இலங்கை

செம்மணிப் புதைகுழி இடைக்கால அறிக்கை;, ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடத்தவும்; பல விடயங்கள் மறைப்பு

செம்மணி மனிதப்புதைகுழி இடைக்கால அறிக்கை தொடர்பில் அதனை அறிக்கையிட்டு தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும்.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை உள்நோக்கம்கொண்டது , செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்ற விதமாக குறித்த அறிக்கை புனையப்பட்டுள்ளது என வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சின்மீதான 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என் ஒலியுறுத்திய ரவிகரன் எம்.பி மேலும் பேசுகையில்,

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தமாக 110நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி, அகழ்வாய்வுத் தளம் ஒன்றிலிருந்து 574 மனித என்புத் தொகுதிகளும், அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து 9மனித என்புத் தொகுதிகளுமாக மொத்தம் 583 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.அந்தவகையில் குறித்த அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுத்த தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ்சோமதேவ, செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக இதுவரை 4இடைக்கால அறிக்கைகளை நீதிமன்றிற்குச் சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் ராஜ் சோமதேவ கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்த செம்மணி மனிதப் புதைகுழிதொடர்பான 4ஆவது இடைக்கால அறிக்கை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.குறித்த நான்காவது இடைக்கால அறிக்கையில் பலவிடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாரிய மனிதப் புதைகுழி, புதைகுழி அடையாளங்காணப்பட்ட பகுதி குற்றப்பிரதேசம், அங்கு வன்முறையான சூழலில், அவசர அவசரமாக உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. என முதல் மூன்று அறிக்கையிலும் இருந்த விடயங்கள் நான்காவது இடைக்கால அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு அகழ்வாய்வுகளின்போது ஆட்லெறி பெரல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இருப்பினும் அறிக்கையில் அதுதொடர்பில் எந்தத் தகவலும் இல்லை.சான்றுப்பொருட்களை வைத்து என்புத் தொகுதிகளின் காலம் கணிக்கப்படும் என்பதற்காக மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களான ஒற்றை இறப்பர் காலணி தொடர்பான தகவல்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.அதேவேளை 1991,1994, 1995, 1996 ஆம் ஆண்டுகளுக்குரிய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அறிக்கையில் தவிர்க்கப்பட்டிருந்தன. மேலும் சில விடயங்கள் திரித்து அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் 55 என இலக்கமிடப்பட்டுள்ள என்புத்தொகுதிபற்றி முன்னர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கால்கள் மடக்கியபடி கழுத்து என்பு மேல்நோக்கி இருப்பதாக உள்ளது. ஆனால் நான்காவது இடைக்கால அறிக்கையில் நேர்த்தியாகப் புதைக்கப்பட்டுள்ளதாக திரித்துக் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு நம்பகத் தன்மையற்ற உறுதிப்படுத்தப்பாடாத விடயங்கள் புனையப்பட்டும் அறிக்கைப் படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இயற்கை அனர்த்தம், தொற்று நோயால் புதைக்கப்பட்டிருக்கலாம் என 4 ஆவது இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வைத்தியசாலை, பிரதேசசெயலகங்கள், சுகாதாரத் திணைக்களங்களின் தரவுகள் எவற்றையும் அறிக்கைப்படுத்தவில்லை.

இதுதவிர ராஜ் சோமதேவ அறிக்கையிடலில் சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக 1995 – 2010ஆம் ஆண்டுவரை செம்மணியில் இராணுவ முகாம்கள் இருந்தபோது 600இற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக 54ஆட்கொணர்வு மனுக்கள் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு, அவர்கள் இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என அறிவிக்கப்பட்டது அதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. அத்தோடு மண்மாதிரி ஆய்வுகள் கவனத்தில்கொள்ளப்படவில்லை.

அதேவேளை தனது நிபுணத்துவத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் தொடர்பாக அறிக்கைப்படுத்தியுள்ளார்.குறிப்பாக சட்டவைத்திய அதிகாரி தெரிவிக்கவேண்டிய கருத்தை ராஜ் சோமதேவ இவ்வறிக்கையில் அறிக்கைப்படுத்தியுள்ளார்.இவ்வாறாக ராஜ் சோமதேவவினது 4 ஆவது இடைக்கால அறிக்கையில் பாரிய குளறுபடிகள் காணப்படுகின்றன.

இவ்வறிக்கைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்படோரது உறவுகள் கடுமையான எதிர்புக்களை வெளியிட்டிருந்தனர்.

அதேபோல் இந்த அறிக்கைக்கு சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேல், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி சுகாஷ் மற்றும் மிராக் ரஹீம் ஆகியோரும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி வழங்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த 21.11.2026அன்று தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

இருப்பினும் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த 4ஆவது இடைக்கால அறிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவே பார்க்கமுடிகின்றது. திட்டமிட்டு உண்மைகளை மறைப்பதற்கே அவரால் இவ்வாறானதொரு அறிக்கை புனையப்பட்டிருப்பதாகவே கருதமுடிகின்றது.

அவரது அறிக்கை வெறுமனே அகழ்வாராய்சி அறிக்கையாக இருந்தாலும். இந்த அறிக்கை நிராகரிக்கப்படவேண்டும்.ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள இத்தயை சர்ச்சைக்குரிய, பாதகமான அறிக்கை தொடர்பில் அவரிடம் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவருக்கெதிராக உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும்.அத்தோடு செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் முழுமையாக சர்வதேச நிபுணத்துவம் பின்பற்றப்படுவதுடன், முழுமையான சர்வதேச மேற்பார்வை தேவை எனவும் கோருகின்றேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *