65 நாட்கள் துருவ இரவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரில், நவம்பர் மாதத்தின் மத்தியில் மறைந்த சூரியன் மீண்டும் 2027 ஜனவரி 22ஆம் திகதிதான் உதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 65 நாட்கள் தொடர்ச்சியாகச் சூரிய உதயமின்றி ‘துருவ இரவு’ (Polar Night) எனப்படும் இந்நிகழ்வு அங்கு இடம்பெற்று வருகிறது.
முன்னர் ‘பாரோ’ (Barrow) என அழைக்கப்பட்ட இந்நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே சுமார் 520 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள் வாழும் இப்பகுதியில் ‘இனுபியாட்’ (Iñupiat) பழங்குடியினச் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். பூமியின் அச்சு 23.5 பாகை சாய்ந்திருப்பதால், வட அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் போது சூரிய ஒளி அடிவானத்திற்கு மேலே வருவதில்லை என விஞ்ஞான ரீதியாகக் குறிப்பிடப்படுகிறது.

65 நாட்கள் சூரியன் தென்படாவிட்டாலும், பகல் நேரத்தில் சுமார் 3 முதல் 6 மணி நேரம் வரை ‘சிவில் அந்தி ஒளி’ (Civil Twilight) எனப்படும் மங்கலான நீல நிற வெளிச்சம் காணப்படும். தரைவழிப் போக்குவரத்து வசதியற்ற இந்நகருக்கு விமானம் அல்லது கோடையில் கப்பல்கள் மூலமே பயணிக்க முடியும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏனைய பகுதிகளைவிடப் பல மடங்கு அதிகமாகவுள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 20 முதல் மைனஸ் 30 பாகை செல்சியஸ் வரை குறையும் போதிலும், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகள் வழமைபோல் இயங்குகின்றன.
சூரிய ஒளியின்மையால் உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படுதல், வைட்டமின் D குறைபாடு மற்றும் பருவகால மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், சிறப்பு விளக்குகள் மற்றும் சமூகக் கூடுகைகள் மூலம் மக்கள் அதனை எதிர்கொள்கின்றனர். மேலும், 1973ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் NOAA நிறுவனம் இங்கு வளிமண்டல ஆய்வு மையத்தை நடத்தி வருவதுடன், காலநிலை மாற்றங்களைக் கண்காணிக்கவும் இது முக்கியத் தளமாகத் திகழ்கிறது.
மறுபுறம், மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாதத் தொடக்கம் வரை சுமார் 80 நாட்களுக்கும் மேலாகச் சூரியன் மறையாமல் ‘நள்ளிரவுச் சூரியன்’ (Midnight Sun) எனும் நிகழ்வும் இந்நகரில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
![]()