இலங்கை

மக்களின் நெருக்கடிகளை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்

இலங்கையில் அமைதி மற்றும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கான ‘சமூக உரையாடல்’ (Social Dialogue) திட்டத்தின் ஊடாக, ஊழியர்கள் மற்றும் சமூகத்தினர் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தீர்மானங்களை வடிவமைப்பதில் பங்களிப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தெற்காசியாவில் அரச துறை உரையாடலுக்கான முதலாவது தேசியக் கட்டமைப்பை நிறுவி, அரச சேவையில் சமூக உரையாடல் தொடர்பான பிரகடனமொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கூட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார மீள் எழுச்சிச் செயற்பாடுகளின் போது அதிகரித்த வரிகள் மற்றும் பொருட்களின் விலைகள், கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைந்தமை மற்றும் தொடர்ச்சியாக நிலவிய வறுமை ஆகியவற்றின் காரணமாகக் குடும்பங்கள் மீது ஏற்பட்ட அழுத்தம் தொடர்ந்தும் நிலவுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உரையாடலின் ஊடாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மோதல்கள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீள் எழுச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்தத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம், தொழில் வழங்குநர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகம் ஆகியோர் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

நாட்டின் பொருளாதார மீள் எழுச்சியின் ஊடாகச் சிறந்த அரச சேவை, பணியிடங்களில் நியாயமான சூழல் மற்றும் தமது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள மக்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

 

பிரச்சினைகள் தீவிரமடைந்து பிளவுகளாக மாறுவதற்கு முன்னர் அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்காக மக்களை ஒன்றிணைத்து உரையாடலொன்றை ஏற்படுத்த வேண்டும் என அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 

மக்களுக்குச் செவிசாய்ப்பதோடு நின்றுவிடாமல், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதே பொறுப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *