அனைவரும் ஒன்றென்ற நிலை மறைத்து
வாழ்ந்திடும் இவ்வுலகின் மரபினை மாற்றிட
கன்னியரே ஆண்களை கவிதை செய்யீரோ!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *