நாட்டின் வடிவில் நாணயம்!… இளவாலை எஸ்.ஜெகதீசன். ( கனடா )

எந்தவொரு நாட்டிலும் நாணயம் பாவனையில் இருப்பது சர்வ சாதாரணம்.ஆனால் நாணயத்திலும் நாடு இருக்க முடியும் என வியப்பை விழிகளுக்கு கடந்த வருடம் கொண்டு வந்திருந்தது கனடா.
நாட்டின் வடிவமைப்பில் நாணயம் வெளிவந்தது உலகில் இதுவே முதற் தடவையாகும்.
கனடா வடிவில் சேகரிப்பாளருக்குரிய சிறப்பு நாணயம் புகுந்ததும் அடையாளச்சின்னமாக அதன் மாகாணங்கள் அமைந்ததும் புதுமையானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் வரவேற்கப்பட்டது.
மக்கள் பாவனையில் உள்ள வழமையான நாணயங்கள், சேகரிப்பாளருக்குரிய சிறப்பு நாணயங்கள், நினைவுச்சின்னமாக அமையும் விசேட நாணயங்கள் என மூன்று பிரிவுகளாக கனடாவில் மத்திய அரசின் ஆணைப்படி அரச கனடிய நாணயசாலைகளிலிருந்து வெளிவரும் நாணயங்கள் உள்ளன.
சேகரிப்பாளருக்குரிய சிறப்பு நாணயங்கள்; முக மதிப்பை விட சந்தை மதிப்பு அதிகம் கூடியவை. விண்ணப்பித்து மட்டுமே பெற்றுக் கொள்ளக் கூடியவை.சாதாரண பாவனையில் இல்லாதவை. அவற்றைச் சிலர் பொழுது போக்காகச் சேகரித்தாலும் பலர் முதலீடாகவோ அல்லது நீண்ட கால சேமிப்பாகவோ கருதுகின்றார்கள்.
மனிதகுலம் பயன்படுத்தித் தேய்ந்த நாணயங்களை சேமித்து வைத்திருப்பவர்கள் சேகரிப்பாளருக்குரிய சிறப்பு நாணய உலகில் பெறுமதி மிக்கவர்கள் என்ற கருத்தும் உண்டு.
சேகரிப்பாளர்களுக்கான பிரத்தியேகமான சிறப்பு நாணயங்களும் வட்ட வடிவங்களிளேயே வழமையாக வெளிவரும்.1979 ம் ஆண்டு முதல், வருடாவருடம் தூய தங்கத்தில வெளிவரும் மேபிள் இலையை சித்திரிக்கும் நாணயங்கள் இதற்கு நல்ல உதாரணமாகும். 2019 ம் ஆண்டு வெளிவந்த இத்தகைய நாணயத்தின் முக மதிப்பு 50 டாலராகவும், சந்தை மதிப்பு 4220 டாலராகவும் இருந்தது. ஆனால் சேகரிப்பாளர்களுக்கான பிரத்தியேகமான சிறப்பு நாணயங்கள் அவ்வப்போது மாறுபட்ட உருவங்களிலும் வெளிவரும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு கனடாவின் 125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூய தங்கத்தில் வெளிவந்த மேப்பிள் இலை வடிவிலான 20 டாலர் நாணயம். அதன் சந்தை விலை 200 டாலரராக இருந்தது.
கடந்த வருடம் வெளிவந்த இன்னுமொரு பிரசித்தமான நாணயமான (Yin Yang) ‘யின் யாங்’ கூட சேகரிப்பாளருக்குரிய நாணயங்கள் வரிசையையே சாரும். எட்டப் பார்வைக்கு அது வழமையானது போலவும் கிட்டப் பார்வைக்கு அது வேறுபட்டதாகவும் ஜாலம் காட்டியது. பிரபலமான இரண்டு மீன்களைக் கொண்ட இந்த நாணயமானது ஒரு மீனை தூய தங்கத்திலும் மற்றயதை தூய வெள்ளியிலும் உள்ளவாறு, 10 டாலர் முகமதிப்புடனும் 2900 டாலர் சந்தை மதிப்புடனும் வெளிவந்திருந்தது.
கனடா அரசு 2019 ம் ஆண்டு கனடா தினத்தன்று வெளியிட்ட கனடா நாட்டின் வடிவிலான நாணயம் சேகரிப்பாளரின் பெரு விருப்பத்துக்குரியதாக அமைந்தது. புதுமையான வடிவம் உள்ள அந்த 50 டாலர் நாணயம் சேகரிப்பாளருக்கென தூய வெள்ளியில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதோடு, மிக விரைவாகவே 2000 நாணயக்குற்றிகளும் ஒவ்வொன்றும் 339.50 டாலர் வீதம்; விற்பனையாகின.
கனடாவில் பத்து மாகாணங்களும் மாகாணங்களுக்கு அந்தஸ்தில் குறைவான மூன்று பிரதேசங்களும் உள்ளன.
கனடாவின் ஒவ்வொரு மாகாணத்துக்குமுரிய ஒரு விலங்கோ அல்லது ஒரு பறவையோ அந்தந்த மாகாணத்தை அடையாளப்படுத்துவது போல இந்த நாணயம் வடிவமைக்கப்பட்டிருந்தது சிறப்பு!
கனடாவில் உள்ள உயிரினங்களில் மிகவும் பெரியவையான சமவெளி காட்டெருமையும் கெர்மேட் கரடியும் மிகவும் சிறியதான சிக்கடி பறவையும் இந்த நாணயத்தில் உள்ளது இயற்கை அழகு!
1.ஆல்பேட்டா–பெரிய கொம்புகள் கொண்ட ஆடுகள் (big horned sheep)
2.பிரிட்டிஷ் கொலம்பியா–கெர்மோட் கரடி (kermode Bear)
3.மனிடோபா–சமவெளிக் காட்டெருமை(plains bison)
4.நியூ பிரன்ஸ்விக்-பாடும் சிறு பறவை-சிக்கடி (chickadee)
5.நியூ பவுண்ட் லாந்து மற்றும் லாப்ரடோர்-துருவ மான் (woodland caribou )
6.நோவா ஸ்கோஸியா-விரால் அடிப்பான் (osprey)
7.ஒன்ராரியோ–பொதுவான லூனி (common loon)
8.பிரின்ஸ் எட்வேட் தீவு–நீல வாத்து. (blue jay )
9.கியூபெக்-பனி ஆந்தை(snowy owl )
10.சஸ்காட்செவன் -வெள்ளை வால் மான் (white-tailed deer
வட மேற்கு பிரதேசங்கள்-வல்லூறு (gyrfalcon)
நுனாவூட்-கனடிய இன்யூட் நாய்கள். (Canadian Inuit dogs)
யூகோன்-காக்கை(raven )
பொது மக்களின் ஏகோபித்த வேண்டுகோளைத் தொடர்ந்து இவ் வருடம் பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இதன் பெறுமதி முகமதிப்புக்கு ஏற்ப 50 டாலர் ஆகவே இருக்கும்.
அன்றாடம் நாம் புழங்கும் நாணயங்கள் பற்றி என்னென்ன தெரியும் என்றால் வேதனமாகின்றது, பரிவர்த்தனை ஊடகமாகின்றது, சேவை கட்டணமாகின்றது என்றே எல்லோரும் சட்டெனச்சொல்வார்கள். பின்னர்தான் நாணயத்தாள்களின் நிறங்கள் பற்றியோ அவற்றில் உள்ள படங்கள் குறிப்புகள் பற்றியோ 80 வீதமானனோரின் நினைவுகள் நீளும்!
மக்கள் பாவனையில் உள்ள வழமையான கனடிய நாணயங்கள் நிலையான உருவமைப்பைக் கொண்டவை. சாதாரணமாக எங்கும் கிடைப்பவை. கனடா முழுவதும் செல்லுபடியாபவை. $5, $10, $20, $50 மற்றும் $100 என்ற முகமதிப்புடன் ஐந்து நாணயத் தாள்களும் 5¢, 10¢, 25¢, $1 மற்றும் $2 என்ற முகமதிப்புடன் ஐந்து நாணயக் குற்றிகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வடிவமைப்புடன் பாவனையில் உள்ளன.
கனடிய நாணயத் தாள்களில் ஆகப் பெறுமதி குறைந்தது நீல நிறத்தில் உள்ள ஐந்து டாலர் ஆகும். கனடாவின் ஏழாவது பிரதமரான சேர் வில்பிரட் லாரியரின் உருவத்தை ஒரு பக்கத்திலும் நாசாவின் விண்வெளிப் பயணங்களில் 1981 முதல் 2011 வரை பயன்படுத்தப்பட்ட கனடிய வடிவமைப்பான ‘கனடாரம்2 (Canadram 2) என்ற ரோபோவின் கையை மறு பக்கத்திலும் காணலாம்.
