கட்டுரைகள்

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்…..?…. சங்கர சுப்பிரமணியன்.

நான் பள்ளியில் படித்தபோது எனக்கு ஓர் அருமையான தமிழ் ஆசரியர் இருந்தார். அவர் திருக்குறளில்

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற குறளை நன்றாக பொருள் விளங்கும்படி சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்த ஒவ்வொன்றும் பசுமரத்தாணி போல் மனதில்
பதிந்து விட்டதால் இப்போது பசுவதை தடைச் சட்டம் என்றாலும்கூட பாராபட்சம் பார்க்காமல் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

நல்லவரோ கெட்டவரோ நம்(மை) ஆண்டவர் கூட “ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்று சொல்லிப் போய் விட்டார். ஒருவருக்கு இருவர், ஒருவர் மனிதர் மற்றவரோ மாமனிதராக கேள்வி கேட்பது தப்பில்லை என்கின்றனர். அதிலும் வள்ளுவரோ எப்பொருளை எவர் சொல்லியிருந்தாலும் கேள்
என்று உசுப்பேத்தி விடுகிறார்.

கேள்வி கேட்பதால் யாரும் குற்றம் சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் யாரும் எதற்கும் ஆசிரியரிடம்கூட சந்தேகம் கேட்க முடியது. இப்போது என் கேள்வி அதாவது சந்தேகம்
என்னவென்று கேட்கிறேன். நியாயமான கேள்வியென்பதை நீங்களே உணர்வீர்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதுபோல் கேள்வி கேள்வியே.

நன்மை செய்வதும் தீமை செய்வதும் மனித இயல்பு. அதற்கு தக்கபடி இம்மண்ணிலேயே  வினை விதைத்தால் வினை அறுப்பர் தினை விதைத்தால் தினை அறுப்பர். யாழ்ப்பாணத்தில் விதைத்து விட்டு திரிகோணமலையில் அறுக்கமுடியுமா? இருந்தாலும் பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள் அறுக்கலாம் என நம்புவோம்.

என் கேள்வி என்னவென்றால்
புண்ணியம் செய்தால் சொர்க்கம்
என்கிறார்கள். அப்படி புண்ணியம் செய்து மேலுலகம் சென்றதும் அங்கு நம் மத பிரதிநிகள் நம்மை வரவேற்று சொர்க்கத்தில் நம் மதத்தனருக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்வார்களா? அல்லது சொர்க்கத்தில் அப்படி ஒன்றும் பிரிவு கிடையாதா?

சொர்க்கம் என்று இருப்பதை தெரிந்தவர்களுக்கு அங்குள்ள நடைமுறைகளும் தெரிந்திருக்க வேண்டியது நியாயம் அல்லவா?
இப்போது பதில் பிரிவு இருக்கிறதென்றால் அங்கே சென்றபின்னும் பிரிவு அடிதடி என்றால் அது என்ன சொர்க்கம்? பிரிவு இல்லையென்றால் அங்கேயே பிரிவில்லாதபோது இங்கே நாம் ஏன் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவேண்டும்? இங்கேயே எல்லோரும் பேதமின்றி கூடி வாழலாம் அல்லவா?

அடுத்ததாக ஒரு மதத்தில் இருந்து எல்லா பாவங்களயும் செய்துவிட்டு வேறு மதத்துக்கு
மாறிவிட்டால் அந்த மதத்தில் உள்ள புது கணக்குப்படி பாவம் செய்யாதவராகி விடுகிறார். இவருக்கு தண்டனை கிடையாதா? அல்லது பூமியில் இருப்பது போல் இன்டர்போல்
மாதிரி இன்டர்ரிலிஜியஸ் அதிகாரிகள் இருக்கிறார்களா? அவர்கள் மூலம் செய்த பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படுமா? அப்படி இல்லை என்றால் ஒரு மதத்தில் இருந்து கொண்டு ஏகப்பட்ட பாவங்களை செய்துவிட்டு அடுத்த மதத்திற்கு பாதுகாப்பாக மதம் மாறிவிடலாமே?

கடைசியாக ஒரு கேள்வி. ஒரு மதத்தில் இருந்து கொண்டு அந்த மதத்துக்காக அடிதடி, வெட்டு குத்து என்று ஈடுபட்டு இறந்தபின் மறுபிறவியில் அதே மதத்தில் பிறப்போமா? வேறுமதத்தில் பிறந்து விட்டால் இந்த மதத்திற்காக பட்ட பாடெல்லாம் வீண்தானா?

மதப்பற்றாளர்களே!
திருவள்ளுவர் சும்மா இருக்காமல் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
உலகிற்கே மறை தந்தவர் கருத்தை உதாசீனப் படுத்தவும் முடியாது? இந்த கேள்வியை கேட்பதால் நரகம் கிடைக்குமென சபிக்காதீர்கள். ஏற்கனவே சங்கர் படத்தைப் பார்த்துவிட்டு அதில் காண்பிக்கப்பட்ட கொதிக்கிற எண்ணெய் சட்டியை எல்லாம் பார்த்தபின் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button