கட்டுரைகள்

தூரதேச தமிழர் கண்ணீர்!… அருந்தவராஜா.க.

நீங்கள் தமிழராக இருந்தால் பல ஆயிரம் கிலோ மீற்றர் பயணம் செய்து அந்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள சில தீவுகளில் உங்கள் உறவினர்களைக் கண்டு கொள்ளலாம். உங்களைப் போலவே நிறத்தையும் உடல் அமைப்பையும் கொண்டிருப்பார்கள்.

நீங்கள் வழிபடும் தெய்வங்களையே அவர்களும் கோவில் கட்டி வழிபடுவார்கள் . பொங்கல் தீபாவளி தினங்களை அவர்களும் கொண்டாடுவார்கள்.ஆனால் நீங்கள் பேசும் மொழியைமட்டும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. யார் இவர்கள் ?


மேற்கிந்தியத் தீவுகளான Guadeloupe ,mantinique , tobago and trinidad ஆகிய தீவுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் 1850 களில் பிரான்சியர்களால் தமிழகம் பாண்டிச்சேரி துறைமுகத்தில் இருந்து கரும்புத்தோட்ட தொழில்களுக்காக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களாவர்.
1854 ம் ஆண்டில் ஒர்லி (Aurelie) என்ற பாய்மரக் கப்பல் பாண்டிச்சேரியில் இருந்து தமிழ்த் தொழிலாளர்களை குவாதலூப் தீவை நோக்கி கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகிறது.பல நாட்களாக கடற்பயணம் செய்து தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை ( Cape of Good Hope) அடைந்தார்கள்

.அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். இந்தப் பயணத்தில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்கள். சிலர் இறந்தனர். அவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர் .இதனால் தமிழர்கள் மேற்கொண்டு பயணத்தை தொடர விரும்பவில்லை . தம்மை இந்த நாட்டிலேயே வாழ விடும்படி கேட்டுக் கொண்டனர். அது பிரன்சுக்காரர்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் கடற் பயணம். பல நாட் கடற்பயணத்துக்குப் பின் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள சென் கெலீனா (St. Helena ) தீவில் மீண்டும் ஒய்வுக்காக கப்பல் தரித்து நிறுத்தப்படுகிறது .தமிழர்கள் மீண்டும் எங்களை இங்கே விட்டு விடுங்கள் என்று கேட்கின்றனர். இந்தக் கேள்விகள் அவர்கள் கடற்பயணங்களில் பட்ட துயரங்களின் வெளிப்பாடாகும் .சில நாட்களின் பின் மீண்டும் மிகப் பெரிய கடற்பயணம் .பல நாட்களாக மாதங்களைக் கடந்து பயணம் .மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. தூக்கி வீசப்பட்ட உடல்கள் அத்திலாந்திக் சமுத்திரத்தில் அடைக்கலமானது .சுமார் 4 மாதப் பயணத்தின் பின் martinique தீவில் கப்பல் தரித்து நிற்கிறது . கப்பலில் இருந்தவர்களில் ஒரு பகுதியினர் இத்தீவில் இறக்கி விடப்பட்டும் ஏனையவர்கள் quadeloupe தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் (பயணத் தூரம் 10264 கடல் மைல்கள் ) (இவ்வாறு 93 கடற்பயணங்களில் 42326 தொழிளார்கள் இத்தீவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்)
இத்தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிந்த ஆபிரிக்கர்கள் அடிமை ஒழிப்புச் சட்டமூலமாக வெளியேறியதால் அந்த இடங்களில் தமிழர்கள் ஒப்பந்தக்கூலிகளாக பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

தாயக வாழ்வின் வறுமை , உறவுகளின் பிரிவு ,பயணங்களின் துயரம் என்பவற்றைக் கடந்து நீரால் சூழப்பட்ட தூர தேசத்தில் கண்ணீர் வரலாறு மீண்டும் தமிழர்களால் எழுதப்படுகிறது. கரும்பு இனிமை தருகிறது. அதை உற்பத்தி செய்யும் தமிழரின் வாழ்க்கை இனிக்கிறதா என்ன ?
காலம் ,சில காயங்களை எம்முன்னே வைத்து விட்டுப் போகிறது. இவர்களால் தமிழ் கற்க முடியவில்லை. தாயக உறவு துண்டிக்கப்படுகிறது. மறக்கப்படுகிறது.


இன்று இவர்கள் உலகத் தமிழர்களால் மறக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருவது துரதிஷ்டமானது.
தாய் மொழியை மறந்த தமிழர்களாக இவர்கள் வாழ்ந்தாலும் தமிழர்களாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்ப் பெயர்ககளை கொண்டிருக்கின்றார்கள். பல சைவ ஆலயங்களை கட்டி வழிபாடு செய்கிறார்கள். தமிழர் திருநாள்களை கொண்டாடியும் கூத்து , நாட்டியம் போன்ற கலைகளை இன்றும் நிகழ்த்தியும் வருகின்றனர்.

இத்தீவுகளில் வாழும் தமிழர்களை தனி நாயகம் அடிகளார் சென்று பார்த்து அவர் ளது நிலை பற்றி உலகுக்கு அறிவித்தார். உலகத் தமிழர்களின் ஆதரவுக்கரங்கள் படும் போது இத்தீவுத் தமிழர்கள் தாங்கள் இழந்து விட்ட சொந்தங்களை மீண்டும் கிடைத்துவிட்டது போல இன்பமடைவர்.
(இத்தீவுகள் பிரான்சு நாட்டின் கடல் கடந்த நிர்வாக மண்டலங்களாக இருக்கின்றது)

அருந்தவராஜா.க
ஜெனீவா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button