உலகம்

பரபரப்பாகிறது பங்களாதேஷ்: டிசம்பர் 16 தாயகம் திரும்புகிறார் ஷேக் ஹசீனா

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ள அவர், பங்களாதேஷின் வெற்றி தினமான டிசம்பர் 16ஆம் திகதி டாக்காவுக்குத் திரும்ப விரும்புவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக இந்தியாவின் டெல்லியிலிருந்து டாக்காவுக்குச் செல்வதற்கு பங்களாதேஷின் தேசிய விமான சேவையான பிமான் பங்களாதேஷ் எயார்லைன்ஸ் (Biman Bangladesh Airlines) விமானத்தை ஏற்பாடு செய்து தருமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி, ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அப்போது பங்களாதேஷ் விமானம் மூலம் அவர் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவரது பேச்சாளர் சையத் மொஸம்மல் அலி தெரிவித்துள்ளார்.

அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வது பங்களாதேஷ் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவரது பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், ஷேக் ஹசீனா நாடு திரும்புவதற்கு விமானத்தை ஏற்பாடு செய்து கொடுக்க முடியாது என பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர் நாடு திரும்ப வேண்டுமாயின் இந்தியாவுடனான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஊடாகவே திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அந்நாட்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமாயுன் கபீர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாணவர் போராட்டத்தை ஒடுக்குவதற்கு உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்திருந்தது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களின்போது சுமார் 1,400 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்புவதற்கான முயற்சி பங்களாதேஷில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான பதற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *