இந்தியா

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட தீபம்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்குப் பதிலாக, வழக்கமான தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினரைக் பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத் திருநாளான இன்று (24) மாலை, திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் வழக்கம் போல கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டதாக தமிழக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நவம்பர் 20ஆம் திகதி இந்திய உச்சநீதிமன்றம் ஒருமுறை சிறப்பு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு, இந்த ஏற்பாடு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு அல்லது நிரந்தர உரிமைகோரலுக்கு எந்த வகையிலும் முன்னோடியாக அமையாது எனத் தெளிவுபடுத்தியிருந்தது.

மேலும், தேவஸ்தானம் அனுமதிக்கும் குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும், பொதுமக்கள் பங்கேற்கவோ, ஊர்வலங்கள் அல்லது முழக்கங்கள் எழுப்பவோ அனுமதி இல்லை எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியரை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்த நீதிமன்றம், விழா முடிந்த மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மறுஆய்வு மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆஜரான மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம், உச்சநீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் கடுமையான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்களுக்குத் தடை, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை 2027 ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *