கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கெட்டவர்களா?… சங்கர சுப்பிரமணியன்.

உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரையும் நல்லவர்கள் என்று சொல்லவும்முடியாது கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்றும் சொல்லிவிடமுடியாது. கடவுளை நம்புபவர் அனைவரும் நல்லவர் எனவும் நம்பாதவரை பெரும்பாலும் கெட்டவர் எனவும் உலகம் நினைக்கிறது.
கடவுளை நம்பாதவர்களுக்கு
காமராஜர் மற்றும் நேருபோன்ற நல்லவர்களும் கடவுளை நம்புபவர்களுக்கு பிரேமானந்தா, நித்தியானந்தா போன்றோரும் சிறந்த எடுத்துக்காட்டு.
இதுவும் கிட்டத்தட்ட அரசியல் போன்றதே. எத்தனையோ தத்துவங்களை அடிப்படையாகக்
கொண்ட அரசியல் இருப்பதைப்போல் எத்தனையை நம்பிக்கைகளைக் கொண்ட மதங்களும் இருக்கின்றன.
எத்தனையோ தத்துவங்களைக் கொண்ட அரசியல் இருந்தாலும் சில அரசியல் தத்துவங்களே முக்கியமாக இருப்பதைப்போல் எத்தனையோ மதங்கள் இருத்தாலும் சில மதங்களே முக்கியமாக உள்ளன.
முதலாளித்துவ கொள்கைகளைக் கொண்ட கட்சி ஒருபுறமென்றால் பொதுவுடமைக் கொள்கைகளைக் கொண்ட கட்சி மற்றொருபுறம். இரு கட்சிகளிலும் நிறைகளும் உண்டு குறைகளும் உண்டு. இந்த குறை நிறைகளை
எடுத்து மக்களுக்கு சொல்பவர்கள் அரசியல் விமர்சகர்கள்.
இப்படிப்பட்ட அரசியல் விமர்சகர்களை தப்பாக பார்ப்பவர்களும் உண்டு. பொதுவாக பார்ப்பவர்களும் உண்டு. பெரும்பாலும் அரசியல் விமர்சகர்கள் பொதுவாகத்தான்
பார்க்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மதங்களில் உள்ள குறை நிறைகளை சொல்பவர்கள்தான் மதவிமர்சகர்கள். இதில் மதங்களில் அதிகமான குறைகளைக் காண்பவர்களை
கடவுள்
நம்பிக்கையற்றவர்களாக்கி
விடுகிறார்கள்.
சில புத்திசாலிகள் இப்படி மத விமர்சனம் செய்பவர்களைப் பார்த்து இந்த மதத்தைப் பார்த்துத்தானே விமர்சனம் செய்கிறார்கள் இவர்களால் அந்த மதத்தைப்பற்றி விமர்சிக்க முடியுமா என்று கேட்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கட்டாயம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
எந்த மதத்தின் பின்புலத்தை கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த மதத்தின் குறை நிறை நன்றாகத்தெரியும். அப்படிப் பட்டவர்களால்தான் அந்த மதத்திப்பற்றி விமர்சிக்க முடியும். இங்கு ஒரு கருத்தை நான் முன் வைத்தே ஆகவேண்டும்.
நம் பக்கத்து வீட்டு நிகழ்ச்சிகளில் அவர்கள் அழைத்தால் கலந்து கொள்ளலாம். அதேசமயம் அவர்கள் வீட்டில் ஏதோ சண்டை
சச்சரவு என்றால் அங்கே மூக்கை நுழைக்கக் கூடாது. மேலும் ஒருவருக்கு அவரின் பின்புலம் சார்ந்த மதத்தின் குறைகளைக் கூறும் உரிமையுள்ளது. இதைக்கூறக் கூடாது என்று கூற எந்த மதத்திலும் எவருக்கும் எவராலும் உரிமை வழங்கப்படவில்லை என்பது அடிப்படை அறிவு.
இனி பொதுமக்களே கடவுள்
நம்பிக்கையற்றவர்களோ அல்லது மதத்தை விமர்சிப்பவர்களோ யாரென்பதை
புரிந்து கொள்வார்கள். சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களாக எதுவுமே தப்பில்லாத மாதிரியும் நாம் தப்பாக சொல்வதுபோலவும்
சித்தரிப்பார்கள்.
அவர்களை மட்டுமே மதக்காவலர்கள் போல் எண்ணுவதோடல்லாமல் அதிலுள்ள குறைகளச் சொன்னால் அதிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.குற்றம் சொல்பவர்களின் பெயரைக்கெடுத்து தன்னை உயர்த்திக் கொள்ள முயல்வார்கள். மக்கள்
சிந்திக்கவே மாட்டார்கள் என்று இவர்கள் நினைத்து விட்டார்களா என்ன?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()