நீயா நானா அழிவும் இயற்கை அழிவும்!… ஏலையா க.முருகதாசன்.

இன்று உலகத்தில் இரண்டு புகை மேகங்கள் சூழ்ந்துள்ளன.ஒன்று அவுஸ்திரேலியாவில் கண்டுக்கடங்காமல் காடுகள் எரிந்து கொண்டிருப்பதும், இரண்டாவது ஈரான் அமெரிக்காவின் யுத்த முன்னெடுப்பால் மத்தியகிழக்கில் ஈராக்கில் யுத்த அழிவுப் புகை எழுந்திருப்பதுமாகும்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது இயற்கை அழிவு.அதிக வெப்பத்தினால் புதர்கள் கருகி தானாகவே தீப்பற்றிக் கொண்டதனால், பூமியின் வெப்பக் காற்று துணைபோக பச்சைமரக்காடுகள் தீம்பிழம்பாகி இயற்கை அழிவாக இடம்பெற்று வருகின்றது.
இக்காடுகளில் தமது வாழ்வைக் கொண்டிருக்கும் பல்Nறுபட்ட கிட்டத்தட்ட 53 மில்லியன் (மிருகங்கள்,பறவைகள்,ஊர்வனவகைகள்,பூச்சி வகைகள்) உயிரினங்கள்,அத்துடன் பெறுமதிமிக்க மரங்கள் என அழிந்துள்ளன.
காடுகள் தீப்பிடித்து எரியும் புகை தென்னாபிரிக்கா வரை செல்வதாக செய்திகள் சொல்கின்றன.கடல்கடந்து இப்புகை செல்வதை கற்பனை கொண்டு பார்க்கையில் தீயின் கோரத்தாண்டவம் புரிகின்றது.
எரிமலை வெடித்துச் சிதறும் பொழுது ஏற்படும் வெப்பத்திற்கு சமனாக இவ்வெப்பம் இருக்கிறது என ஒப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காடுகளின் மேல் மழை பெய்யாதா பனி கொட்டாதா என உலகமக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது இயற்கையின் கோரதாண்டவம்.இயற்கையுடன் போட்டி போடவும் முடியாது.
காடுகள் இருந்தாலே அங்கு மழை பெய்வதற்கான சாத்தியம் உண்டு.காடுகள் பெருமளவு இல்லா நாடுகள் தரிசு நிலங்களாக கிடக்கும் நிலத்தில் மரங்களை நட்டு வருவதற்குக் காரணம் பிராணவாயுவிற்காகவும் மழைக்காகவுமே.வணிகத் தொழில் உற்பத்திப் போட்டிகளினால் அதிலிருந்து வரும் வேதியல்பொருட்கள் கலந்த புகையினால் முற்றுமுழுதாக சூரியவெப்பக்கதிரைத் தடுக்கும் சுவராக இருந்த ஓசோன் மண்டலம் சிதைந்ததே பூமி வெப்பமடைவதற்கு காரணம்.இந்த சிதைவை ஏற்படுத்தியதும் மனிதகுலமே.
ஆனால் எத்தனையோ இயற்கை அழிவுகளை தொடர்ந்து கண்டும் கேட்டும்,அவரவர் நாடுகளில் அவ்வழிவுகளால் பல உயிர்களையும் பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த நாடுகள் அதனை உணராது அதிகாரப் போட்டிகளிலும், மதவாதப் போட்டிகளிலும், உலகத்தலைமைத்துவப் போட்டிகளிலும் ஆணவத்துடன் ஈடுபட்டு வந்தன,தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.
அதற்குச் சமகால சாட்சியாக இருப்பது அமெரிக்க – ஈரான் போர் முன்னெடுப்புக்கள்.மூன்றாவது உலகப்
போர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மனிதகுலம் தவித்துக் கொண்டிருக்கின்றது.ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலிருந்த அணுஉற்பத்தி நிலவரம் படிப்படியாக தீவிரமடைந்து இராணுவத்தளபதி சொலமானியை ஈராக்கில் வைத்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நீயா நானாக என்ற தீவிரமான போருக்கு வித்திட்டு நிற்கின்றுது.
அமெரிக்கா உலகநாடுகளின் எஜமானாக இருக்க வேண்டுமென்பதற்காக உலகநாடுகள் ஏற்றக் கொள்ளக்கூடியதாகக் காட்டும் அணுவாயுத ஒப்பந்தங்கள், இன்னும் போர்த்தளபாட உற்பத்திகள் போன்றவற்றை உலகநாடுகள் தயாரிப்பதை மட்டுப்பாடுத்த வேண்டும் என்பது போன்ற ஒப்பந்தங்களை வல்லரசு நாடுகளின் ஏகோபித்த ஆமோதிப்புடனும் ஆதுரவுடனும் செய்து கொள்வது சமாதான விரும்பியாக தன்னைக் காட்டிக் கொண்டு தானே உலக நாடுகளை வழிநடத்தும் வல்லான் என்பதைக் காட்டிக் கொள்வதற்கே.
அது போன்று மத்தியகிழக்கு அரபுநாடுகள் எண்ணை வளங்களைக் காட்டி தமது கையியேலேதான் உலகம் இருக்கின்றது என்ற மிரட்டலை வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் செய்து வருகின்றன.எண்ணை வளமே உலக நாடுகளின் பொருளாதாரத்தின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் தீர்மானிக்கின்றன.
வணிகம் என்பதும் பாவனைப்பொருள்சார் அன்றாட வாழ்க்கை என்பது தவிர்க்க முடியாததும் இன்றியமையாததுமாகும்.
சனநாயகம், அமைதி, சமாதானம் என்ற போர்வைக்குள் முட்டிக் கொள்ளும் அரபுநாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து நிற்கும் நாடுகளுக்கிடையில் இருப்பது மதப்போரே.
இயற்கை அழிவைத்தடுக்க இயலாது.ஆனால் போர்வெறி கொண்டிருக்கும் ஆணவம் பிடித்த நாடுகள் பூமியை செவ்வாக்கிரக நிலைமைக்கு கொண்டு வருவது நிச்சயம்.
ஏலையா க.முருகதாசன்.
![]()