ஊதா நிறம் கொண்ட பத்து டாலர் தாளில் கனடாவின் முதலாவது பிரதமர் சேர் ஜோன் மக்டொனால்டின் படம் ஒரு புறத்திலும்; கனடாவின் மிக நீண்ட புகையிரதப்பாதையான ரொரண்டோ யூனியன் முதல் வன்கூவர் பசுபிக் மத்தி வரை சேவையில் உள்ள பயணிகள் தொடருந்தின் படம் மறு புறத்திலும் உண்டு.
பச்சை நிறத்தில் உள்ள இருபது டாலர் நோட்டில் எலிசபெத் மகாராணியின் முகம் ஒரு பக்கத்திலும் முதலாவது உலக மகா யுத்தத்தில் உயிர் நீத்த 3000 கனடிய வீரர்களை நினைவு கூரும் வகையில் பிரான்ஸிலுள்ள விமி றிட்ஜ் நினைவு ஸ்தூபி மறு பக்கத்திலும் காணப்படுகின்றது.
இரண்டாவது உலகப் போரின் போது கனடாவின் பத்தாவது பிரதமராக இருந்த சேர் லியோன் மக்கென்ஸி கிங்கின் உருவம் முன் பக்கத்திலும்; கனடிய கடலோர காவற்படையின் ஆய்வுப்பணிக்கு வடதுருவத்தில் பனிப்பாறைகளை உடைப்பதற்கு பெரிதும் உதவும் அதி நவீன கப்பலான ‘அமுண்ட்செனின்’
படம் (Amundsen) மறு பக்கத்திலும் உள்ள ஐம்பது டாலர் தாள் சிவப்பு நிறத்தில் உள்ளது.
முதலாவது உலக யுத்தத்தின் போது கனடாவில் எட்டாவது பிரதமராக இருந்த சேர் ராபர்ட் போர்டனின் முகம் முன் பக்கத்திலும்இநோபல் பரிசு பெற்ற கனடிய விஞ்ஞானியான சேர் பிரட்றிக் பாண்டிங் இன்சுலின் மாற்று மருந்தை கண்டுபிடித்த ஆய்வு கூடமான கனடிய அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தைக் குறிக்கும் ஒரு வரைவும் மண் நிறத்தில் உள்ள நூறு டாலர் தாளின் பின் பக்கத்திலும் தென் படுகின்றது.
இரண்டு டாலர்கள் அல்லது டூனி நாணயமானது இரு வெவ்வேறு வண்ண உலோகங்களால் ஆனது.அதன் ஒரு பக்கத்தில் துருவக் கரடி காட்சி தருகின்றது. லூனி அல்லது ஒரு டாலர் நாணயம் தங்க நிற நிக்கலால் உருவாக்கப்பட்டது.கனடாவின் தேசியப் பறவையான லூனியின் உருவம் பொறிக்கப் பெற்றுள்ளதால் லூனி எனப் பெயர் பெற்றது. வெள்ளியின் தோற்றமுள்ள 25 சதம் 10 சதம் 5 சதம் நாணயங்கள் முறையே குவாட்டர், டைம், நிக்கல் என்ற மறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன.
குவாட்டர் நாணயத்தில் துருவ மானும்,அளவில் மிகச்சிறியதும் மெலியதுமான டைம் நாணயத்தில் அதிவேக பாய்மர பந்தயக்கப்பலாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வட அத்திலாந்திக்கின் அரசி எனப் போற்றப்பட்ட புளுநோஸம்,நிக்கல் நாணயத்தில் நீர் நாயும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிறப்பான சந்தர்ப்பங்களையோ அல்லது நிகழ்வுகளையோ குறிக்கும் வகையில் நினைவுகளின் சின்னமாக வெளிவரும் விசேட நாணயங்கள் பெரும்பாலும் நிலையான உருவமைப்பில் சிறப்பான வடிவமைப்பு கொண்டனவாக அமைவதுடன் மிகக் குறைந்த அளவிலேயே சேகரிப்பாளருக்கெனத் தயாரிக்கப்பட்டு மிகக் குறுகிய காலம் மட்டுமே வினியோகத்தில் இருக்கும்.
இந்த வகையில் வருடாவருடம் எண்ணுக்கணக்கற்ற விசேட நாணயங்கள் அரசால் வெளியிடப்படுகின்றன.
எலிசபெத் மகா ராணியின் பிரத்தியேக கனேடியக் கொடியுடன் செவ்வக வடிவில் உள்ள 25 டாலர் நாணயம், புகைப்பட கலைஞர் பீட்டர் மக்கின்னனை கௌரவிக்கும் முகமாக அவரது புகைப்படங்களில் ஒன்றான ரொக்கி மலைத் தொடர் உள்ள 20 டாலர் நாணயம், பறக்கும் அபூர்வ பறவைகள் உள்ள 30 டாலர் நாணயம், வனவிலங்குகள் உள்ள 5 டாலர் நாணயம், சோதிடத்தில் நம்பக தன்மை பெறுவதற்காக சிம்ம அடையாளம் உள்ள 5 டாலர் நாணயம் என்பன கடந்த வருடம் (2020) வெளிவந்த விசேட நாணயங்களில் ஒருசிலவாகும்.
பொங்கலையும் தீபாவளியையும் கௌரவிக்கவும் ஏற்கனவே நாணயங்கள் வெளிவந்துள்ளதை அறிந்த எம்மவரால் அவை சற்றே உற்றுக் கவனிக்கப்படுவதும் உண்டு.
ஆனால் சேகரிப்பாளருக்கெனவும் பொது மக்கள் பாவனைக்கெனவும்; பிறிம்பு பிறிம்பாக தயாரிக்கப்படும் விசேட நாணயங்கள் சில விதி விலக்காக நீடித்த பாவனையில் இருப்பதும் வரலாற்றில் உள்ளது.
உலகில் முதன் முதலாக இருளில் ஒளிரும் நாணயம்: இலக்கியப் பயணங்களைச் சிறப்பிக்கவென வெளியிடப்பட்ட நாணயம் என்பன இந்த வரிசையில் அடங்கும.
உலகில் முதன் முதலாக இருளில் ஒளிரும் நாணயத்தை வெளியிட்டது கனடா. பகல் வேளைகளில் சாதாரண நாணயக்குற்றிகளைப் போல் தோற்றமளிக்கும் இவை இரவில் ஒளிரும் சிறப்புத் தன்மை கொண்டவை. 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு டாலர்கள் பெறுமதியான மூன்று மில்லியன் நாணயங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டன.
இலக்கியப் பயணங்களைச் சிறப்பிக்கவென வெளியிடப்பட்ட நாணயத்தாள்களில் ஏதாவது ஒரு வாக்கியம் ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் சேர்க்கப்பட்டிருந்தது கூட உலகின் கவனம் கவர்ந்தது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆலோசனைப்படி 2016 ம் ஆண்டு சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு கனடாவின் இரும்புப் பெண்ணான வயோலா டெஸ்மண்ட் என்ற கனடிய குடியுரிமை ஆர்வலரின் படம் உள்ள 10 டாலர் நாணயத்தாள் செங்குத்தான வடிவில் மக்கள் பாவனைக்கு வந்தது. அத்துடன் 2018 ம் வருடம் உலகின் மிகச்சிறந்த நாணயத்தாள் என்ற விருதையும் தனதாக்கியது.மகாராணியின் படமோ அல்லது பிரதமரின் படமோ இல்லாமல் கனடா கண்ட முதலாவது நாணயத்தாள் இதுவாகும்.
பொது மக்களின் நீடித்த பாவனைக்குச் சான்றாக இந்த நாணயத்தாள் அமைய வயோலா டெஸ்மண்டின் கையொப்பத்துடன் தூய வெள்ளியில் சேகரிப்பாளருகென 20 டாலர் முக மதிப்புடன் வெளிவந்த 8000 நாணயகுற்றிகள் குறுகிய கால பாவனைக்கு சான்றாகின.
சேகரிப்பாளர் நாணயங்களோ அல்லது சிறப்பு நாணயங்களோ சட்டபூர்வமானது எனினும் அவற்றின் முக மதிப்பான பெறுமதிக்கு கூட சாதாரண வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதே சமயம் 1936 ம் ஆண்டு சிறு தவறுடன் வெளிவந்த ஒரு சத நாணயம் மூன்று லட்சத்துக்கும் 1969 ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ பத்து சத நாணயம்; இருபத்தையாயிரம் டாலருக்கும் ஏலத்தில் விலையாகிய சுவாரஸியமும் கனடாவில் உள்ளது.
