இலங்கை

பிரபாகரனின் படத்துடன் நினைவேந்தல்: மன்னாரில் மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை நினைவேந்தல் நிகழ்வுகளின்போது காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

கடந்த ஒரு வாரமாக வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொலிஸார் கண்காணித்து வந்ததாகவும், தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு அல்லது தெற்கு என எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாடுகளில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சிலவற்றைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அவை இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகள் எனத் தவறாகச் சித்தரிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை, மன்னாரில் கைது செய்யப்பட்ட மூவரை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சபையில் இன்று கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *