எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமலுக்கு டிசம்பர் 2 வரை விளக்கமறியல்!

சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் (19) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதன் பின்னர், சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டாம் என அவரது சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணைகளின் முடிவில் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட மொத்தத் தொகையில் 100 மில்லியன் ரூபாவைத் தன்னகத்தே வைத்திருந்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வழக்கின் முதலாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
அத்துடன், இரண்டாவது பிரதிவாதியாக ஷமிந்திர ராஜபக்ஷவும், மூன்றாவது பிரதிவாதியாக ‘பிஸ் சொல்யூஷன்’ (Biz Solution) நிறுவனமும், நான்காவது பிரதிவாதியாகப் பிரியங்கா நியோமாலியும் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கைகள் தலைமை நீதிபதி பிரியந்த லியனகே, திலகரத்ன பண்டார மற்றும் தம்மிக்க திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாமல் ராஜபக்ஷவின் பாரியார் லிமினி ராஜபக்ஷவும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதிலும், ஏனைய சந்தேகநபர்களான ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா நியோமாலி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த முறைப்பாட்டாளர் தரப்பு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, நீதிமன்றத்தில் ஆஜராகாத குறித்த இரண்டு பிரதிவாதிகளும் இன்றி வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலையான சந்தேகநபர் நாமல் ராஜபக்ஷவுக்கு குற்றப்பத்திரிகை மற்றும் அதனுடன் தொடர்புடைய இணைப்பு ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
![]()