2001ம் ஆண்டு முதல் இருபது ஐம்பது நூறு டாலர் நாணயத் தாள்களில் புதிதாகப் புகுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் 2011 ம் ஆண்டிலிருந்து ஐந்து பத்து டாலர் நாணயத் தாள்களிலும் வியாபித்தது. ஒளி ஊடுருவல் மூலம் அல்லது ஒளித் தெறிப்பு மூலம் பார்க்கக் கூடிய அடையாளம். கூர்ந்து பார்த்தால் மட்டும் தெரியும் இலக்கம். நிறப்பிரிகை செய்யும் இழைக்கப்பட்ட நூல். ஊதா கதிரில் ஒளிரும் எழுத்துகள். இரு புறமும் வடிவமைக்கப்பட்ட நகல் எடுக்க முடியாத சிறிய நட்சத்திக் கூட்டம் என்பன நாணயத் தாள்களின் நம்பகத்தன்மையை அதிகரித்ததுடன் களவாகத் தயாரிப்பதையும் மட்டுப்படுத்தின.
அத்துடன் தடவிப்பார்த்தால் விரல்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் வலது பக்க மேல் மூலையில் உள்ள உயர்த்தப்பட்ட புள்ளிகள் பார்வையற்றவர்களும் நாணயத் தாள்களின் வேறு பாட்டை உணர்ந்து கொள்ள பெரும் அனுசரனையாக அமைந்தது.
இலகுவில் கிழியாத, இலகுவில் கசங்காத, இலகுவில் நனையாத தன்மை கொண்ட ஒருவித நெகிழியில் (Polymer) நாணயத்தாள்கள் 2011 ம் ஆண்டு முதல் வெளிவர ஆரம்பித்தன.
பாவனையிலிருந்து வந்த ஒரு டாலர் தாள் 1989ம் ஆண்டிலும், இரண்டு டாலர் தாள் 1996 ம் ஆண்டிலும், ஆயிரம் டாலர் தாள் 2000 ம் ஆண்டிலும் செயலிழந்தன. ஒரு டாலர் இரண்டு டாலர் தாள்களை நாணயக் குற்றிகள் பிரதியீடு செய்தன. ஆயிரம் டாலர் தாள்கள் பெரும்பாலும் பாரிய குற்றச் செயல்கள் புரிபவர்களாலேயே கையாளப்படுகின்றது எனக் கண்டறிந்த காவல் துறையினர் அதனை நீக்குமாறு கோரியிருந்தனர்.ஒரு சதம் அல்லது பென்னி நாணயக்குற்றியின் முக மதிப்பை விட அதன் உருவாக்கச் செலவு அதிகம் என்ற காரணத்தால் 2012 ம் ஆண்டு கனடிய அரசு அதன் உற்பத்தியை நிறுத்தியது.
கனடாவில் உள்ள பாங்க் ஒவ் கனடா என அழைக்கப்படும் தேசிய வங்கியே அரச ஆணைப்படி அரச கனடிய நாணயசாலைகளில் நாணயத்தை அச்சிட்டு வழங்கும் உரிமையையும் நாணய மதிப்பைக் கட்டுப்படுத்தும் தகமையையும் கொண்டுள்ளது.
வின்னிபெக்கிலும் ஓட்டவாவிலும்;; உள்ள அரச கனடிய நாணயசாலைகளில் கனடிய நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.2010 முதல்; 2017 வரை காட்சி சாலையொன்றும் வன்கூவரில் செயல்ப்படடிருந்தது.
வின்னிபெக்கில் உள்ள நாணயசாலை மிகவும் பெரியதும் அதிக தொழில் நுட்ப வசதி உடையதும் ஆகும்.கனடாவின் பாவனைக்குரிய அனைத்து நாணயங்களும் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாற்பதுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் தினமும் இருபது மில்லியன் நாணயங்கள்
உருவாக்கும் வசதி உள்ளது.கடந்த 25 வருடங்களில் சுமார் 70 நாடுகளின் நாணயங்கள் இங்கு உருவாகியுள்ளன.
ஒட்டவாவில் உள்ள நாணயசாலையில் சேகரிப்பாளருக்குரிய சிறப்பு நாணயங்களும் சிறப்பான சந்தர்ப்பங்களையோ அல்லது நிகழ்வுகளையோ குறிக்கும் சின்னமாக அமையும் விசேட நாணயங்களும் மட்டுமே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன.கையால் செதுக்கப்படும் தங்கம் வெள்ளி நாணயங்களும் பதக்கங்களும் இங்கு பிரசித்தி பெற்றவை.நாணயங்கள் தயாரிப்பிற்கு உகந்த வார்ப்புகள் பெரிதும் இங்குதான் உருவாக்கப்படுகின்றன.
