சாமானியனின் சரடு…..சரடு…2… ( கட்டுரை )… சங்கர சுப்பிரமணியன்.

பேய் இருக்கிறதா? இருக்கிறது என்பாரும் உண்டு. இல்லை என்பாரும் உண்டு. இதுவும் கிட்டத்தட்ட ஆத்திகர் மற்றும் நாத்திகர் மாதிரிதான். நாத்திகர்கள் பெரும்பாலும் பேய் இருக்கிறது என்பதை நம்ப மாட்டார்கள். ஆனால் ஆத்திகர்கள் பேய் இருப்பது உண்மை என்பார்கள்.
ஆத்திகர்கள் பேய் இருக்கிறது என்று சொல்ல வலுவான காரணம் இருக்கிறது. இவர்களுக்கு கடவுளுக்கு எதிரான ஒரு சக்தி வேண்டும். அதை கடவுள் அடக்க வேண்டும்.
அதனால் சைத்தான்,
இராட்சசன், அரக்கன், பூதம்
என்று உருவாக்கினார்கள். இந்த வகையில்தான் பேய், பிசாசுகள் உருவாக்கப் பட்டன.
ஏனென்றால் இந்த பேய்களை அடக்க மாந்திரவாதிகளும் அவர்களுக்கு துணையாக
துர்தேவதைகளும் இருக்கின்றனவாம். மனிதனில் சாதி சொல்லி கீழ்சாதி மேல்சாதி என்றவர்கள் கடவளில் சாதி இல்லாமல் எப்படி இவர்களால் இருக்க முடிந்தது என்று பார்த்ததில் பதில் கிடைத்தது. பேயை ஓட்ட துணை போகிறவர்கள் துர்தேவதைகளாம். அதில் சம்பந்தப்படாதவர்கள் துர்தேவதைகள் பட்டியலில்
வரமாட்டார்கள்.
பேயைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். பெண் பேயைப்பற்றி பார்ப்போம். பெண்பேய் என்றால் வெள்ளை நிறப்புடவை கட்டி தலைமுடியை விரித்திப் போட்டிருக்குமாம். பாதங்கள் இருக்காதாம். சில பேய்கள் மல்லிகைப்பூ வைத்திருக்குமாம். இன்னும் சில பேய்கள் ஒப்பாரி வைத்து அழவும் செய்யும் என்கிறார்கள் பார்த்துப் பழகியவர்கள்.
எனக்கு ஒரு சந்தேகம். ஏன் பேய் என்றால் வெள்ளைப்புடவை தலைவிரி கோலமாக இருக்க வேண்டும்? சற்று யோசித்து பார்த்தபின் ஓரளவு உண்மை தெரிந்தது. நமது பெண்களில்
பெரும்பாலானோர் வெள்ளை நிறப்புடவைகள் அணிவதில்லை. கணவனை இழந்தவர்களில் சிலர் மட்டுமே வெள்ளைப்புடவை அணிவார்கள். அடுத்தபடி பெண்கள் கூத்தலை வாரி முடித்துக்கொள்வார்கள்.
பெண் பேய்களை பெண்களில் இருந்து வித்தியாசப் படுத்தி காட்ட வேண்டும். ஆதலால் பேய்களுக்கு வெள்ளை நிறப் புடவையையும் தலைவிரி கோலத்தையும் பேட்டன் ரைட் கொடுத்து விட்டார்கள். பயத்தை உண்டுபண்ண பாதங்கள் இல்லாமல் இருப்பதாகவும் ஒப்பாரி வைத்து அழுவதாகவும் 
சேர்த்துக் கொண்டார்கள். இப்போது பெண்களும் தலைவிரி கோலத்திற்கு மாறிவிட்டதால் இதுபற்றி பேய்களுக்கு இன்னும அப்டேட் செய்யப்படவில்லை.
கொஞ்சம் மாற்றி யோசித்தேன். பெண்பேய்களை ஏன் இப்படி கண்டார்கள் என்பதே அது. ஒரு வெள்ளைக்காரர் அவரது
நாட்டில் சிறு கிராமத்தில் வசிக்கிறார். அங்கு வேற்றினத்தவர்கள் இல்லவே இல்லை. அவர் எந்த வேற்றினப் பெண்களை நன்றாக புடவை உடுத்தி தலைவாரி பின்னல் முடித்து தலை நிறைய பூவைத்து பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட பெண்ணை
நெற்றியில் விபூதிப்பட்டை நடுவில் சந்தணப்பொட்டு அதன் மேல் அகலமான குங்குமப் பொட்டும் வைத்திருக்கிறாள். காதில் கம்மல் ஜமிக்கி, மூக்கின் இருபுறமும் மூக்குத்தி மற்றும் புல்லாக்கு அணிந்திருக்கிறாள். இது தவிர நெற்றிச்சூடி கைநிறைய வளையல்கள் அணிந்து பட்டுப்புடவை உடுத்து அதன் மேல் ஒட்டியாணம் கழுத்து நிறைய ஆபரணங்கள் என்று காலில் சலங்கை ஜல் ஜல் என்ற சத்தத்துடன் நடந்து போகிறாள்.
அப்படி ஒரு பெண்ணை இரவு பன்னிரெண்டு மணியளவில் அந்த
வெள்ளையர் ஆள் அரவமில்லாமல் தனிமயான சூழலில் அந்த சிறு கிராமத்தில் பார்த்தால் என்ன ஆகும்? அவர் அப்பெண்ணை பார்த்துவிட்டு அப்படியே கடந்து போவாரா? பயந்து நடுங்கி அதே இடத்தில் மயங்கி விழுவாரா? இல்லை அலறியடித்து தலை தெறிக்க ஓடுவாரா?
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
![]()