திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம்; இன்று தீபம் ஏற்ற வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை இன்று (நவம்பர் 28) ஏற்ற வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த இருபதாம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆனால் கார்த்திகை தீப திருநாளான கடந்த 24 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர்- இந்து சமய அறநிலைத்துறை ஆணையர்- மதுரை மாநகர காவல் ஆணையர்- ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், காலம் கடந்தாலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் ராம ரவிக்குமார் – இந்து தர்ம பரிஷத் அமைப்பு ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் அரவிந்த் குமார்- விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர்- இந்து சமய அறநிலைத்துறை ஆணையர்- மனுதாரர் -ஆகிய தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதி அரசர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதில் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தது கடுமையான வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற சூழல்களை இரும்பு கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் இது அரசியல் அமைப்பு சீர்குலைவிற்கு வழி வகுக்கும்.
எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும் நீதித்துறையை மாசுபடுத்தும்- அவமதிக்கும் எந்த ஒரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த நீதிமன்றத்தின் உத்தரவு என்பது.. தமிழக அரசுடன் பேச்சு வார்த்தைக்கான அழைப்பு அல்ல.
அது மாநில அரசையும், அதன் அதிகாரிகளையும் மாநில சட்டத்தின் கீழ் செயல்படும் ஒவ்வொரு சட்டபூர்வ அல்லது மத நிறுவனத்தையும் கட்டுப்படுத்தும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் அறங்காவலர் குழு செயல்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவை கறைப்படுத்தும் நோக்கமாகவே அவதானிக்கப்படுகிறது.
நவம்பர் 20ஆம் திகதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் நிர்வாக குழப்பம் எழுந்துள்ளதை இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
கோவில் அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இது ஒரு கடுமையான அவமதிப்பாகும். அறங்காவலரின் நடவடிக்கைக்கு மற்ற அதிகாரிகளும் துணை நின்றுள்ளனர். எனவே கோவில் அறங்காவலர் குழு மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு அறங்காவலர் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான பழியை முழுவதுமாக கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயற்சித்துள்ளார். எனவே அந்த அறிக்கையையும் நிராகரிக்கிறோம்.
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்- அது தொடர்பான ஆவணங்கள்- மின்னஞ்சல்கள்- தொலைபேசி உரையாடல் விவரங்கள்- அனைத்தையும் தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்வதுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
ஆலய அறங்காவலர் குழு கலைக்கப்படுகிறது. கோவிலை நிர்வகிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதி அரசர்கள் வைத்தியநாதன்- வி. பார்த்திபன் தலைமையில் கோவில் நிர்வாக குழுவை அமைக்கிறோம். அறங்காவலர் குழுவிடமிருந்து கோயில் நிர்வாகத்தை இருவரும் உடனடியாக தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழு பகுதியையும் சி ஆர் பி எஃப் எனப்படும் மத்திய தொழில் படை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். கடந்த 24ஆம் திகதி உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துக்கொண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலலயில் ஒவ்வொரு பக்தரும் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும். தர்காவுக்கும் உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும். அங்கு நடைபெறும் செயல்களில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. தர்கா மற்றும் கோயில் பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக அந்தப் பகுதியில் வேலி அமைக்கலாம் ” என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால்.. முருக பக்தர்கள் மற்றும் இந்து மக்களிடத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
![]()