நாணயங்கள் தயாராகும் முறையை அனுமதி பெற்று பொது மக்களும் அரச கனடிய நாணயசாலைகளில் பார்வையிடலாம்.
2020 ம் ஆண்டு சேகரிப்பாளருக்கென வெளிவந்த நூற்றுக்கணக்கான நாணயகுற்றிகளிலிருந்து ஆறு நாணயகுற்றிகள் வழமையான வடிவமைப்பிலிருந்து மாறுதலுள்ளனவையாக அமைந்தன.தூய வெள்ளியிலான இவை ஒவ்வொன்றும் 50 டாலர் முகமதிப்பையும் 330 டாலர் சந்தை மதிப்பையையும் கொண்டிருந்தன. புளு நோஸ் கப்பலின் வடிவ நாணயம் ஜனவரி மாதத்திலும் நீர் நாயின் வடிவில் மார்ச் மாதத்திலும் அரச சின்னமொன்றின் வடிவில் மே மாதத்திலும் துருவக்கரடி வடிவில் யூன் மாதத்திலும் லூனி வடிவில் செப்டம்பர் மாதத்திலும் துருவமான் வடிவில் நவம்பர் மாதத்திலும் வெளியிடப்பட்டன.
2019 ம் ஆண்டு உலகில் அதிக வலுவான அல்லது அதிக செல்வாக்குள்ள நாணயங்களின் வரிசையில் பத்தாவது இடத்தில் கனடிய டாலர் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.
1.குவைத் டினார் 2.பஹ்ரைன் டினார் 3.ஓமான் ரியால் 4.ஜோர்தான் டினார் 5.பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் 6.கேமன் தீவுகள் டாலர் 7.யூரோப்பியன் யூரோ 8.சுவிஸ் பிராங் 9.அமெரிக்க டாலர் ஆகியவை கனடிய டாலருக்கு முன்பாக 2019 ம் ஆண்டின் மதிப்பீட்டில் அமைந்தன.
கனடாவின் பாரளுமன்ற வரைபடத்துடன் அமெரிக்ககொடி தெரிந்தது, பறவைகள் குறித்து வெளியாகிய தாள்களில் யூனியன் கொடி பறந்தது, கனடாவின் முன்னைய தேசியக்கொடி சில தாள்களில் காணப்பட்டது, நோர்வே மேபிள் இலைகள் கனடா மேபிள் இலைகளாக மாறியுள்ளமை போன்ற தவறுகள் கனடாவில் வெளிவந்த நாணயத்தாள்கள் சிலவற்றில் தெரிந்ததாக தெரிந்தவர் கூறுவர்.
தற்பொழுது புழக்கத்தில் உள்ள 100 டாலர் தாளை முகர்ந்து பார்த்தால் மேபிள் வாசம் வரும் என்றொரு கட்டுக்கதையும் நிலவுகின்றது.
இப்பொழுதும் பாவனையில் இல்லாத $1, $ 2, $25, $ 500 மற்றும் $1000 நாணயத்தாள்கள் 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியுடன் முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டு செல்லுபடியற்றதாகியுள்ளன. யாராவது அவற்றை வைத்திருந்தாலோ அல்லது பகுதி எரிந்த அல்லது நனைந்த அல்லது சிதைந்த இதர நாணயத்தாள்களை வைத்திருந்தாலோ கனடாவில் உள்ள வர்த்தக வங்கிகளில் அவற்றை மீளளித்து நிகரான செல்லுபடியாகும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். அல்லது சகல விபரங்களுடனும் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து பின்வரும் விலாசத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
Bank of Canada, Bank Note Redemption Service, 234 Wellington Street, Ottawa, ON, K1A 0G9
கனடாவில் வெளிவந்த முதலாவது நாணயம் முதல் இறுதியாக வெளிவந்த நாணயம் வரை சகல நாணயங்களையும் ஒட்டவாவில் உள்ள அரச கனடிய நாணயசாலையின் அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம்.
நாணயம் என்றால் நேர்மை என்று பொருள்.கொடுப்பவரும் பெற்றுக் கொள்பவரும் நாணயத்தோடு இருக்க வேண்டும் என்பது தமிழ் அறிஞர் ஒருவரின் பொருள் பொதிந்த கருத்து.
![]()