கட்டுரைகள்

தீமையிலும் நன்மை!… சங்கர சுப்பிரமணியன்.

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி என்ற பழைய பாடலான ஆறுமனமே ஆறு பாடலின் வரி எனக்கு கொரோனோவின் தாண்டவத்தை நினைவுறுத்தியது.

இன்பமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது துன்பம் ஒன்று நிகழ்வதும் துன்பத்தில் நாம் துவண்டிருக்கும்போது இன்பமான நிகழ்வொன்று வருவதும் இயற்கைதான். அப்படித்தான் இன்பமாக சென்று கொண்டிருந்த உலகமக்கள் வாழ்வில் இன்று துன்பம் சூழ்ந்துள்ளது.

இந்த இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு காலகட்டங்களில் வந்துபோகும். உலகமக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இன்பம் நிகழுமா? சிந்தித்துப் பார்த்தால் நிகழாதென்றும் தெரிகிறது நிகழுமென்றும் தெரிகிறது. இப்படி இரண்டு பதிலையும் சொன்னால் எப்படி என்று நீங்கள் நினைப்பது சரியே. இப்போது அந்த இரண்டு பதில்களுக்குண்டான காரணங்களைப் பார்ப்போம்.

முதலில் உலகில் உள்ள அனைவருக்கும் இன்பம் ஒரே நேரத்தில்  நிகழாது என்பதற்குண்டான காரணத்தை பார்ப்போம். உலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், ஒரே பண்பாடு என்றிருந்தாலன்றி அனைவரும் ஒரே நேரத்தில் இன்பமாயிருக்க வழியில்லை. ஏனெனில் மதம், மொழி, இனம், பண்பாடு என்று எல்லாம் வேறுபட்டிருக்கும் போது அதைச்சார்ந்த விழாக்கள், பண்டிகைகள் நடக்கும்போது அவரவர்க்கு மட்டுமே இன்பமூட்டுவதாக இருக்கமேயன்றி அனைவருக்கும் இராது.

உதாரணத்துக்கு சீன ஆண்டுப் பிறப்புக்கும் மற்றவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது. சிலர் ஆங்கிலப் புத்தாண்டை உலகம் முழுக்க கொண்டாடுகிறார்களே  என்று கேட்கலாம். நான் சிறுவனாக இருந்தபோது இந்து ஆலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடி அன்னதானம் செய்து பார்த்ததில்லை. அதேபோல் தமிழ்ப்புத்தாண்டை ஆஸ்திரேலியாவிலோ அல்ல நியூசிலாந்திலோ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தேவாலயங்களில் வெள்ளையர்கள் கொண்டாடியிருப்பார்களா? தெரியவில்லை.

ஆனால் இன்பம் எல்லோருக்கும் உண்டாகும் என்றால் அது இதுபோன்ற சமயத்தில்தான். அதாவது கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை முழுமையாக கண்டுபிடித்து அதன்மூலம்
உலகிலுள்ள அனைத்து மக்களையும் குணப்படுத்த முடியும் என்ற நிலை வரும்போது அது இனம், மதம், மொழி மற்றும் பண்பாட்டைக் கடந்து அனைவருக்கும் இன்பமளிக்கும்.

இவற்றையெல்லாம் தாண்டி இன்று உலகமக்கள் அனைவருக்கும் இன்பமளிக்கக் கூடிய சில நன்மைகளும் நடந்திருக்கிறது. முதன்முதலாக உலகிலுள்ள தொழிலகங்கள் இயங்காததால் பூமியைச்சுற்றிய வான்வெளி நச்சுப்புகையின்றி மாசற்றிருக்கிறது. அடுத்ததாக வாகன ஓட்டமின்றி இருப்பதால் உலகிலுள்ள எல்லா நகரங்களும் புகையின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளன. உதாரணத்துக்கு பனிமூட்டம் போல் எப்போதும் காணப்படும் புதிடில்லியில் கூட அந்நிலை இன்றில்லை.

இது இன்றையநிலை. எதிர்காலத்தில் இனி நிலநடுக்கமோ சுனாமியா கூட வராது போகலாம். கரோனாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் மனம் சொல்வது எனக்கு கேட்கிறது. நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட காரணம் பூமியின் அடியிலுள்ள அடுக்குகள் போன்ற மண்தகடுகள் விலகும் போது மண்ணில் நிலநடுக்கமும் அதே தகடுகள் கடலின் அடியில் நகரும்போது சுனாமியும் வருவதாக சொல்லப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க பூமிக்கு அடியிலும் கடலிலும் அணுக்களை வெடிக்கச்செய்து சோதனை செய்வதாலும்
நிலநடுக்கமும் சுனாமியும் வருவதாகவும் செய்திகள் வலம்வருகின்றன. இந்த அணுக்களை வெடிக்கச் செய்து சோதனை நடத்துவதெல்லாம் அணு ஆயுத தயாரிப்புக்குத்தான். இனி எதிரியை அழிக்க அணு ஆயுதம் தேவையில்லை என பலநாடுகள் கொரோனா போன்ற நோய்க்கிருமிகள் உற்பத்தியில் ஈடுபட்டு கிருமி ஆயுதங்களை தயாரிக்கலாம்.

அப்படி ஒருவேளை கிருமி ஆயுதங்களை பயன்படுத்தும் பட்சத்தில் வான்படை, கடற்படை, தரைப்படை போன்றவற்றிற்கு செலவிடப்படும் தொகை மிகமிகக் குறையலாம். ஒவ்வொரு நாட்டின் இராணுவக்கூடமும் உயிரைக்கொல்லும் கிரிமிக்கூடமாக மாறலாம்.

இந்த கொரோனாவால் மனிதன் துன்பமடைந்தலும் இறைவன் பக்தர்களின் அன்புத் தொல்லைகளில் இருந்து தற்காலிகமாக விடுதலை அடைந்துள்ளான். மக்களைப் படைத்தவன் அவர்கள் உயிர் வாழக்கொடுத்த பால், தேன், தயிர், இளநீர் என்று இன்ன பலவற்றையும் அவர் அமைதியாய் இருக்கிறார் என்று அவர் தலையில் ஊற்றி அவரை படாதபாடு படுத்திய செயல்களில் இருந்து விடுதலை அடைந்துள்ளார். இப்போது அவரும் குளித்து எளிய உணவுகளை உண்டு ஆரவாரமின்றி அமைதியான சூழ்நிலையில் ஏகாந்தமாய் இருக்கிறார். மக்கள்
வரவில்லை என்று அவரோ அவரை பாக்கவில்லை என்று மக்களளோ கவலைப் படுவதாகத் தெரியவில்லை. மக்கள் பக்தி
எல்லாம் இப்போது டாய்லட் பேப்பர் மீதுதான்.

உலக அளவில் கொரோனா சில மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதையும் மறைப்பதற்கில்லை. கீரியும் பாம்பும் போல் எதிர் துருவங்களாக நின்று செயல்பட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்று இணைந்த கரங்களாக மாறி வருகின்றன. கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டிருந்த கியூபா இன்ன செய்தாரை ஒறுத்தல் என்பதுபோல் தன்னால் முடிந்த உதவிகளாக பிற நாடுகளுக்கு மருத்துவர்களையும் மருந்துப் பொருட்களையும் அனுப்பி மனிதமே சிறந்ததெனும் மாண்பை சொல்லித்தருகிறது.

இவ்வாறாக துன்பத்தில் இன்பமும் இனிய மாற்றங்களும் நடந்து வரும்வேளையில் கொரோனாவுக்கு அதிவிரைவில் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற இனிய நினைவுடன் இருப்போம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button