இலங்கை

மட்டக்களப்பு மற்றும் வடக்கு – கிழக்கு காணிகள் விடுவிப்பு; இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ முகாம்கள் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் திருப்தியடையும் அளவுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பலாலி, வசாவிளான், மயிலிட்டி, கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக வீதியில் போராடுகின்றனர். அந்த காணிகளை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக்கட்சி உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையின் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 14 வீதமானது பாதுகாப்பு அமைச்சுக்கும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குமே ஒதுக்கப்படுகின்றது. இலங்கையில் உள்ள பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த 10 வருட காலப்பகுதியில் பெரும் கருத்தாடல்கள் நடந்துள்ளன. இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இணங்கிய விடயங்கள் உள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று 2025, 2026 வருடங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் கூறுவதற்காக அன்றி நாட்டின் பொருளாதார பக்கத்தில் இருந்து பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று கோருகின்றேன்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் .அதற்கு இந்தளவான பாதுகாப்பு பிரிவு வேண்டும் என்று முன்வைக்கும் தர்க்கங்களை ஏற்றுக்கொள்வது கடினம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையை விட நிலப்பரப்பில் ஐந்து மடங்கு பெரிய பிலிப்பைன்ஸில் 117 மில்லியன் சனத்தொகை உள்ள நிலையில் முப்படையிலும் 193,000 பேரே உள்ளனர். தாய்வான் இலங்கையின் அளவில் உள்ள நாடு . அங்கு 182,000 படையினரே உள்ளனர். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளையும் இவ்வாறு உதாரணத்திற்கு குறிப்பிடலாம்.

இராணுவத்தினரை விடவும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதே முக்கியம். இன்று உலகில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான நேரத்தில் அதற்கு முன்னுரிமை கொடுக்காமல் நாங்கள் இன்னும் பெரிய படைத் தொகையினருக்காக செலவிடுகின்றோம்.

இதேவேளை எமது மாவட்டத்தில் ராணுவ முகாம்கள் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் திருப்தியடையும் அளவுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது மாநகர சபை உறுப்பினர் பிரேமாநந்தன் கல்லடி பிரதேசத்தில் உள்ள பாதை திறப்பது தொடர்பில் மாநகர சபையில் பிரேரணை முன்வைத்து அதற்கு அனுமதி பெறப்பட்டு அது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடற்படை, பொலிஸ் பயிற்சி கல்லூரியுடன் இராணுவ முகாம் உள்ளது. அங்கு 600 மீற்றர் நீளமான பாதை உள்ளது. அந்த பாதையை திறந்து தந்தால் கல்லடி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம். இதனால் இந்த பாதையை திறந்து தருமாறு கோருகின்றேன்.

இதேவேளை கடந்த இரண்டு வருடங்களாக மட்டக்களப்பில் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வீதியை விடுவித்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அந்த வீதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை. அது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன்.

வவுனியா ஈச்சன்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி சக பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார். வீதியில் இருந்தே உறவினர்கள் இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்த வேண்டியிருந்தது. இதனை இந்த வருடத்திற்குள் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இதேவேளை பலாலி, வசாவிளான், மயிலிட்டி, கேப்பாபிலவு மக்கள் தனியார் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக வீதியில் போராடுகின்றனர். பாடசாலைகள், மதஸ்தலங்களின் காணிகள் அங்கு உள்ளன அவை விடுவிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பல காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இவற்றை விடுவிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *