கதைகள்

கிரகப் போர்!…. 20 … (நாவல்) காசியரின் பேரன்.

அந்த வளையம் போன்றிருந்த விமானத்திற்குள் ஏறிய மூவரும் பெண்கள்.

அவர்களும் ஒரு தட்டுப் போன்ற இடத்தில் நிற்க வளையம் நகர்ந்து மேலே போகின்றது.

அந்த் வளைய விமானம் கண்ணாடி போன்ற ஒன்றால் தயாரிக்கப்பட்டிருந்தது.அதனால் வெளியே நடப்பவற்றைப் பார்க்க முடிந்தது.

வீதிகளில் வாகனம் ஓடுவது போல வானத்தில் பல வளைய விமானங்கள் மிதந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு பருமனில் இருந்தன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் பறந்து கொண்டிருந்தன.

விமானங்களில் எந்த இரைச்சலும் வரவில்லை.மேலே வந்த மூவரும் சாமியையும் சுந்தரியையும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

பூமியிலிருந்து வந்தவர்கள் எந்த உருவத்திலிருப்பார்கள் என்ற நினைப்பில் வந்தவர்களுக்கு, அவர்களிருவரும் தங்களைப் போன்ற உருவ அமைப்பில் இருப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்து, இவர்களுடன் பேசலாமா என அவ்விமானப் பணிப் பெண்களிடம் அனுமதி கேட்க அவர்களும் சம்மதிக்கிறார்கள்.

மூன்று பெண்களும் இருந்து பேசுவதற்கு கதிரைகள் தானாக அவர்களின் பின்புறம் வரவே அவர்கள் உட்கார்ந்தவுடன் அவர்களில் ஒருத்தி கேட்ட முதல் கேள்வியே,’நீங்கள் பலவாயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கிரகங்களுக்கு வந்திருக்கின்றீர்கள், உங்களுக்கு பயமேற்படவவில்லையா, பூமியைவிட்டு வந்ததனால் கவலை ஏற்படவில்லையா’ என்பதே,அதற்கு சாமி ‘மாங்கதிர் கிரகத்திலிருந்து வந்தவர்களைப் பார்த்த போது அவர்கள், பூமியில் உள்ள சக மனிதர்களைப் போலவேயிருந்தார்கள்.

அவர்கள் யாரோ எம்மைத் தெரிந்தவர்களாக இருக்கலாம் என்று நினைத்தோம்.அவர்கள் எமது கைகளத் தொட்டவுடன் எமது உடம்பிலிருந்த பய உணர்வு இல்லாமல் போய்விட்டது.அவர்கள் எம்மை கூட்டிக் கொண்டு போகும் போது எங்கே போகிறோம் என்று நினைக்கவில்லை.

ஏதோ ஒரு சக்தி எம்மை அழைத்துச் செல்வது போல இருந்தது.அவர்களுடன் சென்றோம்.பிறகு மாங்கதிர் கிரகத்தை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது.அங்கிருந்து அங்கனக்கா , நண்டுங்கா, பச்சைக் கிரகம் எல்லாவற்றுக்கும் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

இப்பொழுது இந்த வைரிக் கிரகத்திற்கு வந்துள்ளோம் என்றனர்.மிகவும் ஆர்வமாக சாமி சொன்ன கதைகளைக் கேட்டவர்களில் இன்னொருத்தி, ‘நீங்கள் பூமியிலிருந்த போது, வேற்றுக் கிரகங்களிலும் மனிதர்கள் அல்லது வேறு உயிருள்ளவை இருக்கின்றன என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா எனக் கேட்க,’பலருக்கு அந்த நம்பிக்கையிருந்தது,’அமெரிக்கா என்ற நாடு நாசா என்ற விண்வெளி ஆய்வில் வேற்றுக் கிரகங்களிலிருந்து மனிதர்கள் வந்து போகின்றனர் என்று சொல்லியுள்ளதை செய்திகள் மூலம் வாசித்திருக்கிறோம் என்றனர்

இதுவரையில் சாமியும் சுந்தரியும் சென்றுவந்த கிரகங்களில் உள்ளவர்கள் அந்தந்த கிரகங்களில் பொறுப்பு வாய்ந்த ஆண் அதிகாரிகளாகவும் பெண் அதிகாரிகளாகவும் இருந்தார்கள்.அந்தந்த கிரகங்களில் வாழும் சாதாரண மனிதர்களுடன் தொடர்பில்லாமலே இருந்தார்கள்.

ஆனால் வைரிக் கிரகத்திலிருக்கும் சாதாரண பெண்கள் தம்முடன் யதார்த்தமாகப் பேசிக் கொண்டிருப்பது சாமிக்கும் சுந்தரிக்கும் ஆச்சரியமாகவிருந்தது.

அவ்வளைய விமானத்தில் வேலை செய்த பணிப்பெண்கள் அந்த மூன்று பெண்களுக்கும் உணவு கொடுத்தார்கள் பானமும் கொடுத்தார்கள்.சாப்பிட்டுக் கொண்டும் குடித்துக் கொண்டும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய உடைகள் அழகாக இருந்தன.தங்களுடைய உடையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியைப் பார்த்து’ நாங்கள் உடுத்தியிருக்கும் உடை எதிலிருந்து செய்தது என்று அறிய ஆசையா’ என்றவர்கள்.அங்கே பாருங்கள் நீல நிறத்தில் சில மரங்களிருக்கின்றனவே, அந்த மரத்தில் பூக்கும் பூக்களின் இதழ்கள் வாடி விழுந்தவுடன் அவற்றினை எடுத்து பதப்படுத்தி நூலாக்கி உடைகள் செய்வார்கள்.அதிலிருந்து செய்த உடைகளையே நாங்கள் உடுத்தியிருக்கிறோம்.இந்த வர்ணத்துக்குப் பெயர் உங்கள் மொழியில் சிவப்பு என்பார்கள்.இங்கும் எங்கள் மொழியில் சிவப்பு என்றுதான் சொல்வோம் என்றார்கள்.

‘சிவப்பா’ என்று ஆச்சரியத்துடன் சாமி கேட்க, தமிழ்மொழியில் மிகப் பரிச்சயமானவர்கள் போல மூவரும் சிரிப்புடன் சிவப்புத்தான் என்றனர்.

அவர்கள் தமிழில் பேசத் தொடங்கியதும், மூன்று பணிப் பெண்களும் தமிழில் பேசத் தொடங்கினர்.

அப்பொழுது ‘நீங்கள் போய்வந்த கிரகங்களுக்கு நாங்கள் மூவரும் அடிக்கடி போய் வருவோம்.எல்லாக் கிரகங்களில் உள்ளவர்கள் அனைத்து மொழிகளையும் பேசக்கூடியவர்கள்.எமது மூளைகள் அதி நவீனமானவை.உங்களாலும் எல்லா மொழிகளையும் பேச முடியும்.நாங்கள் தமிழல் பேச முன்பு நீங்கள் பேசிய மொழி வைரி மொழி.நீங்கள் பேசும் போது உங்களுக்கு அந்நிய மொழியைப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றவே தோன்றாது.அந்த மொழிதான் உங்களுடைய சொந்த மொழி என்று தோன்றும் என்றனர்.

எங்கேயோ போகவிருந்த மூன்று பெண்களும், தங்களைப் பார்க்க ஆசைப்பட்டு தங்களைக் கூட்டிச் செல்லும் விமானத்திற்குள் வந்து பல விடயங்களைப் பேசுவது சாமிக்கும் சுந்தரிக்கும் ஆச்சரியமாகவிருந்தது.

அப்பொழுது ஒரு செய்தி அவர்களிருந்த அறைக்குள் ஒலிபரப்பானது.சாமியையும் சுந்தரியையும் அவர்கள் தங்குமிடத்துக்கு அந்தப் பெண்களையே அழைத்துச் செல்லும்படி கூறப்பட்டது.

அதைக் கேட்டதும் மூன்று பெண்களுக்கும் பெரிய மகிழ்ச்சி.வளைய விமானம் மெதுவாக முட்டை வடிவிலான வீட்டின் மேல் இறங்கியது.

சாமியும் சுந்தரியும் அந்த மூன்று பெண்களும் அந்த அறையிலிருந்து புறப்பட்டு தட்டுப் போன்ற இடத்தில் நின்றார்கள்.

கீழ்நோக்கி வளையம் நகர்ந்து போயக் கொண்டிருகு;க முட்டை வடிவிலான வீட்டின் கூரை திறக்க தட்டு கூரை மேல் நிற்க அங்கிருந்து அவர்கள் ஐவரையும் இன்னொரு படி கீழிறக்கியது .

அவர்களை இறக்கிய வளைய விமானம் புறப்பட்டுச் சென்றது.முட்டை வடிவ மேல்கூரைப் பகுதியிலிருந்து அவர்கள் கீழ்நோக்கி வர விளக்கு வெளிச்சங்களும் கரவொலியும் கேட்டன.

பெரும் கூடம் போன்றிருந்த ஒரு இடத்தில் நிறையப் பேர் நின்றிருந்தனர்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *