கவிதைகள்

இனிதாக வாழ்கவே பல்லாண்டு!… (கவிதை )….. சட்டத்தரணி சு.ஸ்ரீகந்தராசா.

அன்புள்ள எங்கள் இராணி அம்மாவுக்கு

அகவை தொண்ணூற்றி மூன்று!

என்றும் நலமாக, இவ்வுலகில் மகிழ்வாக

இன்னும் வாழ்கவே பல்லாண்டு!

 

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்ற தமிழ்

அறிஞருக்கு வாய்த்த நல்ல பேத்தி

பேசுதமி ழும்கவிதை ஓசைநயமாய் இருக்கும்

அம்மாவின் தமிழ் அழகின் நேர்த்தி.

 

ஆளுமை மிக்கதோர் அரசஅதி காரியவர்

அம்மாவின் கணவர் தங்க ராஜா

அவரோடு இல்லறத்தில் அன்பாக வாழ்ந்திருந்த

அழகுமனை யாள்ராணி தங்க ராஜா

 

இன்னுமொரு தாயாக இவ்வுலகிலே எனக்கு

இனிதாக வாய்த்த அம்மா என்னை

தன்னுடைய மகனாகத் தத்தெடுத் ததுபோலே

தந்தார்தன் அன்பு உள்ளம் தன்னை

 

அன்புள்ள இராணி அம்மா, உங்களைநான்

அன்ரிஎன்றே எப்போதும் அழைப்பேன்

என்னுள்ளே சுரந்துநிற்கும் எண்ணமெல்லாம்

இதயத்தில் அம்மா என்றே நினைக்கும்

 

எல்லோரையும் அன்பாய் அழைக்கின்றீர்கள்

இனிதாகப் பேசிமிக மகிழ்கின்றீர்கள்

சொல்லாலும் செயலாலும் உதவுகின்றீர்கள்

சுறுசுறுப்பாய் எப்போதும் இயங்குகின்றீர்கள்

 

தமிழ்மொழி யைஉயிராகக் கொண்டுள்ளீர்கள்

தமிழினத்தை உணர்வோடு கலந்துள்ளீர்கள்

அமிழ்தான கவிதைகளைப் படைக்கின் றீர்கள்

அறிவூட்டும் கட்டுரைகள் தருகின்றீர்கள்

 

மேடையிலே மிடுக்காகப் பேசுகின்றீர்கள்

மேன்மை கொண்டோர் பாராட்டைப் பெறுகின்றீர்கள்

நாடெல்லாம் புகழ்ந்திடவே வாழ்கின்றீர்கள்

நல்வழியை மற்றவர்க்கும் சொல்கின்றீர்கள்

 

நூறாண்டு தாண்டிநீங்கள் வாழ்ந்திட வேண்டும்

நூலோரும், மேலோரும் வாழ்த்திட வேண்டும்

பேரோடும் புகழோடும் விளங்கிட வேண்டும்

பிள்ளைகளும், பேரர்களும் மகிழ்ந்திட வேண்டும்

 

சீரான நூல்கள் இன்னும் எழுதிட வேண்டும்

செந்தமிழின் பெருமையினைப் பரப்பிட வேண்டும்

பாரெல்லாம் உங்கள்புகள் பரவிட வேண்டும்

பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடவேண்டும்

 

இன்னும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு

இராணி அன்ரி வாழ்கவே வாழ்கவென்று

சின்னவன் நான் வாழ்த்துகின்றேன் இறைவனின்

சீரடியில் தலை வைத்து வணங்கி நின்று!…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *