இறந்தவர்களை அடக்கம் செய்யும் சிறைக்கைதிகள்!… சங்கர சுப்பிரமணியன்.

வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ என்பதை இன்றைய சூழல் உறுதி செய்யும்வகையில்
உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் அதிகமாக இறப்பவர்கள் நியூயார்க் மாகாணத்தில்தான். இங்கு இறப்பவர்கள் ஆயிரக்கணக்கில்
இருப்பதால் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் கைவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகள் என்று எதுவும் இல்லாமல் எளியமுறையில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.
இப்படி அடக்கம் செய்யப்படும் உடலுக்கு ஆறடி நிலமும் கூட சொந்தம் இல்லை. அவர்கள் குடும்பத்தினர் விரும்பும் இடத்திலும் அடக்கம் செய்யப்படுவதில்லை. ஹார்ட் எனும் தீவில்தான் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்கிறார்கள். இந்தத்தீவுக்கு படகில்தான் செல்லமுடியும். இந்த தீவுக்கு இறந்தவர்களின் பிரேதங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கு சிறைக்கைதிகள் பயன்படுத்தப் படுகிறார்கள்.
இந்த தீவில் ஆதரவற்றோர்கள் ஏழை எளியோர்களை அடக்கம் செய்வது கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக நியூயார்க்கில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இன்று ஏழை, பணக்காரன், அனாதை, சாதி, மதம், இனம் என்ற பாகுபாடின்றி எல்லோரும் ஒரே இடத்தில் புதைக்கப்படுகிறார்கள்.
ஹார்ட் தீவில் பெரிய குழிகளாக
பத்து அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டு அதில் நூற்றுக் கணக்கான சவப்பெட்டிகளை இறக்கி அடுக்கடுக்காக வைக்கின்றனர். இந்த குழிகளில் இறங்க ஏணிகளை உபயோகப் படுத்துகின்றனர். இந்த குழிகளில் வரிசையாக சவப்பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டு பின் மூடப்படுகிறது.
கொரோனாவால் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி சாதி மத இன பேதம் கடந்து நூற்றுக் கணக்கில் ஒரே இடத்தில் எந்த வித ஆடம்பரமோ ஆரவாரமோ சடங்கு சம்பிரதாயமோ இன்றி பிரேதங்கள் புதைக்கப்படுகின்றன. உலக அளவில் முன்னேறிய நாடாயிருந்தாலும் இந்த கரோனாவின் சீற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()