எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு…?

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கான முழு ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது பதவியை இன்று அல்லது நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ராஜினாமா செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா செய்த பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கைது நடவடிக்கை இருக்கும் எனக் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றும் பெண் கலெக்டர் ஒருவர். கடந்த மே மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு கள்ளக்குறிச்சி (தனி) த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ், தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கலெக்டரின் கணவரான ஷேக் அப்துல்ரஹ்மான் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட பொலிஸ் கட்டிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இதனிடையே எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் கலெக்டருக்கு தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் கடந்த 8-ந்தேதி முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வைரலானது.
இருப்பினும் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டருக்கு அதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பவில்லை என தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ.வும் மறுப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். அதே சமயம், கலெக்டர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.
இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கடந்த 15-ந்தேதி கையில் எடுத்து, நியாயமான மற்றும் பாரபட்ச மற்ற விசாரணையை டி.ஜி.பி. நடத்த வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதற்கிடையே கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி., கள்ளக்குறிச்சி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க. வக்கீல் திரி சூலு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளை கேட்டு விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ் நேரில் சென்றார். எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய அவர், மாவட்ட கலெக்டரிடமிருந்து புகாரை எழுத்துப்பூர்வமாக பெற்றார்.
பின்னர் அந்த புகாரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷக்னாஸ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கள்ளக் குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட கலெக்டருக்கு நீதி கிடைக்கும் வரை, இந்த வழக்கு தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடக்கூடாது. இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக விசாரித்து வருகிற டிசம்பர் 22-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
![]()