கவிதைகள்
ஏதும் கதைக்காது என்னைப் பார்த்தனர்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

நாகரிகமடைந்த விலங்கென்றேன்
ஏன் அப்படிச் சொல்கிறாய் என்றனர்
நாகரிகம் அடைந்த பின்னரே
நயவஞ்சகம் கற்றனர் என்றேன்
நீயும் ஒரு மனிதன்தானே என்றனர்
ஆம் அதில் சந்தேகமென்ன என்றேன்
அப்படியிருந்தும் இப்படிச் சொல்லலாமா
என்று சொல்லி என்னை இகழ்ந்தனர்
இகழாமல் இயல்பை உணர்வீர் என்றேன்
என்ன அது என்றே கேட்டனர்
ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது
ஒரு கருமயான மறுபுறமென்றேன்
ஏற்காது சற்றே தயங்கிப் பார்த்தனர்
காரணம் கேட்டு கடுமையாய் நோக்கினர்
சந்தர்ப்பம் ஒன்று கிடைக்காதவரை
அனைவரும் மிக நல்லவர்களே என்றேன்
ஏன் அப்படிச் சொல்கிறாய் என்றே
திரும்பவும் திகைத்தே கேட்டனர்
சந்தர்ப்பம் கிடைத்த பின்னரும்
கருமையைக் காட்டாது போனால்
அப்போது நான் தப்பாக சொல்லேன்
என்று நான் எடுத்தியம்பக் கேட்டதும்
இதுவரை கதைத்தவரெலாம் ஏனோ
ஏதும் கதைக்காது என்னைப் பார்த்தனர்!

![]()