தம்மைப் போற்றும் மனிதர்கள்!…. சங்கர சுப்பிரமணியன்.

மனிதர்களில் பலவகை. சிலர் எப்போதும் மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். வேறுசிலர் தம்மைப்பற்றியே எப்போதும் பெருமை பேசிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்களை குறை கூறுபவர்கள்,
ஒன்று மற்றவர்களின் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள். அல்லது தம்மால் மற்றவர்களைப்போல் முன்னேற முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
அடுத்ததாக தம்மைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள். இவர்மிகள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள்.
காரணம் அவர்களைப்பற்றி யாரும் பெருமையாகப் பேசாதபோது மற்றவர்களை பாராட்டுகையில் அதைக்
கேட்கும்போது நம்மை யாரும் இதுபோல் பாராட்டவில்லையே என்று எண்ண ஆரம்பிக்கிறார்கள். யாரும் பாராட்டாதபோது தம்மையே தாம் பாராட்டிக் கொள்கிறார்கள்.
இப்படித் தன்னை பராட்டிக் கொள்பவர்கள் ஒரு உண்மையை உணரவேண்டும். யாரும் யாரையும் இந்த காலத்தில் அவ்வளவு எளிதில் பாராட்டிவிட மாட்டார்கள். அப்படிப்பட்ட இக்காலத்தில் ஒருவர் பாராட்டப் படுகிறார் என்றால் அப்படிப் பாராட்டப் படுவதற்கு அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்? உழைப்பின்றி எதுவும் கிடைத்துவிடாது. அது பணம் என்றாலும் சரி, அல்லது பட்டம், பதவி, பாராட்டு என்றாலும் சரி.
இதை எல்லாம் சிறிதும் யோசித்துப் பார்க்காமல் தான் ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடாமல் பாராட்டு மட்டும் வேண்டுமென்று எண்ணுபவர்களே பொதுவாக தம்மைத்தாமே பாராட்டிக்கொள்கிறார்கள். இதை ஒருவகையான மனநோய் என்றே சொல்லலாம். இவர்களால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் செய்யும் காரியம் இவர்களையே தனிமைப் படுத்திவிடும். இவர்களைப் பார்த்தவுடனே மற்றவர்கள் இவர்களது தம்பட்டத்தை சகிக்கமுடியமல் விலகிவிடுவார்கள். ஆதலால் இவர்கள் மேல் பரிதாபம் கொண்டு இவர்களை சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் மற்றவர்களைக் குறைகூறுபவர்களை மட்டும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் குறைவாக ஒருவரைப்பற்றி சொல்பவர்கள் நாளடைவில் அவர்களது பெயரே கெடும்படி குறைசொல்லவும் தயங்கமாட்டார்கள். இன்று மற்றவர்களை பற்றி நம்மிடம் சொல்பவர்கள் நாளை நம்மைப் பற்றியும் மற்றவர்களிடம் திரித்துச் சொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆதலால் இப்படிப் பட்டவர்களிடம்தான் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.
இப்படி மற்றவர்களைப்பற்றி குறைகூறுபவர்களைத் தவிர்த்தல் வேண்டும். ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு
மற்றவர்களைப்பற்றி குறைகூறுவதைக் கேட்பதென்பது சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதுமாதிரி. இப்படி மற்றவர்களைப் பற்றிய குறைகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டி உற்சாகப் படுத்துபவர்கள் அவர்கள் மூலமாகவே தன் பெயர் கெட விலை கொடுக்க வேண்டியதிருக்கும். இதற்கெல்லாம் சரியான தீர்வு யாரைப்பற்றியும் குறைகூறாமலும் மற்றவர்களைப்பற்றி குறைகூறுபவர்களை ஊக்கப்படுத்தாமலும்
இருப்பதே நன்று.![]()
-சங்கர சுப்பிரமணியன்.
![]()