பலதும் பத்தும்

’நான்கு மார்பகங்கள்’ : நரக வேதனையில் ஒரு வாழ்வு

மார்பெலும்பு உள்நோக்கி வளைந்து பள்ளம் உருவாகும் ‘பெக்டஸ் எக்ஸ்கவேட்டம்’ (Pectus Excavatum) எனப்படும் பிறவிக் குறைபாட்டுடன் வாழ்ந்து வரும் 26 வயது சார்லி கிளார்க், தாம் அனுபவித்த உடல் மற்றும் மனரீதியான துயரங்களை வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

பதின்ம வயதில் சீருடை அணிவதே பெரும் சவாலாக இருந்ததாகவும், சக மாணவர்களின் கேலிக்கு அஞ்சி விளையாட்டு நேரங்களில் கழிப்பறையில் ஒளிந்துகொண்ட நாட்கள் கசப்பானவை என்றும் அவர் குறிப்பிட்டார். வீட்டில்கூடத் தனது உடலமைப்பு வெளியே தெரியாதவாறு இறுக்கமான ஆடைகளை அணிந்து வந்த சார்லி, ஆரம்பத்தில் பெற்றோரிடமும் இதனைக் கூறத் தயங்கியுள்ளார்.

இருநூறு பேரில் ஒருவரைப் பாதிக்கும் இக்குறைபாடு, இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி மூச்சுத்திணறல், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகளை உருவாக்கக் கூடியது. வடக்கு அயர்லாந்தில் இக்குறைபாட்டிற்கான அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சுமார் 85 பேரில் சார்லியும் ஒருவர்; பலர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலும், ஐந்து பேர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் காத்திருக்கும் அவல நிலை அங்கு நிலவுகிறது. முன்பு தமக்குப் பதற்றக் கோளாறு இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்ட நிலையில், 23 வயதைக் கடந்த பின்னரே உரிய அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரைக்கப்பட்டதாக சார்லி தெரிவித்தார்.

இதே குறைபாட்டால் சிறுவயதில் பாதிக்கப்பட்டு, 17ஆவது வயதில் அறுவை சிகிச்சை செய்த மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் நியால் மெக்கோனிகல், இப்பாதிப்பை வெறும் அழகு சார்ந்த பிரச்சினையாகக் கருதுவது தவறானது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதய மற்றும் நுரையீரல் செயல்பாட்டை இது கடுமையாகப் பாதிக்கும் என்பதையும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை அல்லாத முறைகளில் தீர்வு காண முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

போதிய நிதி மற்றும் சிகிச்சை வசதிகள் இல்லாததால் பல இளைஞர்கள் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சார்லிக்கு விரைவில் நடைபெறவுள்ள அறுவை சிகிச்சையில், அவரது மார்புக்கூட்டில் இரண்டு உலோகக் கம்பிகளும் மார்பெலும்பில் ஓர் உலோகத் தகடும் பொருத்தப்பட்டு இதய, நுரையீரல் அழுத்தம் சீர்செய்யப்படவுள்ளது.

சுகாதாரத்துறை காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கச் சிறப்பு நிதி மற்றும் புதிய திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த போதிலும், தமது 11 வயதுத் தங்கை உள்ளிட்ட மற்றவர்களுக்குப் பாதிப்புகள் தீவிரமாவதற்கு முன்பே உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளதாக சார்லி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *