கவிதைகள்

நிம்மதியைக் கொடுத்திடுவோம் !…. ( கவிதை )…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

தென்னையைப் பார்ப்போம்

       தெரிவோம் நல்லதை

எடுத்துண்ட  நீரை

       இளநீராய்  ஈய்கிறதே 

கருக்குநிறை பனைமரம்

       காலிருந்து தலைவரைக்கும்

செருக்கின்றிக் கொடுக்கிறதே

         சிந்தித்தால் சிறப்பாகும்   !

 

கொடுக்கின்ற கனியாலே

       மரத்துக்கு  ஏதுபயன்

விதம்விதமாய்  சுவைகொண்ட

        பலகனிகள் வருகிறதே

அதையுண்டு சுவையறியும்

      ஆனந்தம் எமக்கன்றோ

உணர்வின்றி மரமழித்தல்

        உவப்பான  செயலாமோ  !

 

ஊர்நடுவே ஆலமரம்

       கிளைபரப்பி நிற்கிறது

யார்வருவார் யார்செல்வார்

      ஆலமரம் பார்ப்பதில்லை

வெப்பமதை உணராமல்

        வந்திருப்பார் மகிழ்வடைய

ஆலமரம் அமைவதனை

        அகமிருத்தல் அவசியமே  ! 

  

காலநிலை சமநிலை

          காட்டுமரம் தருகிறது

சாலையோர மரமெல்லாம்

         தளர்வுதனை போக்கிறது

உணர்வற்ற மரமென்று

        உறவுகளைத் திட்டுகிறோம்

உணர்வுள்ள நாம்மட்டும்

         மரமழித்தல் முறையாமோ !

 

பூவை அணைப்போம்   

          புறப்படும் புத்துணர்வு

காயாம் மனத்தைக்

         கனியாய் காண்போம்

செடியாய் முளைத்து

        விருட்சமாய் நிமிர்வோம்

நிழலாய்  இருப்போம்

        நிம்மதியைக்  கொடுத்திடுவோம் !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *